முக்கியச் செய்திகள்

தோல்வியடைந்த அரசியல்வாதிகளின் தமிழ் பொதுவேட்பாளரின் அபாயங்களும், சாத்தியமின்மைகளும்!

பொதுவேட்பாளர் பற்றி சமூகத்தில் என்ன நிலைப்பாடுள்ளது என்பதை அறிய, கடந்த சில நாட்களாக சலூன், பொதுச்சந்தை போன்ற இடங்களுக்கு சென்ற போது சிலருடன் பேச்சுக் கொடுத்தேன். சாதாரண பொதுமக்களில் சிலருக்கு பொதுவேட்பாளர் விவகாரம் என்னவென்றே தெரிந்திருக்கவில்லை. தேர்தல் நடத்த நிதியில்லாததால் கட்சிகள் எல்லாம் இணைந்து பொதுவான ஒருவரை தெரிவு செய்யப் போகிறார்களா என சிலர் அப்பாவியாக கேட்டார்கள். மற்றும் பலருக்கு இந்த விவகாரங்களில் ஆர்வமேயில்லை.

இதேநாட்களில், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் முக்கிய பிரமுகர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது, “சமூகத்தில் இப்பொழுது பொதுவேட்பாளர் பற்றிய உரையாடல் ஆரம்பித்துள்ளது. எல்லா தரப்பினரும் பொதுவேட்பாளர் விவகாரத்தில் சாதகமாக சிந்திக்கிறார்கள்“ என்றார்.

ஈ.பி.ஆர்.எல் அமைப்பின் வரலாற்று பாத்திரத்தின் விளைவாக, அந்த அமைப்பு நாடாளுமன்ற அங்கத்துவத்தை கொண்டிருக்க வேண்டுமென்பது எனது தனிப்பட்ட விருப்பம். ஆனாலும், அந்த கட்சி ஏன் நாடாளுமன்ற அங்கத்துவத்தை கொண்டிருக்கவில்லையென்ற சந்தேகம் இப்பொழுது எனக்கு தீர்ந்து விட்டது என்றேன். அந்த பிரமுகருக்கு அது பிடிக்கவில்லை. அதனால் அவரது பெயரை குறிப்பிடவில்லை.

பொதுவேட்பாளர் விவகாரம் சமூகத்தில் உரையாடலாக ஆரம்பித்து விட்டது என்ற கருத்து, 2010 பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வடக்கில் பெருமளவு ஆசனத்தை கைப்பற்றும் என்ற பேஸ்புக் கருத்தை ஒத்ததே.

பத்திரிகைகளில் கட்டுரை எழுதும் ஓரிருவரும், அவர்களுடன் கிரமமாக தொலைபேசியில் பேசும் அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலரும், இந்த வட்டாரங்களில் உலாவும்- வெளிநாட்டு தூதரகங்களில் திட்ட வரைபை சமர்ப்பித்து பணம் பெறும்- சிவில் சமூகமென்ற பெயரிலான விரல் விட்டு எண்ணக்கத்தகவர்களும், சில அரசியல்வாதிகளும், சில ஊடகங்களுமான சிறிய எண்ணிக்கையானவர்களை கொண்ட பரப்பில் பேசப்படும்- விவாதிக்கப்படும் விடயங்களை- சமூகத்தின் கருத்தாக கற்பனை செய்து கொள்ளும் மாய உலகத்தில் வாழ்பவர்களின் சிந்தனை அது.

தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்து கோட்பாட்டளவில் மிகச்சிறந்தது என்பதையும் முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், அந்த கோட்பாட்டை பிரயோகிக்க்கூடிய களம் இங்கில்லையென்பதே துரதிஸ்டவசமான யதார்த்தம். நோயுற்ற ஒருவருக்கு சிகிச்சையளிக்க மருந்து இருந்தாலும், அந்த மருந்தை ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் நோயாளியின் உடல் நிலையிருந்தாலே அதனை செலுத்தி, அவரை குணப்படுத்த முடியும். அல்லது, அந்த நோயை குணப்படுத்த செலுத்த மருந்தினாலேயே நோயாளி இறக்கும் விபரீதம் நேரலாம்.

