இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு எதிர்வரும் 18ஆம் திகதி திருகோணமலையில் கூடவுள்ளது. அதற்கு முன்னதாக, திருகோணமலை மாவட்டத்தில் இரா.சம்பந்தனின் ஆதரவாளர்கள் புறமொதுக்கப்பட்டது தொடர்பான விசாரணைகள் நடைபெறவுள்ளன.
இலங்கை தமிழ் அரசு கட்சியினால் இதற்காக நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட விசாரணைக்குழு ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பில் திருகோணமலையில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்காமல் தனது ஆதரவாளர்கள் ஒதுக்கப்பட்டார்கள் என இரா.சம்பந்தன் தெரிவித்த குற்றச்சாட்டை ஆராய நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருந்த நிலையில், தற்போது, வட்டாரக்கிளைகளிற்கான தெரிவில் தனது ஆதரவாளர்கள் ஒதுக்கப்பட்டார்கள் என இரா.சம்பந்தன் இரண்டாவது குற்றச்சாட்டையும் சுமத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை ஆராய கூடவுள்ளது.
மார்பில் பாய்ந்த கனடா கடா
இரா.சம்பந்தன் வளர்த்த கடாவான குகதாசனே இப்பொழுது திருகோணமலையில் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளார். கனடா இறக்குமதியான குகதாசன், எம்.ஏ.சுமந்திரன் அணியை சேர்ந்தவர். கனடாவிலுள்ள முதியவர்கள் சிலர் பணத்தை இறைத்து, தமக்கு தேவையான விதத்தில் அரசியலை வடிவமைக்க விரும்பியதும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சீரழிவுக்கு பிரதான காரணங்களில் ஒன்று.
எம்.ஏ.சுமந்திரன் அணிக்கு தார்மீக, பண ஆதரவை இந்த வயோதிபர்கள் அணியே வழங்கி வருகிறது. இந்த பின்னணியிலேயே கட்சிக்குள் எம்.ஏ.சுமந்திரன் தற்போது கலகங்களை நிகழ்த்தி வருகிறார்.
மாவை சேனாதிராசாவை புறமொதுக்கியது, தற்போது இரா.சம்பந்தனை புறமொதுக்க ஆரம்பித்த விவகாரங்களின் பின்னணி இதுவே.
எம்.ஏ.சுமந்திரனை ஆதரித்த அணி, இதுவரை சம்பந்தனையும் ஆதரித்தது. கனடா வயோதிபர்கள், உலகத்தமிழர் பேரவையின் நிதி, தார்மீக ஆதரவு அனுசரணைகளை இரா.சம்பந்தனும் இதுவரை சுகித்து வந்தவரே. அந்த அணியே இப்பொழுது சம்பந்தனை அகற்றிவிட்டு, சுமந்திரனை முடிசூட்ட தீவிரமாக முயற்சிக்கிறது.
கனடா இறக்குமதி குகதாசனை அழைத்து வரும்போது, இரா.சம்பந்தன் வழங்கிய சில வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையென்ற தீவிர மனக்குறை, குகதாசன் தரப்புக்கு உள்ளது. முக்கியமாக, கடந்த முறை அவரை தேசியப்பட்டியலில் நியமித்திருக்க வேண்டும். ஆனால், அந்த வாக்குறுதியை சம்பந்தன் நிறைவேற்றவில்லை.
இந்த பின்னணியிலேயே குகதாசன் தற்போது சம்பந்தனுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
உள்ளூராட்சி வேட்பாளர்களில் அல்வா
கடந்த உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வேட்பாளர் நியமனங்கள் நடந்த போது, இரா.சம்பந்தனின் ஆதரவாளர்களை- குகதாசன் தவிர்த்து விட்டார். இந்த விவகாரத்தில் குகதாசன் தனித்து இப்படி செயற்பட்டிருப்பார் என நம்புவதற்கு துளியளவு வாய்ப்புமில்லை. கட்சியை கைப்பற்றும் சுமந்திரன் அணியின் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது நடந்திருக்கும்.
அந்த சமயத்தில் இரா.சம்பந்தன் 39 முறை குகதாசனின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பேற்படுத்தியும், குகதாசன் பதிலளிக்கவில்லை. அதை தொடர்ந்து, கட்சி செயலாளர், திருகோணமலையிலுள்ள மற்றொரு பிரமுகர் ஊடாக சம்பந்தன் தகவல் அனுப்பியும் தொடர்பு கிடைக்கவில்லை.
பின்னர், இரா.சம்பந்தனின் மகன் நேரில் வந்து, சம்பந்தன் அனுப்பிய வேட்பாளர் பட்டியலை குகதாசனிடம் கையளித்தார். ஆனால் அவர்கள் உள்வாங்கப்படவில்லை.
இதை தொடர்ந்தே, தனது ஆதரவாளர்கள் புறமொதுக்கப்பட்டது பற்றிய விசாரணையை இரா.சம்பந்தன் கேட்டிருந்தார். இதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவர் சீ.யோகேஸ்வரன்.
ஆனால். இந்த குழுவும் விசாரணையை மேற்கொள்ளவில்லை. விசாரணை மேற்கொள்ளப்படாமல் இருப்பதற்கு, கட்சி செயலாளரும் ஒரு காரணமென சொல்லப்படுகிறது. கட்சி பதில் செயலாளர் ப.சத்தியலிங்கமும், சுமந்திரன் அணியை சேர்ந்தவர். அவரையும் கனடா வயோதிபர்கள் ஏற்கெனவே அழைத்து உபசரித்து அனுப்பியுள்ளனர்.
