28.1 C
Jaffna
June 21, 2024
முக்கியச் செய்திகள்

‘என் மனைவியை பொதுவேட்பாளராக்குங்கள்’..: ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கோரிக்கை: ஆனந்தசங்கரியின் சகாவின் பெயரும் தீவிர பரிசீலனையில்!

தமிழ் பொதுவேட்பாளராக யாரை நிறுத்துவதென்பது தொடர்பில், இறுதிக்கட்ட பரிசீலனையில் சிலரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே தமிழ் பொதுவேட்பாளராக களமிறக்கப்படலாமென தெரிகிறது.

தமிழ் பொதுவேட்பாளரை  நிறுத்துவதென ஒற்றைக்காலில் நிற்கும் உதிரித்தரப்பினர், இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளை தவிர்த்து, தமது திட்டப்படியே பொதுவேட்பாளரை நிறுத்த தீர்மானித்துள்ளனர்.

யாழ்ப்பாண வணிகர் கழகம், பாரவூர்திகள் சங்கம், சிற்றுண்டிச்சாலைகள் சங்கம், அழகுக்கலைஞர்கள் சங்கம் போன்ற வர்த்தகத் தரப்புக்களுடன் பேச்சு நடத்தி விட்டு, தமிழ் சமூகமே தமக்கு ஆதரவளிக்கிறது என விபரீதமாக கற்பனை செய்தபடி, அரசியல் கட்சிகளை தவிர்த்து, பொதுவேட்பாளர் விவகாரத்தில் தீர்மானமெடுக்க துணிந்துள்ளன.

பொதுவேட்பாளர் விவகாரத்தில் ஆதரவளிப்பதாக பல கட்சிகள் அறிவித்துள்ள போதும், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளை தவிர்ந்த ஏனையவர்கள், இறுதிக்கட்டத்தில் பொதுவேட்பாளர் விவகாரத்திலிருந்து ஒதுங்கிவிடவே வாய்ப்புண்டு.

ஏனெனில், தற்போதுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள்- பிரமுகர்களுக்கு அரசியல் அறிவு குறைவு, நாமே அரிஸ்டோட்டில்கள் என்றுதான் பொதுவேட்பாளர் பிரசாரகர்களான கட்டுரையாளர்கள் கருதுகிறார்கள். (பொதுவேட்பாளரை எதிர்ப்பவர்கள் அறிவில்லாதவர்கள் என்றும் எழுத ஆரம்பித்துள்ளனர்). பொதுவேட்பாளர் விவகாரத்தின் இறுதிக்கட்டத்தில், இந்த அரிஸ்டோட்டில்கள் அரசியல் பாலபாடத்தை, அரசியல் கட்சிகளிடம் இருந்து படிப்பார்கள் என்பது வேறு கதை.

இது தொடர்பில் தமிழ் பக்கத்துடன் பேசிய, பொதுவேட்பாளர் பிரச்சாரகர்களில் ஒருவர்- “பொதுவேட்பாளர் விவகாரத்தில் அரசியல் கட்சிகளை ஒரு லிமிட்டுடன் வைத்துள்ளோம். அவர்களை முடிவெடுக்கும் வட்டத்துக்குள் கொண்டு வந்தால், தேவையான தீர்மானத்தை எடுக்க முடியாது. நாம் சில விடயங்களில் பிரபாகரன்களாக இருக்க வேண்டும். அப்படி முடிவெடுத்தால்தான் அரசியலை கையாளலாம். சம்பந்தர், மாவை போன்றவர்கள் கடந்த 15 ஆண்டுகளில் முடிவெடுப்பதில் இழுபறி அணுகுமுறையை கையாண்டதே இன்றைய சிக்கல்களுக்கு காரணம். அரசியலில் எப்படி முடிவெடுக்க வேண்டுமென்பதை அரசியல் கட்சிகளுக்கு நாங்கள் இம்முறை படிப்பிப்போம். அரசியல் கட்சிகள் பொதுவேட்பாளரை ஆதரிப்பதில் ஆரம்பத்தில் தயங்கின. குறிப்பாக ரெலோ, புளொட். அவர்களை இப்பொழுது வழிக்கு கொண்டு வந்து விட்டோம். விரைவில் தமிழ் அரசுக்கட்சியையும் பணிய வைப்போம். கட்சிகள் பொதுவேட்பாளரை ஆதரித்தாலும், அவர்களை சம்பிரதாயமாக அழைத்து பேசுவோமே தவிர, முடிவெடுக்கும் வட்டத்துக்குள் கொண்டு வர மாட்டோம். அவர்களை தேவையாக சந்தர்ப்பங்களில் கையாள்வோம். இல்லாத சமயங்களில் நாமே தீர்மானங்களை எடுப்போம்“ என்றார்.

