நியூஸிலாந்து அணியின் கப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். மேலும், 2024-25 ஆண்டுக்கான தேசிய அணி ஒப்பந்தமும் தனக்கு வேண்டாம் என அவர் அறிவித்துள்ளார்.
நடப்பு ரி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றோடு நியூஸிலாந்து அணி வெளியேறிய நிலையில் அவரது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் கிரிக்கெட் கப்டன் பொறுப்பில் இருந்து அவர் விலகினார். தற்போது ஒருநாள் மற்றும் ரி20 கிரிக்கெட் கப்டன் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.
அவர் தேசிய அணிக்காக ஒப்பந்தத்தில் இருந்து விலகினாலும் சிறப்பு பிரதிநிதித்துவத்தின் மூலம் சர்வதேச தொடர்களுக்கான நியூஸிலாந்து அணியில் அவரை தேர்வு செய்ய தயாராக இருப்பதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
நியூஸிலாந்து அணிக்காக கடந்த 2010 முதல் ஒருநாள், டெஸ்ட் மற்றும் ரி20 கிரிக்கெட்டில் வில்லியம்சன் விளையாடி வருகிறார். இதுவரை 358 போட்டிகளில் ஆடி 18,128 ரன்கள் எடுத்துள்ளார். 2015 மற்றும் 2019 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி, 2021 ரி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி விளையாடி உள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் அவரது தலைமையிலான அணி வென்றுள்ளது.
நியூஸிலாந்து அணிக்காக விளையாடும் வாய்ப்பை நான் பெற்றது எனக்கு பொக்கிஷமானது. அணிக்காக சிறந்த பங்களிப்பை தர வேண்டுமென்ற எனது விருப்பம் என்றும் குன்றியதில்லை என வில்லியம்சன் தெரிவித்துள்ளார். இதனை நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.