வருங்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது முதல் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மருந்துகள், பாடசாலை பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான வட் வரியை நீக்கும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தங்காலையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் அங்குரார்ப்பண பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மதுபான உற்பத்தியாளர்கள் போன்ற வர்த்தகர்கள் செலுத்த தவறிய வரியை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை எளிமைப்படுத்தப்பட்ட வரி முறை அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
“மருந்துகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மீதான வட் வரியை நீக்குவோம். பாடசாலைப் பொருட்கள் மற்றும் கூடுதல் வாசிப்புப் புத்தகங்கள் மீதான வட் நீக்கப்படும். அதே நேரத்தில் உணவுப் பொருட்களுக்கான வட் வரியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய மக்கள் சக்தி அரசின் முதல் பட்ஜெட்டில் இதைச் செய்வோம்” என்றார்.
அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியடைந்துள்ள ஒரு நாட்டை தேசிய மக்கள் சக்தி கையகப்படுத்த வேண்டும் என்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியுடன் நாட்டை மீட்கும் என்றும் திஸாநாயக்க கூறினார்.
தேசிய மக்கள் சக்தி யாரையும் பழிவாங்கப் போவதில்லை என்றும், எனினும், தவறு செய்பவர்கள் மற்றும் மோசடி மற்றும் ஊழலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மோசடி, ஊழலை ஒழிப்போம், திருடப்பட்ட சொத்துக்களை கையகப்படுத்துவோம் என்றார்.