30.1 C
Jaffna
April 23, 2024
முக்கியச் செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்: முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கவே பிள்ளையான் புத்தகம் எழுதினார்… கருணா அம்மான் அதிர்ச்சி தகவல்!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆசாத் மௌலானா சிறந்த ஆதரங்களுடன் நிரூபித்துள்ளார். இந்த நிலையில் இந்த தாக்குதலினை ஏவியவர்களினால் அது தொடர்பான புத்தகம் வெளியிடப்பட்டது என்பது முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதற்காக எழுதப்பட்டதாகவே பார்க்கப்படுகின்றது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் வருகின்ற காலகட்டத்தில் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை பொறுத்த வரையில் ரணில் விக்ரமசிங்க தேர்தல் களத்தில் இறங்குவாராக இருந்தால் அவருக்கு எமது ஆதரவினை வழங்குவதாக நாங்கள் தீர்மானித்து இருக்கின்றோம் எனவும் முன்னாள் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இன்று பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அமைச்சர்களாக இருந்தும் மக்களின் குறைபாடுகளை தீர்ப்பதற்கு மாறாக தாங்கள் சுகபோகங்களை அனுபவிப்பதற்காக இந்த வேலை திட்டங்களை கொண்டு வருகின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வீதிகள் இன்று அமைக்கப்பட்டாலும் அதில் பத்து வீதத்திற்கு மேற்பட்ட தரகுகள் வாங்கப்படுகின்றது. இவ்வாறு செயல்பட்டால் எமது கட்டுமானங்கள் எந்த அளவிற்கு இஸ்திரத்தன்மையற்ற நிலையில் இருக்கும் என்பதனை நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதுவரையில் மயிலத்தமடு பிரச்சனைக்கு எதிர்வித தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. அந்த மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை தற்போது சந்தித்து வருகின்றனர். இதே போன்று பல பிரச்சனைகள் வடமாகாணத்தை பொறுத்தவரையில் மத திணிப்புகளும் மதவாதிகளால் ஏற்படும் பிரச்சனைகள் மீண்டும் இன குரோதங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை இன்று தேவையற்ற விதத்தில் சில மதகுருமார்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். அதில் வெடுக்குநாரி மற்றும் குருந்தூர் மலை போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு தெரியும்.

எங்களுடைய ஆலயங்கள் இருந்த இடங்கள் அனைத்தும் இன்று அதில் பலவந்தமாக புத்த கோவில்களை கட்டி மத திணிப்புகளை மேற்கொள்வதற்கு முயற்சி எடுத்து வருகின்றார்கள். இது போன்ற பல நடவடிக்கைகளை மாற்றி அமைக்க வேண்டும். தமிழர்களின் அவிலாசைகளை தீர்ப்பதற்கு நமது கட்சியின் வேலை திட்டங்கள் தொடர்பாக நாங்கள் கலந்துரையாடி இருக்கின்றோம்.

கடந்த ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷ இருந்த காலத்தில் நாடு பாதாளத்தில் தள்ளி விடப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் அவர் மக்களால் துரத்தி அடிக்கப்பட்டார். அவரின் அவ்வாறான செயற்பாட்டால் பொருளாதாரம் வங்குரோத்து நிலையை அடைந்திருந்தது.

இந்த நிலையில் தற்போது இருக்கின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வந்ததன் பிற்பாடு இன்று பல சிரமத்தில் மத்தியில் இருந்த எமது நாட்டை கட்டி எழுப்பியிருக்கின்றார். அதனை அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று டொலரின் பெறுமதி எந்த அளவிற்கு குறைந்திருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு இன்று நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு வருகின்றது.

நமது கட்சியை பொறுத்த அளவில் ரணில் விக்ரமசிங்க தேர்தல் களத்தில் இறங்குவாராக இருந்தால் அவருக்கு எமது ஆதரவினை வழங்குவதாக நாங்கள் தீர்மானித்து இருக்கின்றோம். நமது கட்சியின் செயற்பாடுகளை பரவலாக முன்னெடுத்து வருகின்றோம். நாங்கள் கூட்டு சேர்வதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பதை இறுதி கட்டத்திலே அறிவிப்போம்.

கடந்த காலத்தில் சிவாஜிலிங்கம் போன்றவர்களும் தேர்தலில் போட்டியிட்டு இருந்தார்கள். தமிழ் மக்களை மற்றும் என்னை பொருத்தவரையில் இலங்கை நாட்டிலே ஒரு தமிழரோ அல்லது முஸ்லிமோ ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால் பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட நாடாக இருக்கின்ற காரணத்தினால் யாரோ ஒரு சிங்கள தரப்பினர்தான் ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழர்கள் பிரதமராக அல்லது அமைச்சர்களாக வருவது அது ஒரு வேறுபட்ட விடயம். ஆனால் ஜனாதிபதியாக வருவதற்கு அனைத்து மக்களுக்கும் அனைத்து கல்விச் சமூகங்களுக்கும் இடையிலான தெரிந்த விடயம் சிங்கள குடிமகன் தான் ஜனாதிபதியாக வருவார். ஆகவே அந்த வகையில் நாங்கள் அதனை புரிந்து கொண்டு செயல்பட்டால் தமிழர்களுக்கு நன்மை தரக்கூடிய ஜனாதிபதியை நாங்கள் தெரிவு செய்வது என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய விடயம்.

