திருகோணமலையில் நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராகவும் நகர சபை செயலாளருக்கு எதிராகவும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் திருகோணமலை நகரில் முற்று முழுதாக கடைகள் மூடப்பட்டு ஒத்துழைப்பு வழங்கப்பட்டதுடன் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டது
திருகோணமலை நகர பிரதான பொது சந்தை மற்றும் வர்த்தக சங்கத்தினர் ஒன்றிணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்ததுடன் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நகர சபை நீண்ட காலமாக நித்திரையில் உடன் விழித்தெழு, அனுமதியற்ற வியாபாரத்தை உடன் நிறுத்து, நகர சபை அதிகாரிகளே அரசியல்வாதிகளுக்கு அடிபணியாதே தீர்வை உடன் பெற்றுதா, உத்தியோகத்தர்களே பணம் செலுத்துவது நாங்கள் சுகம் அனுபவிப்பது யாரோ எனும் பதாகைகளை ஏந்தியவாறு இன்று (19)திருகோணமலை பிரதான பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை வெளிப்படுத்தி இருந்தனர்
மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிலர் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்
ஆண்டாண்டு காலமாக திருகோணமலை நகரில் பொது சந்தையில் உரிய முறையில் வரிகளை செலுத்தி திருகோணமலை நகர சபைக்கு உரிய முறையில் வாடகையும் செலுத்தி வருகின்ற நிலையில் இவ்வாறு வீதியோரங்களில் வியாபாரங்கள் செய்வதற்கு அனுமதிப்பதினால் தமக்கு பாரிய நட்டம் எனவும் வீதியோர வியாபாரத்தினால் வீதிகளில் பல விபத்துகள் ஏற்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தினர்
இவ்வாறு இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் திருகோணமலை நகரில் பெரும்பாலான வர்த்தகநிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் வாடிக்கையாளர்கள் பெரும் அசவுகரியங்களுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது
குறித்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் திருகோணமலை நகரின் சில பிரதேசங்களில் வீதியோர கடைகள் உடன் அகற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
-ரவ்பீக் பாயிஸ்-