கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள் மேலும் 8 வாரங்கள் வரை நீடிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படலாமென கருதப்படுகிறது. அகழ்வுப்பணியில் ஈடுபட்டுள்ள தரப்பினர் இதனை தெரிவித்தனர்.
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியின் எட்டாவது நாள் அகழ்வு இன்று (28) நிறைவடைந்தது.
கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் இதுவரை 39 மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. 4 அடி, 14அடி நீள அகலமுள்ள குழியில் அகழ்வுப்பணி இடம்பெற்று வருகின்றது.
களனி பல்கலைகழகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனையில் முல்லைத்தீவு- கொக்குத்தொடுவாய் வீதியின் மையப்பகுதி வரை புதைகுழி நீள்வதாக நம்பப்படுகிறது.
அந்த பகுதியில் அகழ்வு செய்வதெனில் வீதியை அகழ வேண்டியிருக்கும். அங்கு அகழ்வு பணியை மேற்கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் நாளை இறுதி முடிவு எடுக்கப்படும்.
அகழ்வுப்பணிகள் தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றில் நாளை கலந்துரையாடல் இடம்பெற்றவுள்ளது. அகழ்வு பணியில் ஈடுபடும் துறைகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் இந்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அகழ்வு பணிகளை மேற்கொள்ள வளத்தட்டுப்பாடு உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும் கைவிரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகழ்வுப்பணியின் இரண்டாம் கட்டம் எட்டு வாரங்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது. நாளையுடன் இந்த முதலாம் கட்டம் நிறுத்தப்படலாம் என்றும் எதிர் பார்க்கப்படுகின்றது. அதற்கான செலவுத்தொகை தீர்மானிக்கப்படும்.
இதுவரை விடுதலை புலிகள் என சந்தேகிக்கும் 39 ஆண், பெண் மனித உடல் கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.