உடரதல்ல தோட்ட தொழிலாளர்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் , வியாழக்கிழமை (30) முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரும் இ.தொ.கா பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார் .
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
“நுவரெலியா மாவட்டம் நானு ஓயா உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தின் தான்தோன்றி தனமான செயற்பாட்டை கண்டித்து கடந்த ஒருமாத காலமாக பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேநேரத்தில் உடரதல்ல தோட்டத் தொழிலாளர்களுக்கும் அத் தோட்ட நிர்வாகத்துக்கும் இடையிலான பிரச்சினை தொழிற்சங்க பிரச்சினையாகும்.
இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள தொழிற் சங்கம்,தோட்ட நிர்வாகம் மற்றும் தொழில் திணைக்களம் இணைந்து தீர்வுகளை பெறவேண்டும் மாறாக தொழிலாளர்களுக்கு எதிராக தொழிற்சங்க பிரச்சினையில் பொலிஸார் தலையிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். ” என குறிப்பிட்டுள்ளார் .
உடரதல்ல தோட்டத்தில் 280 தொழிலாளர்கள் கட்சி பேதமின்றி களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகத்தின் தான்தோன்றி தனமான போக்குக்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினை நடத்தி வந்தனர்.
உடரதல்ல தோட்டத்தில் தேயிலையை அழித்துவிட்டு அங்கு கோப்பியை பயிரிட களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகம் கையாண்ட தான்தோன்றி தனத்தை எதிர்த்தே இந்த பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பான பேச்சுவார்த்தை நுவரெலியா உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் நேற்று (30) இடம்பெற்றது.
இதன்போது உடரதல்ல தோட்டத்தில் கோப்பி பயிரிடுவதற்கு தேயிலை மரங்களை பிடுங்க தோட்ட நிர்வாகம் கொண்டுவந்த இயந்திரத்தை தடுத்த தோட்ட தலைவர்கள் மூவரை பணி நிறுத்தியிருந்தனர்.
முதலில் பணி றுத்தப்பட்ட மூவருக்கு தொழில் வழங்க வேண்டும் என இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தோட்ட நிர்வாகம் இணக்கப்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பேச்சுவார்த்தை இனக்கபாடின்றி முடிவடைந்தது.
அதேநேரத்தில் உடரதல்ல தோட்ட மக்களுக்கு தீர்வு கிட்டும் வரை களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படுவதாக இ.தொ.கா அறிவித்துள்ளது.
களனிவெளி நிர்வாகத்துக்குரிய தோட்ட தொழிற்சாலைகளில் இருந்து தேயிலை தூளை விற்பணைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைக்கு இ.தொ.கா தடை விதித்தது.