சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்ற மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதல் முன்னுரிமையாகும் என தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொடவில் நடைபெற்ற பேரணியில் பேசிய அவர், நாட்டின் வருவாயை உயர்த்தும் திட்டங்களுடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றும் என்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மோசடி மற்றும் ஊழலை நிறுத்தும் என்றும் கூறினார்.
ரூ. 1,100 பில்லியன் வரிகள் பல்வேறு நபர்களால் திருப்பிச் செலுத்தப்படவில்லையென்றார்.
“குறைந்தபட்சம் ரூ.169 பில்லியனை ஆரம்பத்தில் எந்த பிரச்சனையும் இன்றி மீட்டெடுக்க முடியும். மீதமுள்ளவை தொடர்பாக சில நீதிமன்ற வழக்குகள் உள்ளன. சிலர் வரி செலுத்துவதற்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்கிறார்கள், நீதிமன்ற தீர்ப்புகளுக்குப் பிறகு அவர்கள் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அதே தொகையை செலுத்துகிறார்கள். நாங்கள் சட்டங்களை திருத்துவோம். நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு வரித் தொகையை வட்டியுடன் வசூலிக்க வேண்டும்,” என்றார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் IMF உடன் வரி நிவாரணம் குறித்து விவாதங்களில் ஈடுபடும் என்று கூறிய அவர், நீங்கள் சம்பாதித்தவுடன் செலுத்தும் (PAYE) வரி வரம்பு 100,000 ரூபாயில் இருந்து ரூ. 200,000 ஆக உயர்த்தப்படும் என்றார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 10,000 வழங்கப்படும் என்றார்.
அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் அமைச்சரவை 25 ஆக மட்டுப்படுத்தப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர்கள் இருக்க மாட்டார்கள் என்றும் திஸாநாயக்க கூறினார்.
“அறிவியல் அடிப்படையில் அமைச்சுக்களை ஒதுக்குவோம்” என்று அவர் மேலும் கூறினார்.
முன்னைய நல்லாட்சிக்காலத்தில் இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடி நடைபெற்றது. இலங்கையின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்றாக அது கருதப்படுகிறது. அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழிருந்த ஐ.தே.க பிரமுகர்கள் பலர் அதில் சிக்கியிருந்தனர். அப்போதைய மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன், அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பராவார். அவர் நாட்டை விட்டு தப்பிச்செல்ல அரசாங்கம் உதவியதாக அப்போது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.