28.4 C
Jaffna
June 23, 2024
முக்கியச் செய்திகள்

தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்களின் செய்தி இதுதான்: ஜனாதிபதி தேர்தலில் மாற்றத்தை கோரும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை ஆதரிப்பதெனில், அந்த கட்சி வெளிப்படுத்த வேண்டிய அரசியல் நிலைப்பாடுகளை வலியுறுத்தி மாற்றத்திற்கான புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் என்ற அமைப்பினர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பு தொடர்பில் தமிழ் மக்களிடம் இணைய வழி கையெழுத்து சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். (இணைப்பை பார்வையிட இங்கு அழுத்துங்கள்)

இது தொடர்பில் மாற்றத்திற்கான புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை வருமாறு-

இலங் கையில் இவ்வாண்டு (2024) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல், ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக அமையவுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பங்குனி மாதம் காலிமுகத் திடலில் தொடங்கப்பட்டு சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக நீடித்த ‘அரகலய’ எனும் மிகப்பெரிய மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் வெற்றியாக, பதவியிலிருந்த ஜனாதிபதி பதவி இறக்கப்பட்டதன் பின்பாக, தேர்தலின்றிப் பாராளுமன்றத்தினால் நியமிஅக்கப்பட்ட இன்றைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து வருகின்ற முக்கியமான தேர்தல் இதுவாகும். வரலாறு காணாத இந்த ‘அரகலய’ என்ற மிகப்பெரிய மக்கள் எழுச்சியும் அதன் தாக்கமும் இலங்கையின் ஆட்சி முறையில் ஒரு மாற்றம் அவசியம் என்பதையே கோரி நிற்கின்றன என்பதில் எந்தச் சந்தேகத்திற்கும் இடமில்லை.

ஒரு தற்காலிக பதவி மாற்றத்துடன் ‘அரகலய’ என்னும் போராட்ட வடிவம் முடிவுக்கு வந்த போதும், மக்களின் வெறுப்புக்கு உள்ளான ஓர் அரசியல் கட்சியின் ஆதரவைக் கொண்டே ஆட்சி நடத்தும் “விகாரப்படுத்தப்பட்ட”, பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காத, ஒருவித ஆட்சியே அங்கு இன்னும் தொடர்கிறது. எனவே, அந்த சக்திகளைத் தோற்கடித்து, தேர்தல் மூலம் ஒரு மக்கள் நலன் பேணும் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதே பரந்துபட்ட நாட்டு மக்களதும் விருப்பமாகும்.

அந்த மாற்றத்தின் ஆரம்பம் 2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்க வேண்டும் என்றால், நாட்டின் சகல இன மக்களின் நலன் கருதியும், குறிப்பாக சுதந்திரம் அடைந்த காலம் முதல் தமது அரசியல் மற்றும் ஏனைய உரிமைகளுக்காகப் போராடி பேரிழப்புக்களைச் சந்தித்த தமிழ் மக்களும் ஏனைய தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களும் இந்த ‘மாற்றத்திற்கான’ கூட்டுச் செயற்பாட்டில் கைகோர்த்து நிற்க வேண்டியது ஒரு தவிர்க்க முடியாத வரலாற்றுத் தேவையாகும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் அதே மக்கள் விரோத சக்திகள் வெற்றிபெற்றால் கடந்த 75 வருட காலமாக அவர்கள் செய்த அரசியலும், அவர்கள் பின்பற்றிய கொள்கைகளும், அவர்கள் விதித்த சட்டங்களும் சரியானவை என்றே உறுதிப்படுத்தப்படும்

இலங்கையில் கடந்த பல தசாப்த கால அரசியல் சாபக்கேட்டினை மாற்றி புதிய சகாப்தத்தை ஒரு தேர்தல் மூலம் உருவாக்க “தேசிய மக்கள் சக்தி” (NPP) என்னும் அரசியல் அமைப்பை தமது பிரதிநிதியாகவும், தமக்கான அணியாகவும் நம்பிக்கை வைத்துப் பெரும்பாலான மக்கள் ஆதரித்து வருவதை அவதானிக்க முடிகிறது. அந்த வகையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை (NPP) வெற்றி பெறச் செய்வதே கடந்தகால நாசகார அரசியல் சக்திகளைத் தோற்கடித்து, இலங்கையில் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்திற்கான அத்திவாரத்தை இடுவதற்கான முன்னிபந்தனையாக அம்மக்களால் கருதப்படுவதும் இங்கு கவனத்துக்குரியது.