தமிழ் மக்களின் நிலைமையும் அதுதான்.

ஈழத்தமிழர்கள் நீண்டபல வருடங்களாக போராடினாலும், அது ஒரு சமூகப் போராட்டமாக இருந்ததா என்ற கேள்வியுள்ளது. பெரும்பாலானவர்கள் தமிழீழத்தை ஆதரித்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தமிழீழமும் வேண்டும், பிள்ளைகளுக்கு மேற்கு நாடுகளின் குடியுரிமையும் வேண்டுமென்பதே கணிசமான மக்களின் மனநிலை. இறுதி யுத்தம் ஆரம்பித்த போது புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்கள், புலிகளின் கட்டுப்பாட்டுக்கு வெளியில் வாழ்ந்த மக்கள், புலம்பெயர்ந்தவர்கள் பற்றிய எண்ணிக்கையை கணக்கிட்டால், மக்களின் மனநிலை பற்றிய புரிதலை பெறலாம்.

வடக்கு கிழக்கில் அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை மிகப்பெரும்பாலானவர்கள் ஆதரிக்கிறார்கள்தான். ஆனால், எல்லா போராட்ட இடங்களிலும் விரல் விட்டு எண்ணத்தக்க சிலர்தான் நிற்பார்கள். இது நமது மக்களின் மனநிலை பற்றி அறிந்துகொள்ள வேண்டிய பாலபாடம்.

மற்றையது, இப்படியாக கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக இருக்கும் தமிழர்கள் எப்பொழுதும் கோட்பாட்டு ரீதியாக சிந்திக்காமல் உணர்வுரீதியாகவே சிந்திப்பார்கள்.

இப்பொழுது, பொதுவேட்பாளர் விவகாரத்தில் கோட்பாட்டு விளக்கங்கள் கொடுப்பவர்கள், இந்தவகை விளக்கங்களை ஈழத்தமிழ் வரலாற்றில் முதலாவதாக கொடுத்தவர்கள் தாங்கள் அல்லவென்பதையும் அறிந்திருக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் கோட்பாட்டு ரீதியாக வாக்களிப்பவர்கள் எனில், 1981 ஜனாதிபதி தேர்தலில் குமார் பொன்னம்பலத்தின் தோல்வி, இவ்வளவு கறைபடிந்ததாக இருந்திருக்காது.

2010 இல் பொன்சேகாவையும், 2015 இல் மைத்திரியையும் ஆதரித்திருக்க மாட்டார்கள்.

பாராளுமன்ற தேர்தல்களை இங்குள்ள அரசியல் கட்சிகளை மையப்படுத்தி அணுகினாலும், ஜனாதிபதி தேர்தலை அந்த சூழ்நிலையில் போட்டியிடும் வேட்பாளர்களையும், களச்சூழலையும் கொண்டே அணுகுவார்கள். சமூகம் இயங்கும் விதம் பற்றிய புரிதல் இது.

பொதுவேட்பாளர் அவசியமில்லையென கடந்தமுறை ஒரு கட்டுரை எழுதியபோது, பொதுவேட்பாளருக்காக தீயாக வேலை செய்யும் ஒருவர் (தன்னை சிவில் சமூக பிரதிநிதி என்றுதான் அழைக்கிறார்) தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சமூகம் அப்படியிருக்கிறது என பிழையான முடிவுகளை எடுக்க முடியாது, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமல்லவா என்றார்.

உண்மைதான். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தத்தான் வேண்டும். அதை இந்த தரப்புக்களால் ஏற்படுத்த முடியுமா? மாற்றத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பமா இது?

