இலங்கை

யாழில் இராணுவம் தேர் இழுத்த கோயிலில் வெடித்தது அடுத்த சர்ச்சை… இளைஞர்கள் உடைத்தது சாதிய வேலியா?

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உலவிக்குளம் பிள்ளையார் ஆலயத்தை சுற்றி அமைக்கப்பட்ட எல்லை வேலியை பிரதேச இளைஞர்கள் அடித்து உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலியை உடைத்தவர்களுக்கு எதிராக ஆலய தர்மகர்த்தா அச்சுவேலி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். எல்லை வேலிக்கு எதிராக பிரதேச மக்களில் ஒரு பகுதியினரும் முறைப்பாடு செய்துள்ளனர்.

சாதிப்பாகுபாடு காரணமாக இந்த வேலி அமைக்கப்பட்டதாக ஒரு பகுதியினர் குற்றம்சாட்ட, ஆலய நிர்வாகம் அதை மறுத்துள்ளது. பிரச்சினையை திசைதிருப்ப சாதிய குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். இத்தனை வருடம் இல்லாத வேலி இப்போது எதற்கு என்பது பிரதேச மக்களின் கேள்வி.

அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோயிலில் ஏற்பட்டுள்ள பிணக்கு பற்றி தமிழ்பக்கம் திரட்டிய தகவல்களின் தொகுப்பு இது-

அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோயிலை சிலருக்கு தெரிந்திருக்கும். ஆனால், இராணுவம் தேர் இழுக்கும் கோயில் என்றால் பலருக்கும் தெரிந்திருக்கும். அந்த கோயிலில்தான் இப்போது பிணக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த கோயிலைப் பற்றிய ஒரு ஐதீக கதையுள்ளது. 400 வருடங்களின் முற்பட்ட காலப்பகுதியில் இந்த பகுதி மக்கள் கப்பூது பகுதியில் வயல் விதைப்பார்கள். அறுவடையின் பின்னர், நெல்லை வண்டில்களில் கொண்டு வந்துள்ளனர். தற்போது கோயில் அமைந்துள்ள இடத்துக்கு அண்மையாக நெல்லை சேமிப்பதாகவும், அப்படியான தருணமொன்றில் குழந்தை அழுது சத்தம் கேட்டதாகவும், சத்தம் வந்த திசையை தேடிச் சென்றபோது, அங்கு பிள்ளையார் வடிவ கல்லொன்று காணப்பட்டதாகவும், அந்த கல்லை வைத்து வழிபாடு தொடங்கி, பின்னர் கோயிலானதாக ஊரில் ஐதீகம் உள்ளது.

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில், வல்லை சந்திக்கு சற்று முன்னதாக வீதியின் இடது புறத்தில் வயல்களின் மத்தியில் உலவைப்பிள்ளையார் கோயில் காணப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலுள்ள நூற்றுக்கணக்கான கோயில்களில் ஒன்றாக- அமைதியாக இந்த கோயிலும் இருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக கோயில் திருவிழாவில் இராணுவம் தேர் இழுக்க ஆரம்பித்ததும், செய்திகளில், சமூக ஊடகங்களில் பேசப்படும் கோயிலாகி விட்டது.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் காலத்தில் செல்வாக்கு செலுத்திய “பஞ்ச லிங்கங்களில்“ ஒருவரான சண்முகலிங்கம் குடும்பத்திற்கு சொந்தமான கோயில் இது. அவரது குடும்பத்தினரின் உறுதிக்கோயில். தற்போது, அவரது மகனான வைத்தியர் சண்முகதேவன் கோயிலை நிர்வகிக்கிறார்.

