இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது இலங்கை.
இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் சமனிலையில் முடிவடைந்தது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி மற்றும் 3வது ஆட்டம் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று பிற்பகல் தொடங்கியது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இலங்கை 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் சேர்த்தது. அவிஷ்க பெர்னான்டோ 96 ரன்களையும், குசல் மென்டிஸ் 59 ரன்களையும் பெற்றனர்.
இதையடுத்து 249 என்ற வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் 5ஆவது ஓவரில் போல்டாகி 6 ரன்களுடன் வெளியேறினார். அடுத்து ரோஹித் – கோலி இணை கைகோத்தது. ஆனால் 8 ஆவது ஓவரில் ரோஹித் 35 ரன்களுக்கு விக்கெட்டானார். தொடர்ந்து ரிஷப் பந்து 6 ரன்கள், விராட் கோலி 20 ரன்கள், அக்சர் படேல் 2, ஷ்ரேயாஸ் ஐயர் 8 என வீரர்கள் நிலைக்காமல் போகவே 15 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 96 ரன்களைச் சேர்த்திருந்தது.
அதன் பின்பும் ரியான் பிராக் 15 ரன்கள், ஷிவம் துபே 9 ரன்கள் என சோகம் தொடர, வாஷிங்டன் சுந்தர் மட்டும் நிலைத்து ஆடி ரன்களைச் சேர்க்க முயற்சித்தார். அவரும் 26 ஆவது ஓவரில் அவுட்டாக, தொடர்ந்து குல்தீப் யாதவ் 6 ரன்களில் எல்பிடபள்யூ முறையில் வெளியேற 26.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 138 ரன்களுக்குள் சுருண்டது.
இதன் மூலம் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. இலங்கை அணி இந்தியாவுக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லாலகே அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்சன, ஜெஃப்ரி வாண்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அசிஷ்த பெர்னான்டோ 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
27 ஆண்டுகளுக்குப் பிறகான வெற்றி
கடைசியாக 1997ஆம் ஆண்டு நடைபெற்ற இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணியிடம் 0-3 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. அதன் பிறகு 27 ஆண்டுகள் கழித்து ஒருநாள் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியுள்ளது. இந்தக்காலப்பகுதியில் இலங்கை அணி, இந்தியாவுக்கு எதிராக 13 முறை இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடி உள்ளது. இதில் 2 ஆட்டங்கள் சமனிலையில் முடிந்தன. 11 ஆட்டங்களில் இந்தியா வென்றது.