நடிகர் ரஜினிகாந்த் தனக்கு போன் பேசிய சம்பவம் குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் லிங்குசாமி. தான் தயாரித்த ‘உத்தம வில்லன்’ தோல்வியால் ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்து வருகிறார் இயக்குநர் லிங்குசாமி. அவருடைய தயாரிப்பில் உருவான ‘இடம் பொருள் ஏவல்’ இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பிவிபி நிறுவனம் – திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இடையே வழக்கு ஒன்று நடைபெற்று வந்தது.
பிவிபி நிறுவனத்திடம் இருந்து வாங்கிய பணத்துக்காக கொடுத்த காசோலை பவுன்ஸ் ஆனதால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதன் தீர்ப்பில் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறைத் தண்டனையை உறுதி செய்தது சைதாப்பேட்டை நீதிமன்றம். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் லிங்குசாமி. அங்கும் இந்த தீர்ப்பினை உறுதி செய்தார்கள்.
இந்தத் தீர்ப்பு வந்த சமயத்தில் ரஜினி தன்னை தொடர்பு கொண்டு பேசியதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருக்கிறார் லிங்குசாமி. அதில், “சமீபத்தில் வழக்கு ஒன்று தொடர்பாக நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வந்தது. அப்போது ரஜினி சார் தொலைபேசியில் அழைத்தார். “நான் ஏதாவது செய்யணுமா? என்ன விவரம் அதை முடித்துவிடுவோமா? எவ்வளவு இருக்கும்.” என்று கேட்டார்.
ஒன்றும் பிரச்சினையில்லை சார், நான் பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்தேன். அப்படியொரு வார்த்தையை ரஜினி சார் கேட்பார் என எதிர்பார்க்கவே இல்லை. விசாரிக்கலாம் தவறில்லை, ஆனால் என்னவென்று சொல்லுங்கள், கொடுத்துவிடுவோம் என கூறியது மிகப் பெரிய விஷயம்” என்று தெரிவித்துள்ளார்.