இருள் நிறைந்த கடந்த காலம்

1948ல் சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டை மாறி மாறி ஆண்ட அரசாங்கங்களின் தவறான அரசியல் கொள்கைகள், தவறான பொருளாதாரக் கொள்கைகள், தவறான முகாமைத்துவம், சகல மட்டத்திலும் ஊழல், சட்டமும் ஒழுங்கும் சீர்கேடடைந்தமை போன்ற இன்னோரன்ன காரணங்களின் விளைவாகவே இலங்கை இன்றைய ஓர் ஒட்டு மொத்த வங்குரோத்து நிலைக்கு வந்துசேர்ந்துள்ளது.

கடந்த 75 வருடங்களாக, ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மக்கள் தமது இறைமையை வாக்குகள் மூலம் ஆட்சியாளர்களுக்கு வழங்கித் தம்மை ஒடுக்குவதற்கான ஆயுதத்தை தாங்களே அவர்களிடம் வழங்கியுள்ளனர். ஆனால் இப்போது அந்த அரசியல் முறைமையை, அரசியல் கலாசாரத்தை மக்கள் தாங்களாகவே இனங்கண்டு வெறுக்கத் தொடங்கியுள்னர்.

மலையக தமிழ் மக்களின் வாக்குரிமைகளைப் பறித்ததில் ஆரம்பித்து, தமிழ் மொழி பேசுகின்ற மக்களுக்கு எதிரான இன ஒதுக்கல், இன ஒடுக்கல், மொழி ஒதுக்கல் கொள்கைகளும், அரச உறுதுணையோடு நடத்தப்பட்ட ‘இனக்கலவரங்களும்’, அதனைத் தொடர்ந்து முப்பது வருடங்களுக்கு மேலான யுத்தமும், முஸ்லீம் மக்கள் மீதான இன வெறுப்பும் தாக்குதலுமே நாட்டை ஆண்ட பிரதான கட்சிகளின் தொடர்ச்சியான “தேசிய அரசியலுக்கான” கொள்கையாக இருந்து வருகிறது.

அவர்கள் சமூகங்களுக்கிடையே பரஸ்பர சந்தேகங்களையும், எதிர்ப்புணர்வையும் தூண்டி மக்களை மோதவிட்டனர். இன, மத, மொழி, பிரதேச ரீதியாக என நாட்டின் தேசிய இனங்களைப் பிரித்தனர். தேசிய ஐக்கியமும், தேசியப் பொருளாதாரமும் சீரழிந்தது. நாடும் மக்களும் கடனாளிகளாக ஆக்கப்பட்டு, வறுமை, வேலையின்மை, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மை என்பன தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்​களாலையே உருவாக்கப்பட்டன.

‘சிறுபான்மை இனங்களால்தான் பெரும்பான்மை இனத்துக்கும், இலங்கைத் தேசியத்திற்கும், நாட்டின் இறைமைக்கும் ஆபத்து’ என்று அந்த அரசுகள் நடத்திய கடந்த 75 வருட நாசகார அரசியலால் நாட்டில் எந்த ஓர் இனத்திற்கும் விமோசனம் ஏற்படப் போவதில்லை என்பதை மக்கள் புரியத் தொடங்கியுள்ளனர்.

இலங்கைத் தேசியம், நாட்டின் பூகோள இறைமை, பொருளாதார இறைமை என்று ஏதாவது இன்று எஞ்சி இருக்கின்றதா என்று கேட்குமளவுக்கு நாட்டின் மனித வளம் உட்பட சகல வளங்களையும் மலிவு விலையில் கூவி விற்கும் வங்குரோத்து நிலைக்கு நாடு வந்திருப்பதைப் பற்றி தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் மட்டுமன்றி சிங்கள மக்களும் தமக்குள் மனந் திறந்து உரையாடும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் தெற்கே, பெரும்பான்மை சிங்கள மக்களால் நிகழ்த்தப்பட்ட ஜனநாயகப் போராட்டங்களும், இரு பெரும் ஆயுதக் கிளர்ச்சிகளும் அரச வன்முறைகளால் கொடூரமாக ஒடுக்கப்பட்டன. அதேபோல் தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் தமக்கான தேசிய, ஜனநாயக, அரசியல் மற்றும் மொழி உரிமைகளுக்காக அமைதி வழியிலும், அதில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக தமிழ் மக்கள் ஆயுதமேந்தியும் போராடியபோது அவர்கள் மீதும் அதே கொடிய சட்டங்களும் அரச வன்முறையும் பல மடங்கு மோசமான அளவில் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இந்த ஒடுக்குமுறை மூன்று தசாப்தங்களுக்கு மேலான கொடிய யுத்தமாக அந்த மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வந்தது. இலங்கையின் தெற்கிலும் வடக்கிலும் கொடிய சட்டங்களாலும், அரச வன்முறைகளாலும் நடத்தப்பட்ட ஒடுக்குமுறைகளின் விளைவாக சகல இனங்களையும் சேர்ந்த ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக் கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டனர், இன்னும் பல்லாயிரம் பேர் அங்கவீனர் ஆக்கப்பட்டும் இருக்கின்றனர். பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தமது சொந்த நாடான இலங்கையை விட்டு அகதிகளாக வெளியேறுவதற்கும் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பாராளுமன்ற ஜனநாயக அரசியற் பாதையில் இறங்கி நம்பிக்கை தரும் சக்தியாக வளர்ந்து இப்போது பிரதான அரங்குக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) கவனத்துக்குக் கொண்டுவருவதற்கு சில முன்மொழிவுகளை, மாற்றத்தைக் கோரிநிற்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் ஆகிய நாம் முன்வைக்க விரும்புகிறோம். இக் கோரிக்கைகள் நாட்டினதும், நாட்டு மக்களதும் எதிர்கால நலனின் அடிப்படையிலும், இலங்கைவாழ் எம் சொந்த மக்களது நலன்களின் மீதான அக்கறையிலும் இருந்தே முன்வைக்கப்படுகின்றன.

