28.1 C
Jaffna
June 21, 2024
இலங்கை கட்டுரை

மறுபடியுமா இந்தத் துரோகி – தியாகி நாடகம்?

♦ அ. குணபாலன்

தியாகி துரோகிப் பட்டம் கொடுக்கும் தலைமைப்பொறுப்பை இப்பொழுது திருவாளர் நிலாந்தன் ஏற்றுக் கொண்டுள்ளாரா? எல்லோரும் ஏறி விழுந்த கழுதையில் இப்பொழுது நிலாந்தன் அவர்கள் ஏறியிருக்கிறார்.

விடயம் இதுதான்.

“தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தைப் பற்றி எழுதுவோரும் கருத்துத் தெரிவிப்போரும் விளங்காத்தனமாக எழுதுகிறார்களா? இல்லாது விட்டால் எல்லாவற்றையும் விளங்கிக் கொண்டு, ஏதோ ஒரு சூதான அரசியல் உள்நோக்கத்தோடு யாருக்கோ தங்களுடைய விசுவாசத்தை நிரூபிப்பதற்காக எழுதுகிறார்களா?” என்றொரு அதியற்புதமான கேள்வியைத் தன்னுடைய கட்டுரை ஒன்றில் உச்சப் பதட்டத்தோடு எழுப்பியிருக்கிறார் தமிழ்த்தேசிய அரசியல் பத்தியாளரான நிலாந்தன் அவர்கள்.

இது ஒரு அபத்தமான, ஆபத்தான கருத்து ஆகும். முட்டாள்தனத்தின் உச்சத்தில் நின்றே நிலாந்தன் இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார். நிலாந்தன் சொன்னதை நாம் சற்று ஊன்றிக் கவனித்துப் பார்க்க வேண்டும். முதலாவது கேள்வியைப் பார்ப்போம். “பொதுவேட்பாளர் விடயத்தைப்பற்றி விளங்காத்தனமாகத்தான் எழுதுகிறார்களா?” என்று நிலாந்தன் கேட்கிறார்.

இதிலே ஒரு நக்கல் இருக்கிறது அல்லவா? பொதுவேட்பாளர் விடயத்தைப்பற்றிக் கருத்துச் சொல்ல வந்து விட்டீர்கள். அதைப்பற்றி உங்களுக்கு என்ன விளங்கும்? என்ற எள்ளல் இங்கே உள்ளது. அதாவது விளங்காத்தனமாக வந்து உளறிக் கொட்டுகிறீர்கள். விளக்கமில்லாமல் பேசிக் கொண்டு திரிகிறீர்கள் என்று பொதுவேட்பாளர் தெரிவை விமர்சிப்பவர்களையும் கேள்வி கேட்பவர்களையும் எள்ளி நகையாடுகிறார் நிலாந்தன் அவர்கள்.

தனக்கும் தன்னுடைய கருத்தை ஆதரிப்போருக்கும் மட்டும்தான் பொதுவேட்பாளர் விடயத்தைப் பற்றிய விளக்கம் தெரியும். மற்றவர்களுக்கு அதைப்பற்றித் தெரியாது. அவர்களால் இதையெல்லாம் விளங்கிக் கொள்ளவே முடியாது. அவர்களுக்கு அரசியல் அறிவோ அரசியலைப்பற்றி ஆய்வு செய்யக் கூடிய தகுதியோ கிடையாது. முட்டாள்கள். தமக்கே எதைப்பற்றியும் சிந்திக்கத் தகுதியுண்டு. தாங்கள்தான் அறிவுடைய “நம்பிகள்” என்று சொல்லுகிறார் நிலாந்தன். இது மாற்றுக் கருத்து உள்ளவர்களைக் கேலி செய்வது மட்டுமல்ல, அவர்களை நிராகரிப்புச் செய்கின்ற அதிகார மனதின் வெளிப்பாடாகும் அல்லவா! இந்த அதிகாரத்தை நிலாந்தன் அவர்களுக்குக் கொடுத்தது யார்?
யாரும் இந்த அதிகாரத்தை நிலாந்தன் அவர்களுக்குக் கொடுக்கவில்லை என்றால் அவர், தானே அந்த அதிகாரத்தை எடுத்துக் கொண்டுள்ளாரா? அப்படியானால் எந்த அடிப்படையில் அந்த அதிகாரக் கதிரையை அவர் தன்னுடைய காலடியில் வைத்திருக்கிறார்?

