பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்கள் மத்தியிலேயே எதிர்ப்பு: விக்னேஸ்வரனிற்கு களநிலவரத்தை புரிய வைத்த ரணில்!

Date:

தமிழ் மக்கள் மத்தியில் பொதுவேட்பாளருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தமிழர் தரப்பில் ஒற்றுமையாக பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியுமா? பெயரை அறிவிக்க முடியுமா என ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் கேள்வியெழுப்பியதாக, பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தள்ளார்.

வடக்கிற்கு மூன்று நாள் பயணமாக யாழ்ப்பாணம் வந்து தங்கியுள்ள ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் சீ.வீ. விக்கினேஸ்வரனை நேற்று மாலை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து கலந்துரையாடினார்.

சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இச் சந்திப்பு தொடர்பில் விக்கினேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்-

யாழ்ப்பாணம் வந்துள்ள ஐனாபதி இன்று என்னை வந்து சந்தித்திருந்தார். அவர் வந்திருந்த கூட்டங்களுக்கே நான் போகவில்லை. இருந்தும் அவர் என்னை வந்து சந்தித்துள்ளதற்கு என்ன காரணம் என பலரும் நினைப்பார்கள்.

எனது உடல் நிலையை அறிந்து கொள்வதற்காக தான் வந்ததாக சொல்லியிருந்தார். அப்படியாகத் தான் சந்திப்பில் சில விடயங்கள் குறித்து பேசியிருந்தோம். ஆயினும் இதுவொரு அரசியல் சந்திப்பு என சொல்ல முடியாது.

வடகிழக்கு மக்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவது சம்பந்தமாக தான் அவரது கருத்துக்கள் இருந்தன. ஆனால் அரசியல் ரீதியான விடயங்கள் என்று வருகின்ற போதும் கூட அதனையும் பொருளாதாரத்திற்குள்ளேயே கொண்டு செல்ல பார்க்கிறார்.

இதனைத் தொடர்ந்து பொது வேட்பாளர் சம்பந்தமான பேச்சு வந்த போது நீங்கள் ஒரு பொது வேட்பாளரின் பெயரை தீர்மானிக்க முடியுமா என என்னிடம் அவர் கேட்டார். அதன் தொடராக உங்களால் அது முடியாது என்றவாறாக கதைத்தும் இருந்தார்.

அதாவது தமிழ் மக்கள் சேர்ந்து ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தக் கூடிய ஒற்றுமை அல்லது ஒருமித்த தீர்மானத்தை எடுக்கக்கூடிய தகுதி தகைமை இல்லை என்ற முறையில் பேசியிருந்தார்.

இவ்வாறு அவர் கூறிய போது நான் சிரித்துவிட்டு எனக்கு அதைப்பற்றி தெரியாது என்றும் அதற்கான குழுக்கள் யாரை நிறுத்துவது என்பது சம்பந்தமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனை அவர்கள் தான் தீர்மானித்து எங்களுக்கு கூற வேண்டும் என கூறியிருந்தேன்.

பொது வேட்பாளருக்கு ஒரு வாக்கு மற்றைய இரண்டாவது மூன்றாவது வாக்கை மற்றைய சிங்கள வேட்பாளருக்கு அளிப்பதையும் அவர் வரவேற்றார். ஆனால் எங்களால் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த முடியாது என்பது தான் அவருடைய ஒட்டுமொத்த எண்ணமாக இருந்தது. அது எங்களுக்கு ஓரு வெட்கக்கேடான ஒரு விடயம். அதை அவர் மனம்திறந்து சொல்லியிருந்தார்.

தான் இன்னுமொருமுறை பதவிக்கு வருவதென்றால் சிறுபான்மையினருடைய ஆதரவு தனக்கு கட்டாயம் தேவை என்பதையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் சிறுபான்மையினர் அவரிடம் எதிர்பார்க்கின்ற பலதையும் நான் சுட்டிக்காட்டினேன். அதற்கு அவர் மாகாண சபைத் தேர்தல்களை கட்டாயம் நடாத்தப் போகின்றார் என்றும் அதற்கு முதலில் ஐனாதிபதி தேர்தல் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் மாகாண சபைத் தேர்தல் என நடத்த உள்ளதாகவும் கூறினார்.

மாகாண சபையிலும் மத்தியிலும் இருப்பவர்களை சேர்த்து என்னென்ன விசயங்கள் நடைபெற வேண்டும் பொருளாதார ரீதியான விடயங்களை முன்னெடுப்பது சம்பந்தமாகவும் கதைத்தார்.