முதலில் தேசிய மக்கள் சக்தியின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் மதிப்புக்குரிய அனுரகுமார திஸாநாயக்க அவர்களது அண்மைய ரொறன்ரோ உரையில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக தமது அமைப்பின் நிலைப்பாடாக தெரிவித்த முக்கியமான கருத்துக்களுடன் எமது முன்வைப்பை ஆரம்பிப்பது பொருத்தமானது என்று நம்புகிறோம்.

அனுரகுமார திரு.திஸாநாயக்கவின் டொரோண்டோ உரையிலிருந்து…

எங்கள் நாட்டில் இனவாதம் என்பது ஒரு அரசியலே. இந்த இனவாத அரசியலை தோல்விகாணச் செய்ய வேண்டும். அதற்கு எதிர்மாறாக இன நல்லிணக்க அரசியலை தேசிய மக்கள் சக்தி செய்யும்.

பொதுவாக நாட்டிலே வாழ்கின்ற எல்லா மக்களும் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு மேலாக சிறுபான்மை மக்களுக்கே உரித்தான தனித்துவமான பிரச்சனைகளும் அவர்களுக்கு இருக்கிறது என்பதை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்கிறது.

நமது நாட்டின் பிரதான இரண்டு அரச மொழிகள் சிங்களமும் தமிழும். அப்படியானால் ஒர் அரசோடு கொடுக்கல் வாங்கல் செய்கின்ற பொழுது தங்களுடைய தாய் மொழியிலேயே அவர்கள் அந்தக் கொடுக்கல் வாங்கலை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். அந்த உரிமை அங்கு உறுதி செய்யப்பட வேண்டும்.

அவர்களுடைய பண்பாடு, கலை கலாச்சாரங்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். சட்டம், கல்வி, சமூக்க கருத்துகள் ஆகியவற்றின் மூலம் அவை பாதுகாக்கப்படவும் உறுதிப்படுத்தப்படவும் வேண்டும்.

திரு. சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றத்தில் ஒரு நாள் என்னுடைய இரண்டு கரங்களைப் பிடித்துக் கொண்டு சொன்னார். “அனுர, நான் ஒரு ஶ்ரீலங்கன் என்று சத்தம் போட்டு உலகத்திற்குச் சொல்ல விரும்புகிறேன், ஆனால் நான் இலங்கையில் ஒரு இரண்டாந்தரப் பிரஜையாக வாழ்வதை வெறுக்கிறேன்”.

எனவே, ஒருவருக்குத் தான் வழிபடுகின்ற மதம் அல்லது தான் பேசுகின்ற மொழி அல்லது தான் பின்பற்றுகின்ற கலாச்சாரத்தின் அடிப்படையில் அப்படி ஓர் உணர்வு ஏற்படுகிறது என்றால் அங்கு ஏதோ ஒரு பிரச்சினை இருக்கின்றது. அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே அவர்களுக்கு அரசியல், ஆட்சி அதிகாரம், சமூக செயற்பாடுகளில் நியாயமான முறையில் பங்கேற்பதற்கான அவர்களின் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். மத உரிமை, மொழி உரிமை, கலாச்சார உரிமை மட்டுமல்ல, அவர்களுடைய அரசியல் உரிமைகளும் கூட உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

13 ஆம் திருத்தச் சட்டம், மாகாண சபை தொடர்பாக எங்களுடைய நிலைப்பாடு மாகாண சபைகள் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு அல்ல என்பதே; ஆயினும் அந்த மாகாண சபைகள் என்பது அந்த குடிமக்கள் போராடிப்பெற்ற உரிமையாக இருக்கிறது. இந்த மாகாண சபை முறையில் இருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்த்து அது அவர்களுடைய உரிமையாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

வடக்கில் 30 வருடங்களாக யுத்தம் தான் இருந்தது. அது ஒரு முழு யுத்தம். அதனால் அவர்களின் 30 வருட வாழ்க்கை இல்லாமல் போய்விட்டது. அதன் காரணமாக அவர்களின் வாழ்க்கையில் பல்வேறு வாய்ப்புகளும் இல்லாமற் செய்யப்பட்டுள்ளன. எனவே குறிப்பாக வடக்கை மையப்படுத்தி அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.