எல்லா இடங்களிலும் ஓடித்திரிந்து, தான் ஒரு அரசியல் அறிஞர் என்று நிரூபிப்பதற்காக கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சொல்லிக் கொண்டு திரிவதால் அந்த அதிகாரத்தை நிலாந்தன் அவர்கள் எடுத்துக் கொண்டுள்ளாரா?

ஒரு வகையில் இது அப்படித்தான் நடந்திருக்கும் என்றுதான் தெரிகிறது. ஏன் என்றால், எங்களுடைய அரசியல் தலைவர்கள் பலருக்கும் அரசியல் என்றால் என்ன என்று தெரியாத ஒரு நிலை இப்பொழுது உள்ளது. அவர்கள் அரசியலைப் படிப்பதில்லை. இணையத் தளங்களை மேலோட்டமாக மேய்வதும், பத்திரிகைகளின் செய்திகளைப் படிப்பதும்தான் அவர்களுடைய அரசியல் படிப்பாக உள்ளது. இப்படியான நிலையினால்தான் நிலாந்தன் போன்றவர்களின் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் இந்தத் தலைவர்கள் தங்களுடைய வேத வாக்காக எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை வந்தது. இதை நிலாந்தன் தனக்கு உரிய அதிகாரமாக எடுத்துக் கொண்டுள்ளார். ஆகவேதான் நிலாந்தன் அவர்களுக்கும் நிலாந்தனைப் போல உள்ள பேராசிரியர் கணேசலிங்கன், திருவாளர் யோதிலிங்கம் போன்ற ஆட்களுகுப் பின்னால் எமது தலைவர்கள் இழுபட வேண்டியதாக உள்ளது.

அடுத்ததாக இரண்டாவது கேள்வியைப் பார்ப்போம்.

“எல்லாவற்றையும் விளங்கிக் கொண்டு, ஏதோ ஒரு சூதான அரசியல் உள்நோக்கத்தோடு யாருக்கோ தங்களுடைய விசுவாசத்தை நிரூபிப்பதற்காக எழுதுகிறார்களா?” என்று கேட்கிறார் நிலாந்தன் அவர்கள்.

பொதுவேட்பாளர் என்ற தீர்மானத்தைப்பற்றிக் கேள்வி கேட்போரையும் விமர்சிப்போரையும் தீய அரசியல் நோக்கத்தோடு இயங்குகின்றவர்கள். சூதான – கள்ள எண்ணத்தோடு இயங்குகின்றவர்கள், மக்களுக்கு எதிரான ஆட்கள் என்று கேட்பது போலக் கேட்டுச் சூதான முறையில் துரோகிகளாகக் குற்றம்சாட்டுகிறார். அது மட்டுமில்லை, “யாருக்கோ தங்களுடைய விசுவாசத்தை நிரூபிப்பதற்காக எழுதுகிறார்களா?” என்று கேட்கிறார்.

இதனுடைய அர்த்தம் என்ன?

அரசாங்கத்துக்கோ அல்லது வெளிச்சக்திகளுக்கோ ஆதரவாக இவர்கள் செயற்படுகிறார்கள் என்பதுதானே! அல்லது யாரோ ஒரு சிங்கள வேட்பாளருக்கு ஆதரவாக இயங்குகிறார்கள் என்றுதானே சொல்ல வருகிறார் நிலாந்தன். அப்பிடியில்லை என்றால் ஏதாவது ஒரு வெளிநாட்டுச் சக்திக்கு இந்த மாற்றுக் கருத்தாளர்கள் ஆதரவாக இருக்கிறார்கள் என்றுதானே.