யுத்தத்தின் பின்னான கடந்த 15 வருடங்களில் தமிழ் தேசிய கட்சிகளின் வாக்கு வங்கி வெகுவாக சுருங்கி விட்டது. இன்றைய சூழலில் தமிழ் தேசிய கட்சிகளுக்கும், அப்படி அடையாளப்படுத்தப்படாத கட்சிகளுக்கும் ஏறத்தாள சமஅளவான வாக்கு வங்கியே உள்ளது. இதற்காக தமிழ் மக்கள் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இல்லையென அர்த்தம் கொள்ள முடியாது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி அங்கஜன் இராமநாதனும், தன்னையொரு தமிழ் தேசிவாதியாக காட்டி, விடுதலைப் புலிகளின் பாடல்களை ஒலிக்கவிட்டே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். யார் தமிழ் தேசியவாதி, எது தமிழ் தேசிய கட்சி, தமிழ் தேசியம் என்பது எது என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டதே இதற்கு காரணம். தமிழ் தேசிய கட்சிகளென கூறிக்கொண்டவர்களின் கோமாளிக்கூத்துக்களும், செயல்திறனின்மையும், மக்களை ஏமாற்றும் அரசாங்கங்களுடனான இரகசிய உறவுகளுமே இந்த விபரீத நிலைமைக்கு காரணம்.

இப்பொழுது மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அப்படி ஏற்படுத்தப் போவதாக கூறுவதும், திருட்டுத்தனமானது. இந்த தரப்புக்கள் தம்மில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், மக்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

இப்பொழுது தமிழ் தரப்பின் முன்னாலுள்ள ஒரேயொரு தேவை- தமிழ் தேசிய கட்சிகள், தம்மை நிரூபிப்பதே. எப்பொழுதும் மக்களின் தலையில் பொறுப்பை சுமத்துவது, கட்சிகள் வயிறு வளர்க்கும் திருட்டு உத்தி. நாங்கள் அரசாங்கங்களுடன் டீல் இல்லாத, மக்கள் நலன்சார்ந்து செயற்படும், கொள்கைப்பிடிப்பான செயற்பாட்டாளர்கள், தேர்தல் அரசியல் அல்லாமல் தேசிய விடுதலையை இலக்காக கொண்டவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். அதை ஜனாதிபதி தேர்தலில் செயற்படுத்த முடியாது. அடுத்த பாராளுமன்ற தேர்தலை இலக்காக கொண்டு, மக்களிடம் இழந்த நம்பிக்கையை சீர் செய்து விட்டோம் என்பதை நிரூபிக்க வேண்டும். அதன் பின்னரே, பொதுவேட்பாளர் போன்ற ஆபத்தான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும்.

இன்று பொதுவேட்பாளர் கோசமெழுப்புபவர்கள் பலர் தோல்வியடைந்த அரசியல்வாதிகள். பொதுவேட்பாளர் கலந்துரையாடலுக்கு ரெலோ, புளொட், தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர். வந்தவர்கள் எல்லோரும் பொதுவேட்பாளரை ஆதரிக்கவில்லை. தமிழ் அரசு கட்சி பொதுவேட்பளரை ஆதரிக்காமல் விட்டால், ரெலோ, புளொட் என்பன பொதுவேட்பாளரை ஆதரிக்கமாட்டார்கள். பொதுவேட்பாளர் விவகாரம் ஒரு அரசியல் தற்கொலையாக முடியும் என்பதை அந்த கட்சிகள் உணர்ந்துள்ளதால், அவர்கள் எச்சரிக்கையாகவே இதனை அணுகுகிறார்கள். தமிழ் அரசு கட்சியும் பொதுவேட்பாளருக்கு சம்மதித்தால், தமிழ் தரப்பின் ஒருமித்த தீர்மானம் கருதி பொதுவேட்பாளரை ஆதரிப்பார்கள். எனினும், தமிழ் அரசு கட்சியும் உடனடியாக பொதுவேட்பாளரை ஆதரிக்கும் சூழல் மிகக்குறைவு.

இதனை தவிர்த்தால், க.வி.விக்னேஸ்வரன் மட்டுமே பொதுவேட்பாளருக்காக குரல் கொடுக்கும் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர். பொதுவேட்பாளரின் அபாயத்தை யாரேனும் அவருக்கு புரிய வைத்தால் அவரும் ஆதரவை விலக்கிக் கொள்ள வாய்ப்புண்டு.

இதனை தவிர்த்தால், பொதுவேட்பாளரை கோரும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தோல்வியடைந்த அரசியல்வாதிகள். அவர்கள் தமக்கு வாக்களிக்குமாறு கோரியபோதே மக்கள் வாக்களிக்கவில்லை. இந்த இலட்சணத்தில், மற்றொருவருக்கு அவர்கள் கைகாட்டி, மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள் என நம்புவதற்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் தேவை!

