சண்டிகர் விமான நிலையத்தில் நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் சிஐஎஸ்எஃப் பெண் காவலர் அறைந்ததாக வெளியான வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மதியம் 3.30 மணி அளவில் நடிகை கங்கனா ரனாவத் டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்துக்குச் சென்றார். விமான நிலையத்தில் பணியிலிருந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதற்கு விவசாயிகளுக்கு எதிராக கங்கனா தெரிவித்த கருத்துகளே காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பான விசாரணையை நடத்த மூத்த சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடிகை கங்கனா ரணாவத் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் நன்றாக இருக்கிறேன். விமான நிலையத்தில் நடைபெற்ற பாதுகாப்பு சோதனையின்போது அந்தச் சம்பவம் நடைபெற்றது. சோதனை முடிந்த பின், நான் செல்லும்போது அந்த பெண் காவலர் வேறு ஒரு கேபினில் அமர்ந்திருந்தார். நான் அவரைக் கடக்கும்போது அவர் என் முகத்தில் அடித்தார்; பின்பு என்னை திட்டினார்.
ஏன் இப்படி செய்தாய் என்று நான் அவரிடம் கேட்டேன், அதற்கு அவர், விவசாயிகளின் போராட்டத்துக்காகதான் இப்படி செய்தேன் என்றார். பஞ்சாபில் பயங்கரவாதம் அதிகரித்து வருவதும், இதை எப்படி கையாள்வது என்பதும் தான் எனக்கு கவலை அளிக்கிறது” என அந்த வீடியோவில் கங்கனா தெரிவித்துள்ளார்.
கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் சிஐஎஸ்எஃப் பெண் கான்ஸ்டபிளை சஸ்பெண்ட் செய்து உள்ளூர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக மூத்த சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்ட கங்கனா ரணாவத், காங்கிரஸ் கட்சியின் விக்ராமாதித்யா சிங்கை 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.