ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல்களில் தீவிர வலதுசாரிகளிடம் தோல்வியடைந்த பின்னர் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் திடீரென நாடாளுமன்ற தேர்தலை அறிவித்திருக்கிறார்.
மக்ரோனின் அதிர்ச்சி முடிவு அவரது அரசியல் எதிர்காலத்தை பணயம் வைப்பதாகும். இந்த தேர்தலில் மரைன் லு பென்னின் தீவிர வலதுசாரி தேசிய பேரணி (RN) பெரும்பான்மையை பெற்றால், மக்ரோனின் எஞ்சியுள்ள 3 வருட ஜனாதிபதி பதவிக்காலத்தில் பெரும் நெருக்கடியை சந்திப்பார்.
தேர்தல் இம்மாதம் 30ஆம் திகதியும் அடுத்த மாதம் 7ஆம் திகதியும் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் அவரது கட்சி 15 வீத வாக்குகளோடு படுதோல்வியடைந்ததை தொடர்ந்து, மக்ரோன் நாட்டில் பொதுத்தேர்தலை அறிவித்திருக்கிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 நாடுகளும் 720 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க கடந்த நான்கு நாள்களாக வாக்களித்தன.
பல நாடுகளில் தீவிர வலதுசாரிகளின் கரம் வலுத்திருக்கிறது.
28 வயதான ஜோர்டான் பார்டெல்லா தலைமையில், தீவிர வலதுசாரி தேசிய பேரணி சுமார் 32 சதவீத வாக்குகளை வென்றது, மக்ரோனின் கட்சிக்கு 15 சதவீத வாக்குகளே கிடைத்தது. சோசலிஸ்டுகள் 14 சதவீத வாக்குகளை பெற்றனர்.
ஜெர்மன் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸும் தோல்வியைத் தழுவினார். இருந்தாலும், அவர் உடனடியாக தேர்தலை அறிவிக்க வேண்டிய அவசியமில்லையென்றார்.