வாகன உரிமையை மாற்றாததற்காகவும், வாகனப் பதிவுச் சான்றிதழை எடுத்துச் செல்லாததற்காகவும் ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக குறிப்பிட்டு சமீபத்தில் சமூக ஊடகத்தில் பரவிவரும் வீடியோ பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதற்கு பதிலளிக்கும் வகையில், போலீசார் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
சப்ரகமுவ மாகாணத்தில் வாகனம் செலுத்தப்பட்டதாகவும், மத்திய மாகாணத்தை சேர்ந்த ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், வாகனத்தின் உரிமையை நிரூபிக்கும் ஆவணங்களை வழங்குமாறு போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒரு சாரதியிடம் கோருவது பரவலாகப் பரப்பப்பட்ட காணொளியில் காணப்பட்டது.
இந்த மாகாணங்களுக்கு இடையே வாகனம் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதா என்று சாரதி கேள்வி எழுப்பி, தான் எந்த போக்குவரத்து விதிமீறல்களையும் செய்யவில்லை என்று உறுதிபடுத்தினார்.
வாகன உரிமையை தற்போதைய உரிமையாளருக்கு மாற்றாதது குற்றம் என்று பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கினார்.
அப்படியாயின் வாடகைக்கு பெற்ற வாகனத்தை ஓட்ட முடியாதா என டிரைவர் வினவினார். அதற்கு பதிலளித்த பொலிஸ் உத்தியோகத்தர், அப்படியான வாகனத்தை செலுத்த முடியும், ஆனால் வாகன பதிவு சான்றிதழ் உட்பட தேவையான அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.
மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கும் போது வாகனப் பதிவுச் சான்றிதழை எடுத்துச் செல்வது கட்டாயமா என்பது குறித்து தெளிவுபடுத்துவதற்காக போக்குவரத்துப் பணிப்பாளர் எஸ்.எஸ்.பி மனோஜ் ரணகலவை கொழும்பு ஊடகமொன்று தொடர்பு கொண்டபோது, அது அவசியமில்லை என்று அவர் கூறினார்.
“செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம், காப்பீடு மற்றும் வருவாய் உரிமம் போன்ற தேவையான ஆவணங்களை வைத்திருந்தால், மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்வதற்கு அல்லது நாட்டில் எங்கும் செல்வதற்கு எவருக்கும் எந்த தடையும் இல்லை” என்று எஸ்எஸ்பி ரணகல கூறினார்.
வீடியோவில் உள்ள நபர் நிலைமையை குழப்புவதாகவும், வாகன உரிமையாளரின் உரிமம் மற்றும் காப்பீடு ஆகியவை வெவ்வேறு பெயர்களில் இருந்ததால், உரிமை மாற்றம் குறித்து பெண் அதிகாரி டிரைவரிடம் கேள்வி எழுப்பியதாகவும் விளக்கினார்.