மகனுடன் சேர்ந்து இளைஞரை நடிகை ராதா தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நடிகர் முரளி நடித்த `சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராதா. இவர் மீதும், இவரது மகன் மீதும் சாலிகிராமம், லோகையா தெருவைச் சேர்ந்த டேவிட் ராஜ் (50) என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், “எனது மகன் பிரான்சிஸ் ரிச்சர்ட் (22) கடந்த 14-ம் தேதி இரவு 10.30 மணியளவில் சாலிகிராமம், லோகையா தெரு வழியாகச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த நடிகை ராதா மற்றும் அவரது மகன் தருண் இருவரும் சேர்ந்து என்னுடைய மகனை கடுமையாகத் தாக்கியுள்ளனர். எனவே, அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் புகாரில் தெரிவித்து உள்ளார். அதன்படி, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “கடந்த ஆண்டு டிச. 14-ம்தேதி ராதாவை, பிரான்சிஸ் ரிச்சர்ட் கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அதே மாதம் 24-ம் தேதி ரிச்சர்ட்டின் உறவினர் ஒருவர் நடிகை ராதா வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவை உடைத்து சேதப்படுத்தினாராம்.
இந்த விவகாரங்கள் தொடர்பாக நடிகை ராதா தரப்பில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் தெரிவிக்கப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது. இதன் பின்னணியில்தான் ராதாவும், அவரது மகனும் சேர்ந்து பிரான்சிஸ் ரிச்சர்ட் மீது தாக்குதல் நடத்தியதாக தற்போது புகார் கிடைத்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.