அப்படியென்றால், தமிழர்களைக் காட்டிக் கொடுப்பவர்கள். தமிழ் மக்களுடைய தேசிய அரசியல் உரிமைக்கும் அபிலாஷைக்கும் எதிரானதாகச் செயற்படுகின்றோர் இந்தப் பொது வேட்பாளரை எதிர்க்கின்றவர்கள் என்றுதானே சொல்ல வருகிறார்?

ஆகவே இவர்கள் எல்லாம் துரோகிகளே என்று அர்த்தப்படுத்த விளைகிறார் நிலாந்தன் அவர்கள். இப்படியான சந்தேகங்களைக் கிளப்பி, அதையெல்லாம் குற்றச்சாட்டுகளாக்கி, துரோக முத்திரை குத்தியதுதானே ஏற்கனவே புலிகள் செய்த வரலாறாகும். அதே வேலையைத்தான் இப்போது சூதான முறையில் நிலாந்தன் அவர்களும் செய்கிறார்.

இதை நாம் சுருக்கமாகச் சொல்லுவோமானால், மாற்றுக் கருத்துள்ளோரையெல்லாம் துரோகிகளாக்கும் அதே வேலையைத்தான் நிலாந்தன் அவர்களும் செய்கிறார். இவ்வளவு காலமும் தன்னை ஒரு ஜனநாயகவாதி என்றும் மாற்றுக் கருத்துள்ளோரை மதித்து நடப்பவர் என்றும் அதி அறிவுசாலி என்றும் காட்டி வந்த பிம்பங்கள் எல்லாவற்றையும் இப்போது நிலாந்தனே கிழித்து எறிந்துள்ளார்.

குதிருக்குள் மறைந்திருந்த எலி குதித்து ஓடுகிறது.

இப்போதுதான் நிலாந்தன் அவர்களுடைய உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது. ஆகவே நிலாந்தனும் துரோகி – தியாகி என்ற வாய்ப்பாட்டுக்குள்ளேயே இறுதியில் வந்து சேர்ந்துள்ளார். அவர் இவ்வளவு காலமும் சொல்லி வந்த சாம்பல் நிற அரசியலும் ஜனநாயக அடிப்படைகளும் பொதுவேட்பாளர் பதட்டத்தோடு காணாமலே போய் விட்டன போலும். அவரே சொன்ன கோட்பாட்டை அவரே அழித்து விட்டார். ஐயோ, உண்மையான முகம் வெளிப்பட்டு விட்டது.

இதை நீங்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளுவதற்குத் தயங்கினால், தயவு செய்து நிலாந்தன் அவர்கள் தன்னுடைய கட்டுரையில் தொடர்ந்தும் எழுதும் அடுத்த வரிகளைப் படித்துப் பாருங்கள்.

“தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தமிழ் அரசியல்வாதிகளையும் ஊடகங்களையும் மிகத் தெளிவாக வகிடு பிரித்துக் காட்டுகிறது. அரசியல்வாதிகள்,ஊடகங்கள், யுடியுப்கள் போன்றவை யாருக்கு விசுவாசமாக இருக்கின்றன என்பதனை அது தெளிவாகக் காட்டுகின்றது. தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்க்கின்ற பலரும் எங்கேயோ ஒரு விசுவாசப் புள்ளியில் சந்திக்கிறார்கள். அவர்கள் வெளித்தோற்றத்துக்கு ஆளுக்காள் தொடர்பற்ற உதிரிகளாகத் தோன்றலாம். ஆனால் அவர்களில் பலர் ஏதோ ஒரு தரப்புக்கு விசுவாசமானவர்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது”

பொதுவேட்பாளர் விடயத்தை ஆதரிப்போரெல்லாம் தியாகிகள். எதிர்க்கின்றோர் எல்லாம் துரோகிகள். அதை “வகிடு“ பிரித்து இந்த எதிர்க் கருத்துகள் காட்டுகிறதாம்! தெய்வமே… இதென்ன கொடுமை?

ஆஹா… அருமையாக இருக்கிறது நிலாந்தன் அவர்களுடைய உபதேசம்.

