Site icon Pagetamil

UPDATE: பொலிசாரிடமிருந்து தப்பியோடிய மின்சாரசபை ஊழியர் மின் கம்பத்தில் மோதி பலி: மதுபோதையிலிருந்ததால் தப்பியோடினாரா?

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு நேற்று (10) இரவு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியகியுள்ளன.

கிளிநொச்சி மின்சார சபையில் பணியாற்றும் உரும்பிராயைச் சேர்ந்த செல்வநாயகம் பிரதீபன் என்ற 41 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

தனது பெற்றோர் வீடு அமைந்துள்ள பகுதியிலிருந்து கோப்பாயிலுள்ள சகோதரி வீட்டில் இறரு உறங்குவதற்காக சென்று கொண்டிருந்த போது, பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை மறித்துள்ளனர்.

எனினும், குறித்த நபர் தொடர்ந்து பயணிக்கவே விரட்டி சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த நபர் பயணித்த மோட்டார் வண்டியை உதைந்து விழுத்தியதில் குறித்த நபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினார். எனினும், பொலிசார் மறுத்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவுள்ளது.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன்
சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் மதுபோதையில் இருந்தார்களா என்பது தொடர்பில் ஆராய, நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பொலிசார் இருவரும் மதுஅருந்தியிருக்கவில்லையென்பது உறுதி செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிசார் விரட்டிச் சென்ற போதும், பொலிசார் தப்பியோடிய மோட்டார் சைக்கிளை நெருங்குவதற்கு முன்னதாகவே மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் உடமையில் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்துள்ளன. அவர் எதற்காக பொலிசாரை கண்டதும் தப்பியோடினார், மதுபோதையில் இருந்தாரா என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்தவர் மதுப்பழக்கமுள்ளவர் என்றும் தெரிய வந்துள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர் இந்த விடயம் இன்று தெரிய வரும்.

Exit mobile version