கொலை வழக்கில் ஆண் நண்பருடன் இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலா கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர் குறித்து வெளியாகும் தகவல்கள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 21-ம் தேதி நடந்த கோயில் திருவிழாவில் ராமசாமி என்பவர் தரப்புக்கும், ராமர் என்பவர் தரப்புக்கும் முன்பகை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் பெரியவர் ராமர் பலமாகத் தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் ராமசாமி, அவர் மகன் ராஜேந்திரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். ராமசாமியின் இரண்டாவது மகன் ராம்குமார் தலைமறைவானார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ராமர் மரணமடைய, கொலை வழக்காக மாற்றப்பட்டதால், ராம்குமாரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
பெங்களூருவில் மறைந்திருந்த ராம்குமாரை ட்ரேஸ் செய்து போலீஸார் பிடித்தபோது, அவருடன் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் காவல் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலாவும் உடன் இருந்தார். சமீபகாலமாக ராம்குமாருடன் இணைந்து வாழ்ந்துவந்த சத்திய ஷீலா, ஸ்ரீவில்லிபுத்தூரில் சம்பவம் நடந்தபோதும் அங்கு இருந்திருக்கிறார் என்ற தகவல் போலீஸுக்குத் தெரியவந்தது.
உடனே அங்கிருந்து இருவரையும் கைதுசெய்து ஸ்ரீவில்லிபுத்தூர் அழைத்துவந்த தனிப்படையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்தனர். அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி துரை, சத்திய ஷீலாவை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலா குறித்து `பகீர்’ தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
தனித்து வாழ்ந்துவந்த சத்திய ஷீலா, சிவகங்கை மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது கட்டப்பஞ்சாயத்து செய்கிறார், பொய் வழக்கு போடுகிறார், வழக்கிலிருந்து பெயரை நீக்க லஞ்சம் கேட்கிறார் என்று ஏகப்பட்ட புகார்கள் உயரதிகாரிகளுக்குச் சென்றபோதும், தன் செல்வாக்கால் தொடர்ந்து பணியில் இருந்திருக்கிறார்.
அப்போதுதான் ரீல்ஸ் பார்ப்பதன் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ராம்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதோடு சிவகங்கை மாவட்டத்துக்கு அடிக்கடி வந்து சத்திய ஷீலாவைச் சந்தித்திருக்கிறார். நாள்கள் செல்லச் செல்ல… சத்திய ஷீலாவும் ராம்குமாரும் தம்பதிபோல வாழ்ந்து வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு சிவகங்கையில் பிரபலமான தொழிலதிபர் ஒருவரிடம் பணம் பறிக்கும் நோக்கில் பொய்யான போக்சோ வழக்கைப் பதிவுசெய்து கைதுசெய்ததாகவும், இதனால் மனமுடைந்து தொழிலதிபர் வெளியே வந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்பட்டது.
தொழிலதிபரின் குடும்பத்தினர் தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாக தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்தது. அப்போது அவர்மீது போடப்பட்ட போக்சோ வழக்கு பொய்யானது என்று தெரியவந்து. அதோடு சத்திய ஷீலா உட்பட இந்தக் குற்றத்துக்கு பின்னணியில் இருந்த 10 பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே இவர்மீது சிவகங்கை மாவட்டக் காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாறாக ராமநாதபுரம் மண்டபம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அங்கிருக்கும்போதும் ராம்குமாருடன் தொடர்பில் இருந்திருக்கிறார்.
காவல்துறையில் இருப்பவர்கள்மீது புகார்கள் ஏதேனும் இருந்தாலோ… அல்லது அவர்கள்மீது ஏதேனும் வழக்கு நிலுவையில் இருந்தாலோ, அவர்களை சென்சிட்டிவான, கான்பிடன்ஷியலான பணியில் நியமிக்கக் கூடாது என்று விதி இருக்கிறது. இந்த நிலையில், மண்டபம் முகாம் காவல் நிலையப் பணியில் நியமித்ததே தவறானது என்று சொல்லப்பட்டது. ஆனால், மாவட்ட சைபர் க்ரைமிலும் கூடுதலாகப் பணி செய்திருக்கிறார். பணிக்கு சரியாக வராமல் இருந்து வந்தவர்மீது உயரதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில்தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் தன் ஆண் நண்பரின் குடும்பப் பிரச்னையில் தலையிட்டு, ஒரு பெரியவர் கொலைசெய்ய காரணமானது மட்டுமன்றி, முக்கிய குற்றவாளியுடன் தலைமறைவாகியுள்ளார். ராம்குமார் குடும்பத்தினரிடம் ஏகப்பட்ட பணத்தினை கொடுத்து ஃபைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
பெங்களூர் சென்று அங்கிருந்து கோவாவுக்குச் செல்லவிருந்த நிலையில்தான் ராம்குமாரையும் சத்திய ஷீலாவையும் தனிப்படையினர் கைதுசெய்துள்ளனர். சத்திய ஷீலாவிடம் முறையாக விசாரித்தால் அவர் செய்த தகிடுத்தத்தங்கள் இன்னும் வரலாம் என்கிறார்கள் இவரை நன்கறிந்தவர்கள்.