பொதுவேட்பாளர் கூட்டத்திற்கு வந்ததாக சிவில் சமூக அமைப்புக்கள் என பெரிய பட்டியலே உள்ளது. பட்டியலை பார்க்க பிரமிப்பாக இருக்கும். ஈழத்தமிழர் அரசியலில் அதிகம் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வார்த்தைகளில் ஒன்று இந்த சிவில் சமூகம். இரண்டு பேர் சேர்ந்து சிவில் சமூகம் என்ற பெயரில் அறிக்கை வெளியிடுவதும், வெளிநாட்டு தூதரகங்களிற்கு கருத்திட்டங்கள் எழுதிக்கொடுத்து பணம் பெற்று மக்கள் போராட்டங்களென செய்வதுமாக சிவல் சமூகமென்ற பெயரில் இப்போது அயோக்கியத்தனங்களே நிகழ்கிறது. இதிலுள்ள ஒவ்வொரு அமைப்பினாலும், நான்கு, ஐந்து பேரைக்கூட திரட்ட முடியாது.

இப்போது பொதுவேட்பாளரை கோருபவர்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சிகள் முக்கியமானவர்கள். இந்த கட்சிகளும், இந்த சிவில் அமைப்புக்களும் இணைந்து, பல மாதங்களின் முன்னர் முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்காக ஒரு மனிதச்சங்கிலி போராட்டத்தை அறிவித்தார்கள். அப்பொழுதே அதற்கெதிராக விமர்சனங்கள் எழுந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்கள் மனிதச்சங்கிலி போராட்டத்தை அறிவித்தனர். மருதனார்மடத்திலிருந்து யாழ் நகரம் வரை மனிதச்சங்கிலி போராட்டமென்றார்கள். இறுதியில் இந்த கட்சிகள் எல்லாம் நான்கைந்து பெயருடன் வந்து, பஸ்தரிப்பிடங்களில் பஸ்ஸிற்காக காத்திருப்பவர்களை போல நின்றார்கள்.

அதன்பின்னர் சரவணராஜாவிற்கு என்ன நடந்ததென்பதே தெரியாது. இவர்களின் போராட்டத்தை பார்த்து ஊரே சிரித்ததுதான் மிச்சம்.

போராட்டங்களால் ஏதாவது பலன் விளைய வேண்டும். சிரிப்புக்கிடமாக, மேலும் மேலும் பலவீனங்களை வெளிப்படுத்தும் களங்களாக போராட்டங்களை மாற்றினால், இப்போதுள்ளதை போல- நான்கைந்து பேரை தவிர வேறு யாரும் போராட்டங்களுக்கு வர மாட்டார்கள்.

பொதுவேட்பாளர் என்பது கோட்பாட்டு ரீதியில் சிறப்பானதாக தோன்றினாலும், தற்போதைய களச்சூழலில் அபாயகரமானது ஏன் என்பதற்கான காரணங்கள் இவை.

தமிழ் தேசிய கட்சிகள் பாடம் படித்து, தம்மை நிரூபித்து, மக்களாணையை பெற்ற பின்னர், 2029 ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த முயல்வதே சிறந்தது.

அப்படியல்லாவிட்டால், பொதுவேட்பாளர் என ஒருவரை நிறுத்தி, சிவாஜிலிங்கம் பெற்ற வாக்குகளை விட ஓரிரு ஆயிரம் வாக்குகளை மட்டுமே அதிகமாக பெற்று, தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை நகைச்சுவையாக மாற்றிய வரலாற்று தவறு மட்டுமே நடைபெறும்.

தமிழ் மக்களை மேலும் மேலும் அரசியல் முட்டுச்சந்துக்குள் நிறுத்தும் தவறான அரசியல் வழியிது.

