சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா, அந்த வைத்தியசாலையில் ஏற்படுத்திய கலகத்தை தொடர்ந்து, வைத்தியத்துறையினர் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் எதற்குமான ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய ஆதார வைத்தியசாலைகளான பருத்தித்துறை, தெல்லிப்பளை என்பன துரிதமாக வளர்ச்சியடைந்த போதும், சாவகச்சேரி அந்ளவுக்கு வளர்ச்சியடையாமலிருந்தது. அதற்கு, அந்த வைத்தியசாலையின் பொறுப்பதிகாரிகள், வைத்தியர்கள், ஏனைய தரப்பினர்களே பொறுப்பு.
பொதுவாகவே வைத்தியத்துறை மீதான மக்களின் அதிருப்திகள். சாவகச்சேரி வைத்தியசாலையின் அசமந்தத்தினால் எழுந்த கொதிப்பினால், வைத்தியர் அர்ச்சுனாவின் கலகத்துக்கு மக்கள் ஆதரவளித்தனர்.
ஆனால் அர்ச்சுனாவின் கலகம், மருத்துவ மாபியாவுக்கு எதிரானதாக மாறாமல், மருத்துவ மாபியாவுக்கு ஆதரவாக மாறியதே முரண்நகை.
அர்ச்சுனா தற்போது முரண்படும் வைத்தியர்கள் யாருமே வைத்திய மாபியாவின் அங்கமல்ல.
மாறாக யாழ்ப்பாணத்தில் தனியார் வைத்தியசாலையை மையமாக கொண்ட பெரிய வைத்திய மாபியா மீது அர்ச்சுனா சிறு துரும்பைத்தானும் வீசவில்லை. வைத்திய மாபியா தொடர்பில் அர்ச்சுனா போதுமான அறிவை கொண்டிருக்காததும், அவர் வைத்திய மாபியாவுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்திருக்காததும் இதற்கான காரணங்கள்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் அர்ச்சுனா எடுத்த சில நடவடிக்கைகள் (அவை, முன்னைய கோபதாபங்களின் அடிப்படையில் அர்ச்சுனா மேற்கொண்ட பழிவாங்கல் நடவடிக்கையென கூறுபவர்களும் உள்ளனர்) எதிர்பாராத திருப்பம் எடுக்க, அதை மருத்துவ மாபியாவுக்கு எதிரான போராட்டமாக சமூக வலைத்தளம் சித்தரித்தது.
எனினும், அது தவறான சித்தரிப்பு.
உண்மையில் அர்ச்சுனா, வைத்திய மாபியாவை ஊக்கப்படுத்தும் கூறாகவே செயற்படுகிறார். நாளாந்தம் காலையில் எழுந்து கோட், சூட் அணிந்து, ஒரு லைவ் வீடியோ வெளியிட்டு விட்டு, உடையை மாற்றி விட்டு படுத்து தூங்குவதும், மீண்டும் கோட் சூட் மாட்டி லைவ் வீடியோ வெளியிடுவதுமே அவர் தற்போது செய்யும் வேலை.
அரச வைத்திய அலகின் மீது ஆதாரமற்ற, போலிக்குற்றச்சாட்டுக்களை சுமத்தி, இலவச மருத்துவ அலகின் மீதான மக்களின் நம்பிக்கையை உடைத்து, தனியார் துறையை நோக்கி மக்களை தள்ளும் மோசமான மாபியா அலகாக அர்ச்சுனா உருவெடுத்துள்ளார்.
இதற்கு, ஆங்காங்கே மானே தேனே போடுவதை போல, தலைவர், தமிழ் தேசியம் என வாயில் வந்ததையெல்லாம் அவர் உளற, அதை நம்பி பாட்டெழுதும் புலவர்கள் இருப்பதும் தமிழர்களின் பெரிய சாபக்கேடு.
அர்ச்சுனா இன்று சொல்வதெதும் மக்களுக்கு புதிய தகவல்களல்ல. ஐந்தாறு வருடங்களாக சாவகச்சேரி பஸ் நிலையத்திலும், சந்தையிலும், இன்னும் மக்கள் கூடும் இடங்களிலெ்லாம் பிரதேசவாசிகள் பேசிக்கொள்ளும் தகவலைத்தான் அர்ச்சுனா பேசியுள்ளார். அவர் புதிதாக எதையும் பேசவில்லை. அவர் பொறுப்பான வைத்தியராக இருந்தால் அவர் செய்திருக்க வேண்டிய ஒரேயொரு வேலை- தான் சொல்லும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஆதாரங்களை வழங்கி, அதை பகிரங்கப்படுத்துவதுதான்.
அதுதான், அவர் செய்யும் உண்மையான போராட்டமாக இருந்திருக்கும். இப்பொழுது அர்ச்சுனா பேசும் விடயங்களுக்காக, நமக்கு ஒரு அர்ச்சுனா தேவையில்லை. இதையெல்லாம் பல வருடங்களுக்கு முன்பிருந்தே மக்கள் தெருவில் பேசிக்கொள்கிறார்கள்.
மருத்துவ அமைப்பை மாற்ற வேண்டுமெனில், அதற்காக உண்மையாக போராடுகிறேன் எனில், அந்த சிக்கல்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இப்பொழுது அர்ச்சுனா பேசிய எந்த விடயத்துக்கும் அவரிடம் ஆதாரமில்லை.
சாவகச்சேரி நீதிமன்றத்தில் அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி செலஸ்ரின், அர்ச்சுனாவிடமுள்ள ஆதாரங்கள் அனைத்தும், அவரது விடுதியில் உள்ளதாகவும், அதனாலேயே விடுதியை விட்டு வெளியேறவில்லையென்றும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
அர்ச்சுனா ஏனைய வைத்தியர்கள் மீது சுமத்தியவற்றில் பல அபாண்டமான குற்றச்சாட்டுக்கள். அவற்றிற்கு ஆதாரங்களை அவரால் வழங்க முடியுமா என்ற பெரிய கேள்வியுள்ளது. இதனாலேயே, கடந்ம தவணையில் அவர் சார்பில், வழக்கை இணக்கசபையூடாக தீர்க்க விருப்பம் வெளியிடப்பட்டதாகவும், இதற்காகத்தான்- அனைத்து வைத்தியர்களும் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறுபவர்கள், அவர்கள் நீதிமன்றத்தில் நேரத்தை விரயம் செய்யக்கூடாதென்ற வாதத்தை முன்வைத்தார்கள் என, எதிர்தரப்பினர் நம்புகிறார்கள்.
தான் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு அர்ச்சுனா ஆதாரங்களை முன்வைக்கா விட்டால், அவர் அவதூறு வழக்கை எதிர்கொள்ள வேண்டும். அவர் சில காலத்துக்கு நீதிமன்ற படியேற வேண்டியிருக்கும். இதிலிருந்து அவர் தப்புவதெனில், உரிய ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். அல்லது, “அவர் தங்கியுள்ள விடுதி உடைக்கப்பட்டு ஆதாரங்கள் திருடப்பட்டு விட்டன“ என்பதை போன்ற கதைகள் வர வேண்டும்.