Pagetamil
இந்தியா

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கேஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் விசாரிக்க அனுமதி

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலிடம் மேலும் 4 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் அமலாக்கத் துறை காவல் நிறைவடைந்த நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, “அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைக்க கேஜ்ரிவால் மறுக்கிறார். அவரிடம் மேலும்7 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும்” என வாதிட்டார்.

முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தரப்பில் அவரே நீதிமன்றத்தில் வாதிடும்போது, “கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கை சிபிஐ, அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றது. சிபிஐ தரப்பில் 31,000 பக்கங்களும், அமலாக்கத் துறை சார்பில் 25,000 பக்கங்களும் கொண்ட குற்றப் பத்திரிகைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இதில் 4 இடங்களில் எனது பெயர் இடம்பெற்றிருக்கிறது. 4 சாட்சிகளின் அடிப்படையில் ஒரு முதல்வரை கைது செய்யலாமா?” என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட விசாரணை நீதிமன்றம், முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலிடம் மேலும் 4 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கியது.

வழக்கு தள்ளுபடி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அர்விந்த் கேஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சுர்ஜித்சிங் யாதவ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) மன்மோகன், நீதிபதி மன்மீத் பிரித்தம் சிங் அரோரா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறும்போது, “இது அரசு நிர்வாகம் சார்ந்த விவகாரம். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று உத்தரவிட்டனர்.

ஜெர்மனி வெளியுறவுத் துறைசெய்தித் தொடர்பாளர் செபாஸ்டியன் அண்மையில் கூறும்போது, “கேஜ்ரிவால் வழக்கில் நேர்மையாக, பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.

இதற்கு மத்திய அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஜெர்மனி தூதரக செய்தித் தொடர்பாளர் நேற்று கூறும்போது, “கேஜ்ரிவால் வழக்கில் நியாயமான விசாரணை நடைபெறும் என்று முழுமையாக நம்புகிறோம். இந்தியா, ஜெர்மனி இடையிலான உறவு வலுவடைந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் நேற்று கூறும்போது, “கேஜ்ரிவால் வழக்கில் நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு ஏற்றுக்கொள்ள முடியாதது என மத்தியவெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

தமிழக மீனவர்களை தாக்கி பொருட்கள் கொள்ளை: இலங்கை கொள்ளையர் அட்டூழியம்

Pagetamil

வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவரை நியமிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

இந்து அறக்கட்டளையில் முஸ்லிம்களை அனுமதிப்பீர்களா? – வக்பு சட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

Pagetamil

`இருட்டுக்கடையைக் கேட்டு கொடுமை செய்கிறார்கள்’ – கணவர் வீட்டார் மீது புதுமணப்பெண் வரதட்சணை புகார்!

Pagetamil

மகன் குணமடைய வேண்டி பவன் கல்​யாணின் மனைவி திருப்​ப​தி​யில் முடி காணிக்கை

Pagetamil

Leave a Comment