13 திருத்தச் சட்டம் சம்பந்தமாக நான் சிலவற்றை கூறினேன். அதாவது 13 ஆவது திருத்தத்தில் பொலிஸ் அதிகாரம் இல்லாமல் தான் 13 பற்றி நீங்கள் கூறினீர்கள். ஆனால் சஜித் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவேன் என்று கூறியிருக்கின்றார். எமது மக்களைப் பொறுத்தவரையுல் அந்த வேற்றுமை உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினேன்.

அப்படியில்லை. 13 பற்றி சஜித் கூறும் போது கூட 13 இல் பொலிஸ் அதிகாரத்தை உள்ளடக்கவில்லலை என்றவாறாகவே இவர் கூறியிருந்தார். அப்படி 13 ஆவதை முழுமையாக அமுல்படுத்துவது உங்கள் நிலைப்பாடு என அதனை சஜித்திடமே நேரடியாக சென்று கேளுங்கள் என்றார்.

ஆக இது சம்பந்தமாக இருவருக்கும் இடையில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லலை. ஆக மொத்தத்தில் இவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போலத் தான் எனக்கு தெரிகிறது.

அரசியல் ரீதியான ஒரு முன்னேற்றத்தை நாங்கள் பெறக் கூடாது இல்லது எங்களை நாங்கள் வலுவாக்கும் நடவடிக்கைகளில் இறங்க கூடாது என்பது போன்ற சிந்தனையில் அவர் உறுதியாக இருக்கின்றார். அவரை போலவே தெற்கிலுள்ள மற்றையவர்களும் உறுதியாகவே உள்ளனர்.

இதன் காரணமாகத் தான் ஒரு பொது வேட்பாளரைநிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். ஏனென்றால் தமிழ் மக்களுக்கு இவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் என்பது தேர்தல் முடிந்தவுடன் காற்றில் பறக்கப் போகின்றவை என்பது தெரியும்.

ஆகவே இந்த நிலை மாறவேண்டும். எங்களது நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் பொது வேட்பாளரை நிறுத்துகின்றோம். ஆனாலும் எங்களுடைய தமிழ் மக்கள் மத்தியிலும் சில சந்தேகங்கள் குழப்பங்கள் இருக்கின்றன.

ஆனால் அதனை தீர்த்துக் கொண்டு பொது வேட்பாளரை நிறுத்தும் பணியை முன்னெடுத்து செல்வோம். அதனால் பல நன்மைகள் எங்களுக்கு இருக்கின்றன. குறிப்பாக புலத்திலும் தாயகத்திலும் உள்ள எங்கள் மக்கள்ளிடத்தே ஒற்றுமையை நாங்கள் கொண்டு வர முடியும். எங்களுக்கு என்ன வேண்டும் என்பது சம்பந்தமாக சர்வதேச ரீதியாக தமிழ் மக்கள் நிலைப்பாடு தீர்ப்பை வெளிப்படுத்த முடியும்.

இலட்ச கணக்கில் தமிழ் மக்கள் இத்தேர்தலில் பொதுவேட்பளரை ஆதரித்தால் அது உலகத்திற்கு எங்களுடைய மனோ நிலையை அபிலாசைகளை வெளிக் கொணர்வதாக இருக்கும்.

இது மிக முக்கியமானதொன்று. ஆனால் அவர் இதனை சிரிப்போடு கடந்து சென்றுவிட்டார்.

வடக்கு கிழக்கு தனித்துவம் பற்றி தனியாக அவர் எதனையும் கூறவில்லை. இது இவர் மட்டுமல்ல எல்லலா சிங்கள அரசியல்வீதிகளம் அப்படிதான். ஆகவே எங்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்த பல திட்டங்கள் இருப்பதாக தான் கூறியதாக விக்கினேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி படுகொலைக்கு சர்வதேச கண்காணிப்புடன் விசாரணை கோரி மட்டு மாநகரசபையில் தீர்மானம்!

செம்மணி படுகொலைக்கு கண்டனமும் சர்வதேச நீதியான விசாரணை இலங்கை அரசு மேற்கொள்ள...

கஹவத்தை கொலையில் கைதான இருவருக்கும் விளக்கமறியல்

கஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில்...

வெளிநாட்டு பெண் மீது வெறிகொண்ட 81 வயது பிக்கு கைது!

ஹபரதுவ பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் 41 வயது நியூசிலாந்து பயணி ஒருவரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்