யாழ்ப்பாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணொருவர் சில காலமாக பலரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. அந்த பெண்ணை அடித்து சித்திரவதை செய்து, சூடு வைத்து, போதை ஊசி செலுத்தி வன்புணர்ந்துள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், அரியாலையை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய மனநல சிக்கல்கள் உள்ள பெண்ணொருவரே பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவரது தாய் தந்தையர் உயிரிழந்ததை அடுத்து, மனநல சிக்கல்கள் உள்ள இந்த பெண்ணும், அவரது மூத்த சகோதரியும் பருத்தித்துறை- மருதங்கேணியிலுள்ள பாதுகாப்பு இல்லத்தில், நீதிமன்ற உத்தரவின்படி தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் , பெண்ணின் மூத்த சகோதரி உயிரிழந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் இவரது சகோதரன் இவரை தனது இல்லத்திற்கு அழைத்து சென்று இருந்தார்.
சகோதரனின் இல்லத்தில் தங்கியிருந்த வேளை இந்த கொடுமை நிகழ்ந்ததாக பெண் குறிப்பிட்டுள்ளார்.
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 10 பேர் வரையான ஆண்கள் தன்னை துன்புறுத்தி, வல்லுறவுக்குள்ளாக்கியதாக தெரிவித்துள்ளார்.
அடித்து, சிகரெட்டால் சூடு வைத்து, போதை ஊசி செலுத்தி தன்னை வல்லுறவுக்குள்ளாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த பெண்ணின் உடலில் சூடு வைக்கப்பட்ட அடையாளங்கள், தாக்கப்பட்ட அடையாளங்கள், கைமுறிந்த அடையாளம் உள்ளது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இந்த பெண், பின்னர் மருதங்கேணி பாதுகாப்பு இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், அங்கு தனக்கு நேர்ந்த கொடுமைகளை குறிப்பிட்டுள்ளார். உடனடியாக அவர் பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டார். பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலையென்பதால், பருத்தித்துறை பொலிசார் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு அறிவித்தனர்.
நேற்று (22) யாழ்ப்பாணம் பொலிசார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்று, பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இதை தொடர்ந்து, அந்தப் பெண், மருதங்கேணி காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தன்னை வல்லுறவுக்குள்ளாக்கியவர்கள் என சுமார் 10 பேரின் பெயர் விபரத்தை அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பெண்ணின் முறைப்பாட்டை வலுவூட்டத்தக்க ஆதாரங்கள் வைத்தியப் பரிசோதனையில் கிடைக்கப் பெற்றதாக அறிய முடிகிறது.