குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்னவுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (01) அனுமதி வழங்கியுள்ளது.
பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ், பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிர்வரும் 16ஆம் திகதி நீதிமன்றில் உண்மைகளை முன்வைக்குமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஹரக் கட்டா சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி. என். சமரக்கோன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமது கட்சிக்காரருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கான சட்ட அடிப்படைகள் இல்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, இந்த வழக்குத் தொடுப்பது முற்றிலும் சட்டத்திற்கு முரணானது எனவும் தெரிவித்தார்.
இதன்படி, குறித்த வழக்கை செல்லுபடியற்றதாக்குமாறு உத்தரவு பிறப்பிக்குமாறும், இந்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் விசாரணையை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.