ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி கொழும்பு பகுதியில் கைது செய்யப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கொழும்பிலிருந்து வந்த விசேட பொலிஸ் குழுவினால் ஹலவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சகோதரர்களில் ஒருவர் வெளி மாகாணத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும், மற்றைய சகோதரர் கொழும்பில் உள்ள கொள்கலன் முற்றத்தில் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவர், பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருடன் தொடர்பில் இருந்த சகோதரர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்த இரு சகோதரர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசேட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த இரண்டு சகோதரர்களும் ஹலவத்தை பகுதியில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்த நிலையில் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரியவந்துள்ளது.