ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையை ஆற்றிய அவர், ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடுவதில் தனக்கு விருப்பமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
“இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். ஒரு பக்கம் எங்களின் மாபெரும் தாய்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.
எங்கள் தாய்க் கட்சியின் தலைவர், முன்னாள் துணைத் தலைவர் இருவரும் அரசியல் எதிரிகளாகிவிட்டனர்.
இவர்கள் இருவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர். இப்படிப்பட்ட நேரத்தில் அனைவரும் ஒன்று சேர முயலும் வேளையில், எங்கள் முகாமைப் பிரிந்து இருவருடன் போட்டியிடும் முடிவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இரு தலைவர்களும் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடும் முடிவு சுயநல நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் எடுக்கப்பட்ட அரசியல் முடிவு என்று நான் நம்புகிறேன்.
எதிர்காலத்தில் வரலாறு அதை நிரூபிக்கும். அதைப்பற்றி நான் மௌனம் சாதித்தால் அந்த பாவத்திற்கு மறைமுகமாக நானும் பங்களிப்பவன் ஆகிவிடுவேன்.
எனவே, மிக முக்கியமான இந்த விஷயத்தில் உடனடியாக முடிவெடுக்க வேண்டும்.
இது இரத்தினபுரி மக்களுக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கும் எதிரான முடிவாக இருக்கக்கூடாது என்பதும் எனது நம்பிக்கையாகும்“ என்றார்.
தலதா அத்துகோரள ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய புள்ளியாக இருந்த காமினி அத்துகோரளவின் சகோதரி ஆவார்.
அவர் 2004 இல் முதன்முதலில் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், 2010, 2015 மற்றும் 2020 பொதுத் தேர்தல்களில், அவர் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2020 இல், அவர் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 45,105 வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.