தனியொரு குடும்பத்தின் உறுதிக்கோயில் என்ற போதும், கோயில் விஸ்தரிக்கப்படும் போது, பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்களும் தமது காணிகளை கோயிலுக்கு அன்பளித்துள்ளனர். அவர்கள் அனைவரதும் காணிகளுடனுமே தற்போது கோயில் பிரமாண்ட நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

கோயில் தேர்த்திருவிழாவில் இராணுவம் தேர் இழுத்தபோது, வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் யாழ்ப்பாணம் வந்து ஒரு மாதம் சாதிப்போராட்டம் செய்து விட்டு செல்லும் கோஸ்டிகள்- இது ஆதிக்கசாதியின் நூதனமான நடவடிக்கையென பேஸ்புக்கில் எழுதினார்கள். ஆனால், உள்ளூரில் விசாரித்த போது, சுவாரஸ்யமான வேறொரு தகவல் கிடைத்தது.

தற்போது கோயிலை நிர்வகிக்கும் வைத்தியர் சண்முகதேவன், நீண்டகாலம் அமெரிக்காவில் வசித்து விட்டு, தற்போது கோயிலை நிர்வகிக்க ஊரில் தங்கியுள்ளார். அவர் ரோயல் கல்லூரியில் படித்த சமயத்தில், அவரது பாடசாலை நண்பர்களாக இருந்தவர்கள் சிலர், பின்னர் பாதுகாப்பு தரப்பில் உயர் பதவிகளில் இருந்துள்ளனர். அவ்வாறான ஒருவர் தேர் இழுக்க விரும்பிய போது, முதல் வருடம் அனுமதித்ததாகவும், தேர் இழுத்த சிறிய காலப்பகுதியில் அவர் பதவி உயர்வு பெற்று சென்றதையடுத்து, அந்த பகுதிக்கு வரும் இராணுவ அதிகாரிகள் வருடம் தோறும் தேர் இழுக்க முண்டியடிப்பதாகவும் கூறுகிறார்கள்.

கோயிலில் சாதிப்பாகுபாடு காட்டப்படுவதில்லையென கோயில் நிர்வாகம் கூறுகிறது. கோயிலில் சாதிப்பாகுபாடு உள்ளதாக சுற்றயில் உள்ள எந்த சமூகத்தினரும் இதுவரை குற்றம்சாட்டியதில்லையென்பதையும் கவனிக்க வேண்டும்.

கோயிலை சுற்றி உள்ள அனைத்து சமூகத்தினருக்கும் ஒவ்வொரு நாள் திருவிழா உள்ளது. முதலாவது திருவிழா தர்மகர்த்தா குடும்பத்தினது. ஏனையவை அயல் பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு சமூகத்தினுடையவை.

தீண்டாமை கொடுமை நிலவிய காலங்களில் இந்த கோயிலும் அதே விதமான கொடுமை நிலவியுள்ளது. கோயில் தர்மகர்த்தாவினர் தமது வேளாள சமூகம் தவிர்ந்த ஏனையவர்களை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.

என்றாலும், 1980களின் தொடக்கத்தில் தர்மகர்த்தா குடும்பம் சார்பில் கோயிலை நிர்வகித்தவர், விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாட்டாளராகவும் இருந்துள்ளார். அவர், அந்த பகுதியிலுள்ள அனைத்து சமூகத்தினரையும் அழைத்து, அனைவரதும் பங்களிப்புடன் தற்போதுள்ள அளவில் கோயிலை பெரிதாக கட்டினார். கோயிலை சுற்றிலுலுமுள்ள அனைத்து சமூகத்தினரின் பங்களிப்புடனும் கோயில் கட்டப்பட்டது. அனைத்த சமூகத்தினருக்கும் திருவிழா. அனைவரும் கோயிலுக்குள் நுழையலாம் என கோயில் மாறியது.

தற்போதைய சர்ச்சை

கோயிலின் எல்லைகளில் வேலியமைக்க ஆரம்பித்ததும் தற்போதைய சர்ச்சை வெடித்துள்ளது.

கோயில் எல்லைகளுக்கு வேலியிட்டால், யாழ்- பருத்தித்துறை பிரதான வீதியிலிருந்து கோயிலுக்கு செல்லும் வீதியையும், பின்பக்கமாக உள்ள இரண்டு வீதிகளையும் மறிக்கலாமென்ற போதும், அப்படி செய்யாமல், வீதிகளை தவிர்த்தே எல்லையிட்டதாக கோயில் நிர்வாகம் கூறுகிறது.