“சிறு பிள்ளைக்கு நிலாக்காட்டி சோறூட்டுவதை போல எம்மை கையாள இவர்கள் முனைகிறார்கள் என்பது எமக்கு தெரியும். அவர்கள் இப்பொழுதுதான் அரசியலுக்கு வந்தவர்கள். சில விடயங்களை பின்னர் புரிந்து கொள்வார்கள்“ என இலங்கை தமிழ் அரசு கட்சியின் தீர்மானங்களை எடுக்கவல்ல ஒரு தலைவர் தமிழ் பக்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில தலைவர்களும் இதையொத்த கருத்தை தமிழ் பக்கத்துடன் பகிர்ந்து கொண்டனர்.

அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தான் கலந்து கொண்ட நிகழ்வுகளில் கலந்து கொண்ட தமிழ் அரசியல் பிரமுகர்களிடம், பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் துருவத்துருவி விசாரித்தது, கட்சிகளிடையே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது.

தன்னை பொதுஜன பெரமுன ஆதரிக்குமென்றும், இதனால் எதிர்வேட்பாளரையே பெரும்பாலான தமிழர்கள் ஆதரிப்பார்கள் என்றும் குறிப்பிட்ட ரணில், அவர்களை எவ்வாறு கையாளலாம் என்றும் தனக்கு நெருக்கமான தரப்பினரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

தமிழ் பொதுவேட்பாளர் பிரச்சாரத்தை முதலில் முன்னெடுத்த ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பும், டான் தொலைக்காட்சி உரிமையாளரும் ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருக்கமானவர்கள். இவை அனைத்தையும் கூட்டிக்கழித்து பார்த்துள்ள அரசியல் கட்சிகள், பொதுவேட்பாளரின் பின்னணியில் ரணிலின் மறைகரங்கள் இருப்பதை பலமாக நம்புகின்றன.

தமிழ் பொதுவேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட- பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதும் திருகோணமலையை சேர்ந்த ஒருவர், அண்மையில் 70 இலட்சம் ரூபா பெறுமதியான கார் ஒன்றை கெள்வனவு செய்திருந்தார். இது, தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தின் பின்னணியில் பெருந்தொகை பணப்பரிமாற்றம் நிகழ்வதை உறுதி செய்வதாக அமைந்தது.

பொதுவேட்பாளர் விவகாரத்தில் டான் தொலைக்காட்சி உரிமையாளர் அண்மையில் பெருந்தொகை பணச் செலவில் யாழ்ப்பாணத்தில் கூட்டமொன்றை நடத்தினார். அவரது அரச தொடர்பு பின்னணி ஊடகங்களில் வெளியானதையடுத்து, அவரை தவிர்த்து பொது வேட்பாளர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். மண்டையிலுள்ள கொண்டையை மறைக்க மறந்த வடிவேலுகளை போல- அண்மையில் நடந்த கூட்டத்தில், டான் தொலைக்காட்சி உரிமையாளரின் உதவியாளராக செயற்படும், பொதுவேட்பாளர் விவகாரத்தின் பின்னர் 70 இலட்சம் ரூபா செலவில் கார் வாங்கியவரை முன்வரிசையில் இருத்தி, தமிழ் மக்கள் பொதுச்சபையென மற்றொரு குழுவை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். அதாவது, அரச தொடர்பு வர்த்தகரின் பங்களிப்பை மறைத்து, மக்களை ஏமாற்றி, காரியத்தை முடிக்கலாமென யாழ்ப்பாண வடிவேலுகள் நினைக்கிறார்கள்.

இந்த பின்னணியில், தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதென விடாப்பிடியாக உள்ள சிவில் சமூகமென தம்மை குறிப்பிடும் உதிரி தரப்பினர், கடந்த சில நாட்களாக தீவிர கலந்துரையால்களின் பின்னர், பொதுவேட்பாளர் தொடர்பில் சில தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

தற்போது, பொதுவேட்பாளரை ஆதரிக்கும் தரப்பில் இரண்டு அரசியல் கட்சிகள் உள்ளன. ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் ஆரம்பம் முதலே பொதுவேட்பாளரை ஆதரிக்கின்றன. இரண்டு கட்சிகளும் ஜனாதிபதி ரணிலுடன் மிக நெருக்கமான தரப்பினரும் கூட. பொதுவேட்பாளரை களமிறக்குவதெனில் தமது கட்சிகளை பயன்படுத்தலாமென இரண்டு கட்சிகளும் தெரிவித்துமிருந்தன.

ஆனால், இரண்டு கட்சிகளையும் பயன்படுத்தி பொதுவேட்பாளரை களமிறக்குவதில்லையென சிவில் சமூகமென தம்மை குறிப்பிடும் தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.