இது துரோக முத்திரையை முகத்திலே ஓங்கி குத்துவதாக இல்லாமல் வேறு என்னவாம்? தங்களுடைய கருத்தை எதிர்ப்பவர்கள் எல்லோரும் அந்நிய விசுவாசிகள்….துரோகிகள், மக்களுக்கு எதிரானவர்கள்….

என்ன ஐயா உங்களுடைய ஊடக தர்மம்? என்னதான் உங்களுடைய ஜனநாயக விழுமியம்? என்ன மாதிரி இருக்கிறது உங்களுடைய கருத்துச் சுதந்திரம்? அப்பப்பா, புல்லரிக்கிறது. சாம்பல் அரசியல் எப்படி ஐயா, கறுப்பு – வெள்ளையாகியது?

உண்மையில் கறுப்பு – வெள்ளை அரசியலில்தான் நீங்கள் இவ்வளவு காலமும் கம்பு சுத்திக் கொண்டிருந்திருக்கிறீர்கள். அதை மறைப்பதற்காக சாம்பலை அள்ளிப் பூசினீர்கள். எத்தனை காலத்துக்குத்தான் உலகத்தை ஏய்க்க முடியும்? உண்மை ஒரு நாள் வெளிவரும் என்று சொல்லுவார்கள். அந்த உண்மை இப்போது வெளியாகி வந்திருக்கிறது.

இதைவிட மேலும் ஒரு உண்மையையும் நிலாந்தனுடைய புலனாய்வு மூளை கண்டு பிடித்திருக்கிறது “இதில் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலரும் அடங்குவர்”.

தெய்வமே, இதையெல்லாம் எப்படித்தான் சொல்லுவது?

நிலாந்தன் அவர்கள் செய்திருக்க வேண்டியது என்ன என்றால், தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்துவதால் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதேயாகும். அதற்கு இதுவரையிலும் நிலாந்தன் அவர்களும் பொது வேட்பாளரை ஆதரிப்போரும் சொல்லும் நியாயங்கள் பலவீனமானவை ஆகும். அவற்றில் எந்தப் புதிய – பலமான உள்ளடக்கமும் இல்லை. அதைப் பலமாக்குதை விட்டு விட்டு, மறுத்துக் கருத்துச் சொல்வோரை எதிரிகள், துரோகிகள் என்ற மாதிரிச் சொல்ல முற்படுவது நல்லதல்ல.

நிலாந்தன் தொடர்ந்து சொல்லுவதைப் பார்ப்போம். அதுவும் நிலாந்தன் அவர்களுடைய ஒரு புதிய கண்டு பிடிப்பாகத்தான் உள்ளது.

“கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் வளர்ச்சியை விடவும் தேய்மானமே அதிகம்.பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறிய கூட்டுக்கள் தோன்றியுள்ளன.கட்சிகள் உடைந்து கொண்டே போகின்றன. மக்கள் அமைப்புகள் தோன்றிப் பின் சோர்ந்து விடுகின்றன”

இதைச் சொல்லும்போது நிலாந்தன் அவர்களுடைய மனச்சாட்சி எப்படி இருந்தது என்று அறிய ஆசைப்படுகிறேன்!

ஏன் என்றால், இப்போதுதான் நிலாந்தன் தூக்கம் விட்டுத் துடித்துப் பதைத்து விழித்து எழுந்திருக்கிறாரா? கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கட்சிகளோடும் தலைவர்களோடும் கூடித்திரிந்திருந்திருக்கிறார் நிலாந்தன் அவர்கள். அதற்கு பல ஊடகக் காட்சிகளே சாட்சியமாக உள்ளது. அதை நான் ஆதாரமாக இங்கே வைக்க முடியும். தமிழ்த்தேசியக் கட்சிகளின் மேடைகளில் பல தடவை தோன்றி நிலாந்தன் அவர்கள் மக்களுக்கு அறிவுரைத்திருக்கிறார். தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர்கள் தொடக்கம் தொண்டர்கள் வரையில் பலருக்கும் ஆலோசனை கூறி வந்திருக்கிறார். இவை எல்லாவற்றுக்கும் சிகரமாக நிலாந்தன் அவர்கள் பல பத்திரிகைகளிலும் இணையத் தளங்களிலும் தொடர்ந்து எழுதி வந்த பத்திக் கட்டுரைகள் சாட்சியாக இருக்கின்றனவே.