கோயிலின் ஒரு எல்லையில் விளையாட்டு மைதானமொன்று உள்ளது. அச்சுவேலி மத்திய விளையாட்டு கழகம் அதை பயன்படுத்துகிறது. அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்தின் மைதானத்தின் ஒரு பகுதியையும், கோயிலின் காணியின் ஒரு பகுதியையும், தனியார் காணியொன்றையும் உள்ளடக்கியதாகவே அச்சுவேலி மத்திய விளையாட்டு கழகத்தினர் பயன்படுத்தும் மைதானம் உள்ளது. நீண்டகாலமாக இந்த மைதானம் பயன்படுத்தப்படுகிறது. பாடசாலை விளையாட்டு போட்டிகளின் போதும் இந்த மைதானம் பயன்படுத்தப்படுகிறது.

கோயில் நிர்வாகம் காணியை எல்லையிட முயன்றபோது, விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியையும் எல்லையிட முயன்றுள்ளனர். இதற்கு, மைதானத்தை பயன்படுத்தும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதான் சர்ச்சையின் மையப்புள்ளி.

கோயிலின் ஒரு பகுதியில் நேற்று வேலியிடப்பட்டுள்ளது. கோயிலுக்கும், ஆலய தர்மகர்த்தாக்களின் சமூகமல்லாத ஒரு சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குமிடையில் வீதியை தவிர்த்து இந்த வேலியிடப்பட்டது.

கடந்தவாரம் வேலியமைக்கும் பணி ஆரம்பித்த போது, அயல் மக்கள் சிலர் வலி கிழக்கு பிரதேசசபையில் முறையிட்டனர். பிரதேசசபையினர் வேலியமைக்கும் பணியை நிறுத்துமாறு கூறிய போதும், வேலியமைக்கும் பணி நடந்ததாக மக்கள் கூறுகிறார்கள்.

இன்று (15) மைதான பக்கம் வேலியிடும் பணிகள் ஆரம்பித்த போது, சுமார் 40 வரையான இளைஞர்கள் ஒன்றுகூடி, வேலியிட வந்த பணியாளர்களை விரட்டி விட்டனர். பின்னர் கூட்டமாக சென்று, நேற்று அமைக்கப்பட்ட வேலித்தூண்களை அடித்துடைத்தனர்.

மைதானத்தில் வேலியிட்டால் மைதானத்தில் விளையாட முடியாமல் போய் விடும் என்பதால், அதை தடுக்க,  வேலியை சாதிய வேலியாக சித்தரிக்கும் நோக்கத்துடன் இளைஞர்கள் இப்படி செயற்பட்டதாக கோயில் நிர்வாக தரப்பு குறிப்பிட்டது.

மறுபக்கம்- கோயிலை சுற்றியுள்ள பெரும்பாலானவர்கள் தர்மகர்த்தா குடும்பத்தின் சாதியல்லாதவர்கள். விளையாட்டு மைதானத்தை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்களும் அவர்களே. கோயிலை சுற்றி வேலியமைப்பது ஏன்? சமூக பிரிவினை நோக்கமுடையதா என்ற கேள்வி, அயலில் உள்ள ஒடுக்கப்பட்ட சாதி மக்களிடமுள்ளது.

பாரம்பரியமாக தாம் பயன்படுத்தி வந்த கோயில் சுற்றயல் பகுதிக்கு வேலியிடப்படுவது ஏன் என்ற கேள்வி அவர்களிடமுள்ளது. கோயில் கேணி தமது கால்நடைகளின் நீராதாரமாக இருந்து வந்தது. கால்நடைகளின் நீராதாரத்திற்கு தாம் என்ன செய்வது என்பது அவர்களின் கேள்வி.

