நெடுந்தீவு பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி கோரி நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சடலத்துடன் போராட்டத்துடன் அப் பகுதி ஈடுபட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
நெடுந்தீவில் நேற்று முன்தினம் இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அதிகாலை அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
இச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் இறுதி கிரிகைகள் நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லும் போது சடலத்தையும் தோல்களில் சுமந்தவாறு நெடுந்தீவு போலீஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது பொலிஸாரே தூக்கமா, உயிரிழப்பிற்கு நீதி வேண்டும், குற்றவாளிகளை கைது செய், பொலிஸாரே விழித்துக் கொள் உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாறு பெருமளவான மக்கள் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு பெருமளவான பொலிஸாரும் திரண்டிருந்ததனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
இதன் போது பொலிஸார் அசமந்த போக்கு காட்டுவதாக கூறி பொலிஸாருடன் முரண்பட்ட மக்கள் கொலையுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்ற சடலத்தை நல்லடக்கம் செய்தனர்.