பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடிமெனிக்கே புகையிரதத்தின் இயந்திரம் ஹப்புத்தளை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று (3) தீப்பற்றி எரிந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலை 8.50 மணியளவில் பதுளை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பித்த பொடிமெனிக்கே புகையிரதத்தில் பெருமளவிலான பயணிகள் ஏற்கனவே புகையிரதத்திற்குள் இருந்ததாகவும் தீயினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் புகையிரத திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
இரண்டு என்ஜின்கள் கொண்ட புதிய புகையிரதமான இந்த புகையிரதம் தியத்தலாவை ரயில் நிலையத்தை கடந்து ஹப்புத்தளை ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது பின்பக்க இயந்திரம் திடீரென தீப்பிடித்ததாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹப்புத்தளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தீயணைப்புப் பிரிவினர், ஹப்புத்தளை பொலிஸார் மற்றும் புகையிரத ஊழியர்கள் இணைந்து தீயணைக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தி இன்ஜினில் தீயை அணைத்தனர்.
இயந்திரத்தை சரிசெய்த பின்னர், பொடிமெனிக்கே புகையிரதம் சில மணித்தியாலங்கள் தாமதத்தின் பின்னர் மீண்டும் ஹப்புத்தளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்க ஆரம்பித்துள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.