தேசிய மக்கள் சக்தியிடம் (NPP) மாற்றத்திற்கான புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் முன்வைக்கும் மிக அடிப்படையான சில கோரிக்கைகள்

கடந்த காலத்தைப் போலல்லாது நாட்டில் சகல மக்களும் தத்தமது உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டு சமத்துவமாகவும், தத்தமது பிரதேசங்களில் அச்சமின்றியும், சுதந்திரமாகவும் வாழமுடியும் என்ற நம்பிக்கை மேலோங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி எவ்வாறான கொள்கைகளைப் பின்பற்றப் போகின்றது என்பதைச் சகல இன மக்களிடமும் பகிரங்கமாக முன்வைக்க வேண்டும்.

இனவாத, மதவாத, இன மோதல், இன ஒடுக்குமுறை அரசியலை நீக்குவதற்கும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கும் நீங்கள் முன்வைக்கும் தீர்வும் நடைமுறையும் என்ன என்பதையும் வெளிப்படையாக மக்கள் முன் வைக்க வேண்டும்.
200 வருடங்களாகியும் சொந்த நாட்டில் நவீன அடிமைகளாக, சொந்த முகவரியின்றி, சொந்த வீடுகள் இன்றி, ஒரு பிரதேச சபையைக் கூட பெற முடியாத மக்களாக இருக்கும் மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான உங்களின் தீர்வும் அதற்கான நடைமுறையும் என்ன என்பதைத் தெளிவாகவும் பகிரங்கமாகவும் முன் வைக்க வேண்டும்.

இவற்றைச் சிறுபான்மை மக்கள் முன் வைக்கும் அதேவேளை குறிப்பாக உங்கள் வெற்றிக்கான ஆணையை மக்களிடம் கோரும் போது இந்த விடயங்களை நாட்டின் 75 வீதமான பெரும்பான்மை மக்களின் முன்னும் வைத்தே இவை எல்லாவற்றுக்குமான ஆணையை நீங்கள் கோரவேண்டும்.

அது மட்டுமன்றி, அக்கருத்துக்கள் முழுமையாக அந்த மக்களுக்குப் புரியும் மொழிகளில் அவர்களிடம் எடுத்துச் செல்லப்பட வேண்டும். ஏனெனில், அண்மைக் காலமாக இந்த நவீன தொழில்நுட்பமும், சமூக வலைத்தளங்களும் பாவனைக்கு வரும்வரை மக்களுக்கு சகோதர மொழிகளில் இருந்த பரிச்சயம் இன்மையை இந்த கபட நாசகார அரசியல் சக்திகள் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வந்துள்ளன. இன்றும் அது தொடரவே செய்கின்றது! எனவே தேசிய மக்கள் சக்தி தமது கொள்கைகள், கருத்துகள், நிலைப்பாடுகள் அனைத்தையும் முழுமையாகவும் தெளிவாகவும், எத்தகைய மயக்கங்களும் அற்ற விதத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மக்களைச் சென்றடைகின்றன என்பதையிட்டு பிரக்ஞை பூர்வமாகச் செயற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மக்களே மாற்றத்துக்கான உந்துசக்திகள்!
மாற்றத்தின் வெற்றியே மக்களின் வெற்றி!!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அதானி நிறுவனத்தின் மன்னார், பூநகரி காற்றாலை மின்நிலைய திட்ட அனுமதி இடைநிறுத்தம்!

Pagetamil

ஜெய்சங்கரின் முன்பாக வெடித்தது தமிழ் அரசுக் கட்சியின் குழு மோதல்!

Pagetamil

தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கிறார் ஜெய்சங்கர்!

Pagetamil

உக்ரைனில் அமைதி திரும்ப முக்கிய நிபந்தனைகள்: புடின் அறிவிப்பு!

Pagetamil

‘யாழில் டெஸ்ட் மட்ச் கிரவுண்ட் இருக்கிறதா என ஏன் கேட்டேன்?’: சஜித் விளக்கம்!

Pagetamil

Leave a Comment