சிங்கள ஜனதிபதிகள் எமக்கு தீர்வு தர மாட்டார்கள் என தமிழர்கள் ஒதுங்கிக் கொண்டால், இதனாலேயே சிங்கள வாக்குகள் திரண்டு ஒரு சிங்கள ஜனாதிபதி உருவானால், நாம் பேச்சுக்கான எல்லா வாய்ப்புக்களையும், மேசையையும் அகற்றி விடுவோம். கோட்டாபய தனது காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு வரவேயில்லை. பூகோள அரசியல் பந்தயத்தில் ஈழத்தமிழர்கள் தம்மையொரு தரப்பாக வளர்த்துக் கொள்ளாமல், பிற தரப்புக்களால் பயன்படுத்தப்படுபவர்களாக மட்டும் இருக்கையில், சர்வதேச தலையீடுகள் தற்போதுள்ள நிலைமையை விட அதிகமாக இருக்காது. இந்த சர்வதேச அழுத்தங்களையும், தலையீடுகளையும் சமாளிக்கும் திராணி தென்னிலங்கைக்கு தாராளமாக உண்டு.

சர்வதேசத்துக்கு செய்தி சொல்ல வேண்டும், சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கிறது என அரசியல்கட்சிகள் சொல்வதெல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை. ஈழத்தமிழர்களின் செய்தியென்னவென்பது- ஈழத்தமிழர்கள் சிலருக்கே தெரியாவிட்டாலும், சர்வதேசத்துக்கு தெரியம். புதிதாக எதையும் சொல்ல வேண்டியதில்லை. மக்கள் இதுவரை சொன்ன செய்திகளை பயன்படுத்தி என்ன செய்தோம் என்றே அரசியல் கட்சிகள் பொறுப்பு கூற வேண்டும்.

பொதுவேட்பாளர் மூலம் பேச்சுக்கான வாய்ப்புக்களை இல்லாமல் செய்தால், அடுத்தது என்னவென்பதையும் இந்த தரப்புக்கள் வெளிப்படுத்த வேண்டும். பேச்சு இல்லையென்றால் வீச்சுத்தானே. அதை தாமே முன்னின்று செயற்படுத்துவோம் என்பதையும் இந்த தரப்புக்கள் மக்கள் முன் உத்தரவாதமளிக்க வேண்டும். இதுவரை, முக்காடு போட்டுக்கொண்டு ஓடியதே இவர்களது வரலாறு. அது நிகழாது என பகிரங்கமாக கூற வேண்டும்.

பொதுவேட்பாளர் விவகாரத்தில் மற்றுமொரு பார்வையும் உண்டு. கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளை மட்டுமே பெற்று ஒருவர் ஜனாதிபதியாகலாம் என்ற ஆபத்தான முன்னுதாரணம் நிறுவப்பட்டது. கோட்டாவின் ஆட்சி நீடித்திருந்தால், அந்த அரசியல் நிலைத்திருக்கும். பொருளாதார நெருக்கடிதான் அந்த ஆபத்தான நிலைமையை நீக்கியது. தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம், கோட்டா உருவாக்கிய அரசியல் சூழலை தமிழர்களே உருவாக்கும் ஆபத்து நேரும். எமது கோரிக்கை தமிழீழமாகவே இருக்கட்டும். பெரும்பாலானவர்களுக்கு அதிலொன்றும் பிரச்சினையில்லை. ஆனால், அந்த அரசியல் தீர்வு வரும் வரைக்கும் இப்போதுள்ள அமைப்புக்குள் தகவமைக்கும் ஒரு வசதியான நிலைமையை  பேண வேண்டியதும் அவசியமல்லவா. அதுதானே புத்திசாலித்தனம்.

சிங்கள ஆட்சியாளர்கள் எதையும் செய்ய மாட்டார்கள் என குறிப்பிட்டு, ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு நகர்ந்தால், அதன் பின் நாம் யாருடன் பேசுவது. சரி, பொதுவேட்பாளரை கோருபவர்கள் ஒரு 5 வருடத்தில் தமிழீழத்தை உருவாக்குவார்கள் என வைத்துக் கொண்டாலும், அந்த இடைப்பட்ட காலத்தில் கைதிகள் விடுதலை, நில விடுவிப்பு போன்ற சின்னச்சின்ன விவகாரங்களை யாருடன் பேசுவது. தமிழீழம்தான் முக்கியம், அதன் பின்னர் மற்றவற்றை பார்க்கலாமென, சின்னச்சின்ன விவகாரங்களை கைவிடுவதா?

