15 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்று அதற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராஜங்க அமைச்சர் வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று (10) உத்தரவிட்டுள்ளார்.
தனது தரப்பினர் சுமார் 1 1/2 மாதங்களாக விளக்கமறியலில் உள்ளதால், சந்தேகநபர்கள் இருவர் சார்பாக வாதிட்ட ஜனாதிபதியின் சட்டத்தரணி யூ.ஆர். டி சில்வா மற்றும் சட்டத்தரணி அன்டன் சேனாநாயக்க ஆகியோர் நீதிமன்றில் பிணைக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்த புலனாய்வாளர்கள், பிணை வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவதற்கு இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் தமது நீதிமன்றத்திற்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டிய பிரதான நீதவான் பிணை கோரிக்கையை நிராகரித்தார்.
லஞ்சக் கோரிக்கை தொடர்பாக தமது ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த முறைப்பாட்டாளருக்கு மணல் அகழ்வு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு தயார்படுத்தப்பட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது இராஜாங்க அமைச்சர் அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அத்துடன், இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரான இரண்டாவது சந்தேகநபர் கைது செய்யப்படுவதற்காக இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, அவரது ஆதரவாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களால் பாரியளவில் இடையூறுக்கு உள்ளானதாக விசாரணையாளர்கள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இராஜாங்க அமைச்சர் செல்வாக்கு செலுத்தியிருந்தால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது விசாரணை அதிகாரிகளின் பொறுப்பு எனவும், அவருக்கு பதிலாக தமது கட்சிக்காரர்களை காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
பிணை வழங்குவதற்கு சந்தேகநபர்கள் தேவையான உண்மைகளை முன்வைக்க வேண்டும் என பிரதான நீதவான் திலின கமகே சந்தேக நபர்களின் சட்டத்தரணிகளிடம் தெரிவித்தார்.