தமிழர்கள் போட்டியிடுவதை வரவேற்கின்றோம். அது இலங்கை குடிமகன் யாராக இருந்தாலும் எங்கும் போட்டியிடலாம். அதனை வரவேற்கின்றோம்.
இது ஒரு நல்ல விடயம். ஆனால் அதனை முன் வைப்பதற்கு முன்னர் அனைத்து கட்சிகளும் கூடி கலந்தாலோசித்து அதில் ஒருமித்த கருத்தினை எடுத்து அனைத்து தமிழ் மக்களும் அந்த ஒருவருக்கு வாக்களித்து எதிர்ப்பினை காட்டுவார்களாக இருந்தால் உலக மத்தியில் பாரிய வரவேற்பு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதனை மறப்பதற்கு இல்லை. ஆனால் அந்த அளவிற்கு எந்த கட்சி ஒற்றுமையாக இருக்கும் என்பது வேடிக்கையான விடயம். ஏனென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவிலே இன்னமும் தீர்மானம் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தேசியம் கதைத்துக் கொண்டு தலைவர் தெரிவில் நீதிமன்றத்தை நாடி நிற்கின்றது என்றால் எவ்வளவு பிற்போக்குத்தனமாக அந்த கட்சி இருக்கின்றது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் தமிழ் கட்சிகள் ஒன்றாகுமா என்பது சந்தேகத்திற்குரிய விடயம்.

இன்று ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு இது தொடர்பாக தெரியும் என கூறுகின்றார். அதே நேரம் இந்த விடயம் தொடர்பாக இரண்டு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றது. கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிள்ளையான் அவர்களும் புத்தகம் வெளியிட்டுள்ளனர். இதனை ஒரு முதலை கண்ணீர் வடிப்பதற்கு சமமாக தான் பார்க்கின்றோம். ஏனென்றால் அசாத் மௌலானா போன்றவர் சிறந்த ஆதாரங்களை நிரூபித்து இருக்கின்றார்கள். அவர் நீண்ட காலமாக அந்த கட்சியிலே ஒரு முக்கிய உறுப்பினராக செயலாளராக அல்லது பிரதம ஆலோசகராக செயல்பட்டவர் என்பது உண்மையான விடயம். ஏனென்றால் அவர் கூறிய விடயங்களை எவரும் மறுப்பதற்கு இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏன் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்கின்ற கேள்வி எழுந்திருக்கின்றது.

ஏனென்றால் இன்று பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு புத்தகத்தையும் வெளியிடவில்லை. இதை ஏவியவர்களால் புத்தகம் வெளியிடப்பட்டது என்பது தங்களது பிரச்சினைகளை மறைப்பதற்காக அதாவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்காக எழுதப்பட்டதாகதான் பார்க்கப்படுகின்றது. உண்மையிலே இதற்கான தீர்வு என்பது ஆண்டவரால் வழங்கப்படும். ஜனாதிபதி தேர்தல் வருகின்ற காலகட்டத்தில் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. தற்போது கடந்த கால ஜனாதிபதி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார் நான் அனைத்து ரகசியங்களையும் வெளியிடுவேன் என்று. அதனை நாங்கள் வேடிக்கையாக பார்க்க முடியாது. ஏனென்றால் அவர் இலங்கையில் ஒரு பொறுப்பு வாய்ந்த ஜனாதிபதி. அவர் கூறுகின்ற போது இதற்கு பின்னால் பாரிய உண்மைகள் இருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இது எதிர்காலத்தில் வெளிப்படையாக நிருபிக்கப்பட்டு இதற்குரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு.” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதை ஊசி ஏற்றப்பட்டு 10 பேரால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டாரா யாழ் இளம்பெண்?

Pagetamil

மாலைதீவு நாடாளுமன்ற தேர்தலிலும் சீன ஆதரவு தரப்பு அமோக வெற்றி!

Pagetamil

2 வருடங்களில் இலங்கையிலிருந்து வெளியேறிய 25.5 இலட்சம் பேர்: அதிர்ச்சித் தகவல்!

Pagetamil

ஈரானுக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்!

Pagetamil

திருகோணமலையையும், கிழக்கையும் தமிழர்கள் இழந்தது சம்பந்தனின் அரசியலாலேயே: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil

Leave a Comment