மட்டக்களப்பு முன்னாள் எம்.பி அரியநேத்திரனும், பொதுவேட்பாளரை தீவிரமாக ஆதரிக்கிறார். அவர் நிர்வகிக்கும் வட்ஸ்அப் குழுமத்தில் ஒரு கேள்வியெழுப்பியிருந்தார். பொதுவேட்பாளரை ஆதரிக்காவிட்டால்- மாதவனை மயிலத்தமடுவுக்கு என்ன தீர்வு, வெடுக்குநாறிமலைக்கு என்ன தீர்வு என பல பிரச்சினைகளை பட்டியலிட்டிருந்தார். அவையெல்லாம் கவனங்கொள்ள வேண்டிய விவகாரங்கள்தான், ஆனால், பொதுவேட்பாளரை தமிழர்கள் ஆதரிப்பதன் மூலம் இந்த பிரச்சினைகள் தீர்ந்து விடுமா?.

தமிழ் மக்கள் புத்திசாலித்தனமாக செயற்பட்டால், பொதுவேட்பாளரை கோருபவர்கள் தமிழீழத்தை உருவாக்கி தருவதற்குள், சாதகமான ஜனாதிபதி அமைந்தால் அரியநேத்திரன் எழுப்பிய விவகாரங்களில் தீர்வைக்காணலாம்.

பொதுவேட்பாளர் கருத்தை முதலில் பேசியவர்களில் ஒருவர் இந்தியாவில் பதுங்கியுள்ள (அப்படித்தான் குறிப்பிட வேண்டும்) மு.திருநாவுக்கரவு என்பவர். அவர் விடுதலைப் புலிகளின் காலத்தில் வன்னியிலிருந்து கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார். அப்பாவி மனிதன். தமிழ் சூழலில் அரசியல் ஆய்வாளர்கள் எனப்படுபவர்கள் அனைவரிடமும் உள்ள பலவீனம் அவரிடமும் இருந்தது- சமூக, அரசியல் ஓட்டத்தை புரிந்து கொள்ள முடியாதவர். 2007இல் கொழும்பு பற்றியெரியும் என ஒரு புத்தகமே வெளியிட்டு, புலிகளை குசிப்படுத்தியிருந்தார். பின்னர், தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு இந்தியாவுக்கு படகில் தப்பிச் சென்றுவிட்டார். 2009 இல் பழைய நண்பர் ஒருவரை சென்னையில் சந்தித்த போது, தன்னை ரோ தேடுவதாகவும், ரோவுக்கு தெரியாமல் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அப்படியொரு அப்பாவி மனிதன். திருநாவுக்கரசின் அச்செடுத்த நகல்களே இப்போது பொதுவேட்பாளரை ஆதரிக்கும் வடக்கு கிழக்கிலுள்ள கட்டுரையாளர்கள்.

ஒரு தற்கொலை அரசியலுக்கு தூண்டிவிட்டு, இந்தவகையனவர்கள் முக்காடிட்டுக்கொண்டு ஓட இடமுண்டு. வசதியுமுண்டு. ஆனால் எல்லா மக்களுக்கும் அந்த வசதியுண்டா?

யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுவேட்பாளர் கூட்டத்தில் பேசிய டான் தொலைக்காட்சி உரிமையாளர், வர்த்தகர் குகநாதன், தமிழ் மக்களில் 20 வீதமானவர்களை தனது தொலைக்காட்சி சென்றடைகிறது என குறிப்பிட்டார். அதனால்தான் அவரும் பொதுவேட்பாளர் வியாபாரத்தில் குதித்திருக்க வேண்டும். அவர் சொன்னது விளம்பரதாரர்களை நம்ப வைக்கலாம். ஆனால் அது உண்மையல்ல. அவர் குறிப்பிட்ட கணக்கில், கேபிள் இணைப்பை அவரது நிறுவனம் வழங்கியிருக்கலாம். ஆனால் அவரது கேபிள் இணைப்பை பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் டான் தொலைக்காட்சியை பார்ப்பதில்லை. ஈழத்தமிழர்களின் பெரும் அவலங்களில் ஒன்று- இலங்கையின் முக்கிய நிகழ்வுகளை அறியவும் பலர் இன்றும் சன் நியூசைத்தான் பார்க்கிறார்கள்.

