வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றினால் கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதையடுத்து, வைத்தியசாலை நிர்வாகம் அவருக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கடந்த சனிக்கிழமை வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து, 07ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், கையில் விலங்கிடப்பட்ட நிலையில், வைத்தியர் அர்ச்சுனா இன்று நீதிமன்றம் அழைத்துவரப்பட்டிருந்தார்.
அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், அர்ச்சுனாவுக்கு பிணை கோரி விண்ணப்பித்திருந்தனர். அர்ச்சுனா மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தது தவறான நடத்தையென்பதை ஏற்றுக்கொண்டதுடன், பிணையில் விடுவிக்கப்பட்டால் அர்ச்சுனா கண்டிக்கு சென்று விடுவார் என்றும் மன்றில் தெரிவித்தனர்.
இதையடுத்து, கடுமையான நிபந்தனைகளுடன் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டார். இருவரின் சரீரப்பிணையில்- அதில் ஒருவர் உறவினராக இருக்க வேண்டும்- விடுவிக்கப்பட்டார்.
அத்துடன், சமூக ஊடகங்களின் வாயிலாக சுகாதார கட்டமைப்புக்கு எதிராக தவறான பிரச்சாரங்களை செய்து, மக்களை அணிதிரட்டுவதற்கும் தடைவிதிக்கப்பட்டது.
அர்ச்சுனாவின் கையடக்க தொலைபேசியை ஆராய்ந்து, மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்ததற்கான ஆதாரங்கள் காணப்பட்டால் அதை வழக்கின் சான்றாக முன்வைக்க உத்தரவிடப்பட்டது.
சாவக்சேரி நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளின்படி வைத்தியசாலைகளுக்குள் அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுபடவும் தடைவிதிக்கப்பட்டது.
அத்துடன், அர்ச்சுனா விளக்கமறியலில் வைக்கப்பட்டதை தொடர்ந்து, இனரீதியான மோசமான கருத்துக்கள் பரப்பப்பட்டு, நீதிமன்ற அவமதிப்பு இடம்பெறுவது சுட்டிக்காட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் இரண்டு தரப்பு சட்டத்தரணிகளும் ஒன்றாக இணைந்து, நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதாக, வைத்தியர் அர்ச்சுனா தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
அர்ச்சுனா மன்னார் வைத்தியசாலைக்குள் நுழைந்த போது, அவருடன் சென்ற இரண்டு யூடியூப்பர்களும் மன்றில் அழைக்கப்பட்ட போது, ஒருவர் திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகினார்.
அவர்களுக்கு எதிரான விசாரணையை பொலிசார் மேற்கொண்டு அடுத்த தவணையில் அதனை மன்றில் சமர்ப்பிப்பார்கள்.
வழக்கு வரும் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.