அதை விட யுடியுப், தொலைக்காட்சி போன்ற காட்சி ஊடகங்களிலும் தமிழ்த் தேசியக் கட்சிகளையும் தமிழீழ மக்களையும் பலப்படுத்துவதற்காகவே பேசி வந்திருக்கிறார்.
இது போதாது என்று தமிழீழ மக்கள் பேரவையை தன்னுடைய சகாக்களோடு சேர்ந்து உருவாக்கினார். அது என்ன செய்தது என்று நிலாந்தன் அவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இப்படியெல்லாம் செய்தும் அந்தத் தமிழ் அரசியற் கழுதை உருப்படவில்லை என்றால் அதை என்னதான் செய்ய முடியும்?

“2009க்கு பின்னிருந்து தமிழ் கூட்டு மனோநிலை என்பது கொந்தளிப்பானதாக காணப்படுகிறது. யாரையும் நம்ப முடியாத சந்தேகப் பிராணிகளாக தமிழ் மக்கள் மாறிவருகிறார்கள்.எல்லாவற்றுக்கு பின்னாலும் சதிகளையும் சூழ்ச்சிகளையும் தேடும் ஒரு மக்கள் கூட்டமாக மாறி வருகிறார்கள்”.

இது நிலாந்தன் அவர்களின் இன்னும் ஒரு அருமையான கண்டு பிடிப்பு ஆகும்.
ஆம், இதை உண்மை என்றே எடுத்துக் கொள்வோம். இதில் திருவாளர் நிலாந்தன் அவர்களும் உள்ளடங்குவார் அல்லவா. நீங்கள் சொன்னதையெல்லாம் நம்பிய மக்களுக்கு என்ன நன்மைகளும் முன்னேற்றங்களும் கிடைத்திருக்கின்றன என்று சொல்லுங்கள் நிலாந்தன் அவர்களே!

ஆகவே மக்கள் உங்களை இனியும் நம்பமாட்டார்கள்தானே!

ஏனென்றால் தமிழ் மக்களின் விடுதலை என்ற பேரிலும் தமிழ்த் தேசியம் என்ற பேரிலும் அரசியற் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் உங்களைப் போன்றவர்களும் செய்து கொண்டிருக்கிற நடவடிக்கைகள் எதையும் மக்கள் நம்பவில்லை. அல்லது அவர்களிடம் அந்த நம்பிக்கையை இழந்து விட்டீர்கள் என்றால் அதற்கு யார் பொறுப்பு?
நீங்கள் எல்லோரும்தானே!

நானும் தமிழ்த்தேசியக் கருத்தியலை ஆதரிக்கின்றவன்தான். எனக்கும் எமது மக்கள் விடுதலையைப் பெற வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. ஆனால், அதற்காக நாங்கள் சொல்வதெல்லாம் சரி என்று எண்ணிக் கொண்டு மக்களின் மீது நாங்கள் நினைப்பதை எல்லாம் திணிக்கக் கூடாது என்று கருதுகிறேன்.

இதுவரையில் நடந்த சேதங்களுக்கும் பின்னடைவுகளுக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் தமிழ்த்தேசியவாதிகளாக இருக்கின்ற நாமும்தானே அதற்குப் பொறுப்பாகும்? பொதுவேட்பாளர் தெரிவைச் சாதகமாகப் பரிசீலித்தால் என்ன என்று சிந்திக்கும் ஒருவன்தான் நானும். ஆனால், அது சரியானது என்ற முடிவுக்கு இன்னும் நான் வரவில்லை. அது வேறு விடயம். அதை நாம் தெளிவாக விவாதத்துக்கு உட்படுத்தியே ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டும் என எண்ணுகிறேன். அதற்காக அவசரப்பட்டு ஆதரவு – எதிர்ப்பு என்ற கறுப்பு – வெள்ளைப் பொறிக்குள் நான் விழுவதற்குத் தயாரில்லை. நான் ஆதரிக்கின்ற அரசியற் கட்சி பொது வேட்பாளர் தெரிவைச் சாதகமாகப் பரிசீலிக்கும் முடிவில் உள்ளது. அதைப்பற்றி நான் அங்கே கேள்வி எழுப்பியுள்ளேன்.