கோயிலை சுற்றி வேலியமைப்பது கோயில் நிர்வாகம் சார்ந்தது என வைத்தாலும், மைதானத்தையும் குறுக்கறுத்து எல்லையிடுவது சட்டரீதியாக சரியானது என வைத்தாலும், தார்மீக ரீதியில் பிழையான நடவடிக்கையென்பதை பலரும் சுட்டிக்காட்டினர். இளைஞர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தும் இடத்தை மறித்து முள்வேலியிடுவதால் கோயில் நிர்வாகம் என்ன பலனையடைய போகிறது என்ற கேள்வியுள்ளது. தமது எல்லைகளை வெளிப்படுத்த விரும்பினால் அதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால், இளைஞர்களின் விளையாட்டு மைதானத்துக்கு இடையூறு விளைவிக்க வேண்டுமா என்ற கேள்வியுள்ளது.

வீதிச்சர்ச்சை

கோயிலின் வீதி தொடர்பில் பிரதேசசபைக்கும், கோயில் தர்மகர்த்தாவுக்குமிடையில் நீதிமன்ற வழக்கும் உள்ளது. பிரதான வீதியிலிருந்து பிரிந்து வரும் வீதியின் ஒரு பகுதி கோயிலுக்கு சொந்தமானது என்றும், அதை தமது அனுமதியின்றி பிரதேசசபை அபிவிருத்தி செய்ததாகவும் கோயில் தர்மகர்த்தா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பிரதேசசபைக்கு சார்பாக தீர்க்கப்பட்டது. இதற்கு எதிராக கோயில் தர்மகர்த்தா மேன்முறையீடு செய்துள்ளார்.

smart

கோயில் தர்மகர்த்தா ஒரு கண்டிப்பான இராணுவ அதிகாரியின் இயல்புடையவர் என்கிறார்கள். சரியான நேரத்துக்கு கோயில் திறந்து பூசை நடக்கும். சரியான நேரத்துக்கு பூட்டும். திறக்கும் நேரத்தில் எந்த சாதியினரும் உரிய முறைப்படி கோயிலுக்கு வரலாம், ஆண்கள் மேலாடை அணிய முடியாது உள்ளிட்ட கறாரான ஏராளம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

கோயில் சுற்றுவட்டாரத்தில், இதை செய்யாதீர்கள் என ஏராளம் அறிவித்தல் பலகைகள் தொங்க விடப்பட்டுள்ளது. கறாரான இராணுவ அதிகாரி போன்ற இயல்புடைய தர்மகர்த்தாவின் இயல்பை புரிந்து கொள்ள இவை உதவும், அவரது இயல்பினால் உருவான சர்ச்சை இது என்பது கோயில் தரப்பில் வைக்கப்படும் இன்னொரு வாதம்.

கோயில் என்பது தனியே வழிபாடு சார்ந்ததல்ல. அது ஒரு சமூக இயக்கத்துடன் தொடர்புடையது. பல்வேறு சமூகங்கள் வாழும் இடத்தில் கோயிலுக்கு எல்லையிடுவது- பல பரிமாண கேள்விகளை எழுப்பும். இந்த வேலியின் பின்னால் சாதிய எண்ணமில்லையென கோயில் தர்மகர்த்தா கூறுகிறார். கோயில் நிர்வாகத்தின் இதுவரையான நடவடிக்கையும் அதை உறுதி செய்கிறதுதான். ஆனால், இந்த வேலி அனைத்தையும் கேள்விக்குட்படுத்தும். அந்த வேலி சாதிய வேலியா இல்லையா என இரண்டு தரப்பு மனங்களையும் படித்து தீர்ப்பு கூற எந்த சத்தியமுமில்லை. ஆனால், அது அவசியமற்றது, தேவையற்ற சாதிய முரண்களை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
1
+1
2
+1
1
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

சவப்பெட்டிகளுடன் முள்ளிவாய்க்கால் சென்ற ஊர்தி

Pagetamil

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் பூட்டு

Pagetamil

30 வயதிற்குட்பட்ட 30 ஆசியா பட்டியலில் இலங்கை நடிகை

Pagetamil

மன்னாரில் அதானியின் காற்றாலை மின்திட்டம்: உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் அமைப்பு மனு!

Pagetamil

மன்னார் ரின் மீன் தொழிற்சாலை மீதான குற்றச்சாட்டின் பின்னணி!

Pagetamil

Leave a Comment