“விசாரணை மேற்கொள்வதெனில் செயலாளரின் அனுமதியும், எழுத்து பூர்வ ஆவணமும் தேவை. எந்த சம்பவம் தொடர்பில் யாரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென செயலாளர் அறிவிக்க வேண்டும். அதை செய்யாமல் செயலாளர் காலம் தாழ்த்திக் கொண்டிருந்தார். விசாரணையை நீர்த்துப் போக செய்ய அவர் அப்படி செயற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எம்மிடம் உள்ளது“ என விசாரணைக்குழு உறுப்பினர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
திருகோணமலையில் குகதாசன் இராச்சியம்
2018இல் தொடங்கிய மாவட்ட கிளையை 2020 இல் இரா.சம்பந்தன் கலைத்தார். புதிய நிர்வாக தெரிவுக்காக 10 பேர் கொண்ட நிர்வாக குழுவொன்றையும் நியமித்திருந்தார். இதன்பின், மாவட்ட கிளையில் தலைவர், செயலாளர் என யாருமிருக்கவில்லை. 10 பேருக்கும் சம அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
2018 இல் மாவட்ட கிளை தலைவராக தெரிவு செய்யப்பட்ட குகதாசன், மீண்டும் தலைவராகும் நோக்கத்துடன், தற்போதும் மாவட்ட கிளை தலைவர் தானேயென்ற கோதாவில் புதிய நிர்வாக தெரிவுக்கான ஆலோசனை கூட்டங்களை ஆரம்பித்தார். இவற்றை தனது ஆதரவாளர்களை கூட்டியே நடத்தினார். சம்பந்தன் ஆதரவாளர்களான நீண்டகால கட்சி செயற்பாட்டாளர்கள் அனைவருமே புறக்கணிக்கப்பட்டனர். இதனால் பல வட்டாரக்கிளை கூட்டங்களில் களேபரங்களும் ஏற்பட்டது.
என்றாலும், சம்பந்தராலும் உடனடியாக எதுவும் செய்ய முடியவில்லை. அல்லது, நிலைமையின் விபரீதத்தை உணராமல் இருந்தார்.
இந்த பின்னணியிலேயே, குகதாசன் தனது தரப்பை வைத்து வட்டாரக்கிளைகளை தெரிவு செய்தார். இதேபோன்ற குற்றச்சாட்டுக்கள், கட்சியின் பதில் செயலாளர் சத்தியலிங்கத்தின் வவுனியா மாவட்டத்திலும் உள்ளது.
கட்சி வட்டாரக்கிளை, தொகுதிக்கிளை தெரிவில் யாருடைய ஆதரவாளர்கள் உள்ளார்கள் என்ற விடயம் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது- விரைவில் நடைபெறவுள்ள தலைவர் தெரிவினால். தொகுதிக்கிளைகளில் இருந்து செல்பவர்களே வாக்களிப்பவர்கள். இதனால், தனது தரப்பினர் தொகுதிக்கிளைகளில் ஆதிக்கம் செலுத்துவதை உறுதி செய்வதில் சுமந்திரன் தரப்பினர் தீவிரமாக உள்ளனர்.
இதனாலேயே, தமது தரப்பினர் ஒதுக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டை இரா.சம்பந்தன் முன்வைத்துள்ளார்.
சுமந்திரனை எதிர்க்கும் சம்பந்தன்
தனது ஆதரவாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர் என இரா.சம்பந்தன் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளதன் மூலம் மற்றொரு செய்தியும் புலப்படுகிறது. கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடும் எம்.ஏ.சுமந்திரனை ஆதரிக்கவில்லையென்பதே அது. தற்போதைய சூழலில், தலைமை பதவிக்கான போட்டியில் சுமந்திரன் தரப்பே முன்னணியில் உள்ளதை போன்ற தோற்றம் உள்ளது. இந்த சூழலில், தனது ஆதரவாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர் என இரா.சம்பந்தன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது, தலைமை தெரிவை பின்தள்ள வைக்கும் உத்தியா என்ற கேள்வியும் உள்ளது.
முன்னரை போல சுமந்திரனை ஆதரிப்பவர் எனில், சுமந்திரனுக்கு சாதகமான கள நிலவரம் இருந்தால், அதை குழப்ப சம்பந்தன் விரும்ப மாட்டார். ஆனால், இப்பொழுது அப்படியல்ல. திருகோணமலையில் சுமந்திரனுக்கு சாதகமாக உள்ள கள நிலவரத்தை மாற்றியமைக்க முயல்கிறார்.
கடந்த 3 வருடங்களிற்கு முன்னர் இருந்ததை போல- எதற்கும் சுமந்திரனே என்ற நிலைப்பாட்டில் இருந்திருந்தால், திருகோணமலையில் சுமந்திரனுக்கு சாதகமாக இருந்த சூழலை மாற்ற விரும்பியிருக்க மாட்டார். இப்போது, சம்பந்தன் தூக்கும் போர்க்கொடி, சுமந்திரனுக்கு எதிரானதே!
நாளை (17) திருகோணமலைக்கு செல்லும் ஒழுக்காற்றுக்குழு, திருகோணமலையிலுள்ள அதிருப்தியாளர்களை சந்திக்கும். குகதாசனிடமும் விசாரணை செய்யும். கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவும் திருகோணமலை செல்கிறார். திங்கள்கிழமை கட்சியின் அரசியல்குழு கூட்டம் நடைபெறும்.