டான் தொலைக்காட்சி ஏன், என்ன பின்னணியில் தொடங்கியது, அதில் ஆரம்பத்தில் யார் பணியாற்றினார்கள் என்பது இன்றுள்ள பல அரசியல் கட்சிகளுக்கு நன்கு தெரியும். ராஜபக்ச அரசுடன் அதன் உரிமையாளர் எவ்வளவு நெருக்கமாக பணியாற்றினார் என்பதும் ஒன்றும் இரகசியமல்ல. ஆனாலும், அவர் ஒரு தூய தமிழ் தேசிய நோக்கத்துடன்தான் பொதுவேட்பாளர் விவகாரத்தை கையிலெடுத்துள்ளார் என நம்பி நமது கட்சிகள் அந்த கூட்டங்களுக்கு சென்றிருக்கிறது என்றால், நமது அரசியல் கட்சிகளை எந்தளவில் எடைபோடுவது?

தனது ஊடகத்தினால் தேர்தலில் நினைத்ததை அடைய முடியுமென அவர் கணக்கிட்டுள்ளார். இப்படி தப்புக்கணக்கிட்டவர்கள் பலர். உதயன் பத்திரிகை உரிமையாளர் சரவணபவனாலும் கடந்த தேர்தலில் வெல்ல முடியவில்லை. ஐபிசி பாஸ்கரனால் தலைகீழாக நின்றும் கடந்த தேர்தலில் அவர் பணம் கொடுத்து ஆதரித்த மாவை, ஆர்னோல்ட்டை வெல்ல வைக்க முடியவில்லை. அதிகம் ஏன், கடந்த தேர்தலில் டான் தொலைக்காட்சியில் பெரிய பக்கேஜில் விளம்பரம் வெளியிட்டவர்களும் வெல்லவில்லை.

பொதுவேட்பாளர் ஒருவர் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளின் அங்கீகாரத்துடன் நிறுத்தப்பட எந்த வாய்ப்புமில்லை. சில வேளைகளில், ஏதேனும் ஒரு விபரீத காலச்சூழலில் அப்படியொரு வேட்பாளர் நிறுத்தப்பட்டால், பொதுஜன பெரமுன- ரணில் கூட்டுக்கு சிறிய உதவி செய்து, படுதோல்வியடைவார். கிட்டத்தட்ட அருண் சித்தார்த்தின் வாக்கு வங்கியை விட சில நூறு வாக்குகள் அதிகமாக பெறுவார். இதனால் தமிழ் மக்கள் மேலும் அரசியல்ரீதியாக பலவீனப்படுவார்கள்.

ஆனால், அதற்காக உழைத்தவர்கள், அதற்குரிய சன்மானத்தை பெற்றுக்கொள்வார்கள். மீண்டும் மற்றொரு தேர்தலில் வெறொரு கோமாளிக்கூத்து ஆடுவார்கள்.

-யோ.கர்ணன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

மிருசுவிலில் 8 தமிழர்கள் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கு: கொலையாளி சிப்பாயை மன்னித்த கோட்டாவுக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை!

Pagetamil

புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்தது இந்தியா!

Pagetamil

‘தமிழ் பொதுவேட்பாளர் கோட்பாடு தோல்வியடைந்தால் எமது தலையீட்டை தமிழர்கள் இழப்பார்கள்… இதன் பின்னணியில் நாங்கள் இல்லை’: பிரதான தமிழ் கட்சிகளிற்கு தெளிவுபடுத்திய வெளிநாட்டு தூதரங்கள்!

Pagetamil

‘வீடுகளில் நாய்க்குட்டி, பூனைக்குட்டிகள் நிறைந்துள்ளன… குழந்தைகள் இல்லை’: குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு இத்தாலிய இளையவர்களிடம் போப் மன்றாட்டம்!

Pagetamil

ரி20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு: வியாஸ்காந்த் மேலதிக வீரராக இணைப்பு!

Pagetamil

Leave a Comment