அடிக்கடி சர்ச்சைகளை தோற்றுவிக்கும் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் ஆதாரமற்ற அவதூறுகளை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாதென கண்டிப்பாக தெரிவித்த சாவகச்சேரி நீதிமன்ற நீதவான், அவருக்கு எதிராக 14 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்குமாறு சாவகச்சேரி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகராக செயற்பட்ட சமயத்தில், அர்ச்சுனா ஏற்படுத்திய குழப்பங்கள், பேஸ்புக் நேரலையில் பரப்பிய அவதூறுகள் தொடர்பான வழக்குகள் இன்று (11) சாவகச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
ஏனைய வைத்தியர்களுக்கு எதிராக அர்ச்சுனா பரப்பிய அவதூறுகளுக்கான ஆதாரங்களை முன்வைக்குமாறு நீதிமன்றம் ஏற்கெனவே 3 முறை அவருக்கு சந்தர்ப்பம் வழங்கியிருந்தது. இன்று 4வது தவணை.
சாவகச்சேரி வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு உள்ள அவதூறுகளை பரப்பியது தொடர்பான வழக்கு முதலில் எடுக்கப்பட்ட போது, அர்ச்சுனா தரப்பு சில ஆவணங்களை சமர்ப்பித்து, தமது குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் என தெரிவித்தனர்.
எனினும், அவற்றை நீதவான் நிராகரித்தார். அர்ச்சுனா பரப்பிய தகவல்களுக்கான ஆதாரங்களாக அவற்றை கொள்ள முடியாதென தெரிவித்தார்.
அர்ச்சுனா இராமநாதனினால் தினம் தினம் பிரச்சினைகள் உருவாகுவதாகவும், அவரால் பொலிசாருக்கு தேவையற்ற நெருக்கடி ஏற்படுவதாகவும் பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
ஆதாரமில்லாமல் இப்படி பேசிக்கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது என கண்டிப்பாக குறப்பிட்ட நீதவான், அர்ச்சுனாவுக்கு வழங்கப்பட்ட 4 தவணைகளிலும் ஆதாரங்களை முன்வைக்கவில்லையென்பதை குறிப்பிட்டு, அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை அடுத்த 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்க சாவகச்சேரி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
இதேவேளை, இந்த வழக்கில் அர்ச்சுனாவுக்கு பிணை கையெழுத்திட்ட 3 பேரும், வழக்கு நடந்து கொண்டிருந்த போது கையை உயர்த்தினர். அவர்களின் கருத்தை நீதவான் கேட்டபோது, அர்ச்சுனாவுக்கு பிணை கையெழுத்திட்டதிலிருந்து விலகுவதாக தெரிவித்தனர்.
இதனை அர்ச்சுனாவிடம் தெரிவித்தீர்களா என அவர்களிடம் நீதவான் வினவினார். இல்லையென பதிலளித்த அவர்கள், இந்த விவரத்தை அர்ச்சுனாவிடம் முன்னரே கூறினால் அவர் நீதிமன்றத்துக்கு வருவதை தவிர்த்து விடுவார் என்ற அச்சத்தில் குறிப்பிடவில்லையென்றனர்.
வழக்கு எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் பிணையாளிகள் மூவரையும் மன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டதுடன், 3 புதிய பிணையாளிகளை அழைத்து வருமாறு வைத்தியர் அர்ச்சுனாவுக்கு உத்தரவிடப்பட்டது.