இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் வழங்க, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், இரணைமடு குள நீர்ப்பங்கீடு தொடர்பான கூட்டம் முடிவின்றி நிறைவடைந்தது.
இரணைமடு நீரப்பங்கீடு தொடர்பான கலந்துரையாடல் நேற்று (5) இரணைமடு கமக்கார அமைப்புக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி விடயம் தொடர்பாக கடந்த 16.02.2024 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு அமைவாக ஒழுங்குசெய்யப்பட்டது.
இதன்போது இரணைமடு நீரப்பங்கீடு தொடர்பான யாழ்மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாதவாறு ஒரு தீர்க்கமான முடிவினை எட்டுவதற்கான நடவடிக்கைககளை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெளிவுப்படுத்தினார்.
இக்கலந்துரையாடலில் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன், அமைச்சின் ,செயலாளர் நபீல், நீர் வழங்கள் மற்றும் வடிகால் அமைப்பின் தலைவர்,பொதுமுகாமையாளர், அரச அதிகாரிகள்,கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
இரணைமடு குளத்தின் கொள்ளளவை அதிகரித்து, கிளிநொச்சி விவசாயிகளுக்கும், யாழ்ப்பாண மக்களின் குடிநீருக்கும் நீர் வழங்கலாம் என நீர்வழங்கல் வடிகலமைப்பு சபையினர் தெரிவித்த போதும், சி.சிறிதரன் எம்.பி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சி.சிறிதரனின் ஆதரவாளராக அறியப்படும் இரணைமடு கமக்காரர் சம்மேளன தலைவர் சிவமோகனும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இரணைமடு குளம் கிளிநொச்சி மக்களுக்கே சொந்தம் என தெரிவித்தார்.
இதனால் நேற்றைய கூட்டத்தில் இணக்கம் ஏற்படவில்லை.
இரணைமடு நீர்ப்பங்கீடு தொடர்பான இறுதிபடுத்தப்பட்ட புதிய நவீன ஆய்வுகளுக்கு அமைவாக சிவில் அமைப்புக்கள், விவசாய அமைப்புக்கள், தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐ.நா நீர் முகாமைத்துவம், யாழ் பல்கலைக்கழகம், நீர்ப்பாச தினைக்களம், ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்புக்கள் ஆகிய அமைப்புக்களின் தீர்மானமிக்க ஆய்வு அறிக்கையினை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் பெற்றுக்கொண்டதன் பின்னர் தீர்மானமிக்க முடிவுகள் எட்டப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.