கட்சி சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டு, அவர் பெருவாரியாக வாக்கெடுத்து விட்டால், அதை பயன்படுத்தி அந்தக் கட்சி தன்னை வளர்க்கும் அரசியலை செய்ய ஆரம்பித்து விடும் என குறிப்பிட்டே, கட்சி சார்பில் வேட்பாளரை களமிறக்குவதில்லையென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் சார்பில் 35 வயதுக்கு மேற்பட்ட- இலங்கைக் குடிமகனான யாரேனும் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும். தற்போதைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேட்சையாக போட்டியிட முடியும்.

அரசியல் கட்சியொன்றின் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்கா விட்டால், சிவில் சமூகத்தினருக்கு தற்போதுள்ள ஒரே தெரிவு- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை களமிறக்குவதே.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை சுயேட்சையாக களமிறக்கலாமென சிவில் சமூகத்தினர் கொள்கையளவில் தீர்மானமெடுத்து- யாரை களமிறக்குவதென தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள். விடுதலைப் புலிகள் காலத்தில்- அவர்களின் ஆசீர்வாதத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்டவர்களில் யாரேனும் ஒருவரையே பொதுவேட்பாளராக நியமிக்கலாமென இந்த குழுவினர் ஆலோசித்து வருகிறார்கள். இதற்காக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சிலரதும், வடமாகாணத்தை சேர்ந்த சிலரதும் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்த கலந்துரையடல்களின் போது, பொதுவேட்பாளர் பிரச்சாரகர்களில் ஒருவர்- தனது மனைவியை தமிழ் பொதுவேட்பாளராக நியமிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். பொதுவேட்பாளர் பிரச்சாரகர் குழுவின் முக்கிய அங்கத்தவரான அவரது கோரிக்கையை, இந்த குழுவில் உள்ள பலர் முழு மனத்துடன் ஏற்றுக்கொண்ட சுவாரஸ்ய சம்பவமும் நிகழ்ந்தது. அவரது மனைவியும் தமிழ் பொதுவேட்பாளர் பட்டியலில் முன்னணியில் உள்ளார்.

கிழக்கு முன்னாள் எம்.பிக்களில், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் எம்.பியொருவரின் பெயரும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

இதேவேளை, பொதுவேட்பாளர் கலந்துரையாடல் ஒன்றில், பத்திரிகைகளில் கட்டுரை எழுதும் ஒருவர்- தமிழ் பொதுவேட்பாளராக பல்கலைக்கழக மாணவன் ஒருவரை நிறுத்த வேண்டுமென உணர்ச்சி பொங்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் போட்டியிடலாமென மற்றையவர்கள் குறிப்பிட்ட பின்னரே, அவர் அறிந்து கொண்டார்.

பொதுவேட்பாளர் பிரச்சாரகர்களில் ஒருவரின் மனைவியை பொதுவேட்பாளராக்கும் திட்டத்தை, பொதுவேட்பாளருக்கு ஆதரவளித்து- இது தொடர்பான கலந்துரையாடல்களில் தொடர்ந்து கலந்து கொள்ளும் பல அமைப்புக்கள் எதிர்க்கின்றன. திருகோணமலையை சேர்ந்த நலிவுற்ற சமூகங்களின் அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு, தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இணையம், அறிவார் சமூகம் போன்றவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் தமிழ் பக்கத்துடன் பேசும் போது, தமது அதிருப்தியை தொலைபேசி வழியாக ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவித்துள்ளதாகவும், அதை பொருட்படுத்தாமல் குடும்ப உறுப்பினரை வேட்பாளராக்க, தமிழ் பொதுவேட்பாளர் பிரச்சாரத்தை ஆரம்பித்திருப்பதை உறுதி செய்யும் விதமாக நடந்தால், பொதுவேட்பாளர் விவகாரத்திலிருந்து வெளியேறவுள்ளதாக தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
2

இதையும் படியுங்கள்

ஜெய்சங்கரின் முன்பாக வெடித்தது தமிழ் அரசுக் கட்சியின் குழு மோதல்!

Pagetamil

தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கிறார் ஜெய்சங்கர்!

Pagetamil

உக்ரைனில் அமைதி திரும்ப முக்கிய நிபந்தனைகள்: புடின் அறிவிப்பு!

Pagetamil

‘யாழில் டெஸ்ட் மட்ச் கிரவுண்ட் இருக்கிறதா என ஏன் கேட்டேன்?’: சஜித் விளக்கம்!

Pagetamil

‘தமிழ் பொதுவேட்பாளர் இல்லையென்றால் நானே பொதுவேட்பாளராக போட்டியிடுவேன்’: இந்தியாவிலிருந்து வந்ததும் பகீர் கிளப்பும் சிவாஜி!

Pagetamil

Leave a Comment