இருந்தாலும் கடந்த காலத்தில் நாம் என்ன செய்தோம் என்பதை ஒரு நிமிடம் திரு. நிலாந்தன் அவர்களும் நானும் ஏனைய தமிழ்த்தேசியவாதிகளாக இருப்போரும் சிந்தித்துப்பார்ப்போம்.

2010 ஆம் ஆண்டு, நாம் அனைவரும் இணைந்து நின்றே சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளாராக ஆதரித்தோம் அல்லவா. ஆனால், ஒருபோதுமே தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பற்றி சரத் பொன்சேகா ஆதரவாக எங்கேயும் எந்தக் கருத்தையும் சொன்னதில்லை. இப்போது கூட அவர் தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளைப் பற்றிப் பேசுவதற்கு தயாராக இல்லை என்றே தெரிகிறது.

அதைப்போன்றே 2015 ஆம் ஆண்டு தமிழ்த்தேசியவாதிகளாக நாம் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்தோம். மைத்திரிபால சிறிசேனவும் ரணிலும் இணைந்த அந்த ஆட்சியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் இணைந்து இருந்தது என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒரு உண்மையாகும்.

ஆனால் அதனாலும் எமது மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடைத்தது இல்லை. இவை அனைத்தும் தவறு என்று இப்பொழுது சொல்கிறோம்.

இதனால் அப்போதைக்கு ஒரு நிலைப்பாடு என்று அதிரடி முவுகளை எடுக்கிற, இப்படியானவர்களை நம்ப முடியாது என்றுதானே மக்கள் சொல்வார்கள்?
இதற்காக நாம் மக்களைக் குறை கூறுவது நியாயம் ஆகுமா? நாங்கள் எப்போதும் எங்களுடைய தவறுகளைப் ஏற்றுக் கொள்ளாமல் மற்றவர்களின் தலையில் அதைச் சுமத்தி வந்த பழக்கத்தையே திருவாளர் நிலாந்தன் அவர்களும் செய்கிறார். இது அறிவுவாதியாகத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் திரு. நிலாந்தன் அவர்களுக்கு நல்லது அல்ல என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

இதை எல்லாம் விட இன்னும் ஒரு அற்புதமான கண்டு பிடிப்பைச் சொல்கிறார் திரு. நிலாந்தன் அவர்கள்.

“தமிழ் மக்களை வடக்கு கிழக்காய் சமயமாய் சாதியாய் இன்னபிறவாய் சிதறடிக்க விரும்பும் சக்திகள் தமிழ் மக்களாலேயே தெரிந்தெடுக்கப்படுகின்றன” என்று சொல்கிறார்.

இதற்கு ஒரேயொரு வரியில் பதில் சொல்லி விடுகிறேன்.

இப்படிப் பிரித்துப் பார்ப்பது யார்?

நாம்தானே!

நிலாந்தன் அவர்களே, நீங்கள் சாதியத்தைக் கடந்து விட்டீர்களா? அல்லது வடக்கு கிழக்கு என்ற வேறுபாட்டை மீறித்தான் நிற்கிறீர்களா? கட்சி பேதமில்லாமல் எல்லாக் கட்சிகளையும் ஒரே மாதிரிப் பார்க்கிறீர்களா? யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே வந்து வன்னியிலும் எமது கிழக்கு மாகாணத்திலும் இரண்டு மாதங்களுக்காவது தங்கி நின்று களப்பணி எதையாவது செய்யத் தயாரா?

கனடாவுக்கோ ஐரோப்பிய நாடுகளுக்கோ பயணம் செய்யத் தயாராக இருக்கிற நிலாந்தன் அவர்கள், இந்தப் பிரதேசங்களுக்கு வந்து நின்று பணி செய்ய முடியாது என்பதே என்னுடைய கணிப்பாகும். முடிந்தால் நிலாந்தன் அவர்கள் அதைச் செய்து காட்ட வேண்டும்

எந்தச் சமாளிப்பும் செய்யாமல் வெளிப்படையாக இதற்கு உண்மையான பதிலை நிலாந்தன் அவர்கள் சொல்ல வேண்டும் என்று தாழ்மையாகக் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

மக்கள் அங்கயன் ராமநாதன், வியாழேந்திரன், டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் போன்றவர்களையெல்லாம் தமது அரசியல் தலைவர்களாகத் தேர்ந்து எடுக்கிறார்கள் என்றால், நாங்கள் எங்கே நிற்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். எங்களுடைய அரசியில் செல்நெறியை ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும். அதைப்பற்றியே நாம் சிந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆனபடியால் நிலாந்தன் அவர்கள் அவரப்பட்டு, பொதுவேட்பாளர் என்ற கருத்தை உருவாக்கிய தன்னுடைய ஞானத்தந்தையாகிய மு. திருநாவுக்கரசு அவர்களுடைய அரசியல் சிந்தனைக்குப் பலியாடாகக் கூடாது. மு. திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்து கொண்டு பெரும்பிழையான அரசியல் வழிகாட்டல்களைச் செய்து கொண்டிருக்கிற ஒருவராகும். அவர் ஏற்கனவே சொன்ன பல எதிர்வு கூறுதல்கள் பொய்த்துப் போனதே வரலாறாகும். ஆனாலும் அவருக்கு அதைப் பற்றிய வெட்கமோ ரோசமோ இல்லை. இதனால் தன்னுடைய கருத்துகளைப் பகிரங்க வெளியில் வந்து மு. திருநாவுக்கரசு ஒருநாளும் விவாதிக்க மாட்டார்.

பொதுவேட்பாளர் என்ற அருமையான கண்டு பிடிப்பை தமிழ்நாட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் மு. திருநாவுக்கரசுதான் கண்டு பிடித்துச் சொன்னார் என்று நிலாந்தனே தன்னுடைய கட்டுரையொன்றில் துலம்பரமாகச் சொல்லியிருக்கிறார்.
தமிழ் மக்களை நட்டாற்றில் முதலில் விட்டது, இலங்கை அரசாங்கமாகும். பிறகு ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சியாகும். அதுக்குப் பிறகு ரணில் – மைத்திரி கூட்டு அரசாங்கமாகும்.

அதற்கு சரி சமனாக தமிழ் அரசியல்வாதிகளும் அவற்றை ஆதரித்து நிற்கின்ற நிலாந்தன் போன்றோருமே தமிழ் மக்களை நட்டாற்றில் விடும் அரசியலைச் செய்து வருகிறார்கள். இது யாருடைய நிகழ்ச்சி நிரலில் நடக்கிறது? பேரினவாதிகளுக்கு வாய்ப்பை அளிக்கும் விதமாக அரசியற் காய்களை நகர்த்துவது நிச்சயமாக எதிரிகளின் நிகழ்ச்சி நிரலில் ஆகத்தானே இருக்க வேண்டும்!

இந்த ஆபத்தை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பிரதான வேட்பாளர்கள் 13ஐ ஏற்பதால், மாகாணசபை தேர்தலை உடன் நடத்த வேண்டும்!

Pagetamil

யாழ் பல்கலைக்கழக வாயிலை மூடி சத்தியாகிரக போராட்டம்

Pagetamil

‘விக்னேஸ்வரன் ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டு எதையெதையோ எல்லாம் பேசுகிறார்’: ஆனந்தசங்கரி விமர்சனம்!

Pagetamil

இலங்கை வந்தடைந்தார் ஜெய்சங்கர்

Pagetamil

பூனைக்கு சிகிச்சையளிக்க முடியாது!

Pagetamil

Leave a Comment