மனித உரிமைகளை மதிக்காது மிருகத்தனமாக செயற்பட்ட யாழ்ப்பாணம்-வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்-பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் அது தொடர்பாக வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்-
சித்தங்கேணியைச் சேர்ந்த 26வயதான நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறான பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் யாழ் மாவட்டத்தில் இடம்பெறுவது இதுவே முதல் தடவை அல்ல. ஆனால் இதுவே இறுதிச் சம்பவமாக இருக்க வேண்டும்.
சந்தேக நபர்களை தாக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை. இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கே உண்டு. ஆனால் இங்கு பொலிஸார் சந்தேக நபர்களை வலுக்கட்டாயமாக குற்றவாளிகளாக்கி விடுகின்றார்கள்.
சந்தேக நபர்களை மனிதராக மதிப்பதுமில்லை. மனித உரிமைகளை மதிக்கத் தெரியாத பொலிஸார் எந்தத் தருணத்திலும் பொலிஸாராக இருக்கத் தகுதியற்றவர்கள்.
வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்த இளைஞனை பொலிஸ் காவலரனில் வெளிப்படையாக காட்சிப்படுத்தவில்லை, இளைஞனின் குடும்பத்தாரிடம் இளைஞனை வெளிப்படுத்தவில்லை, எல்லாவற்றுக்கும் மேலாக 24மணித்தியாளத்திற்குள் நீதிமன்றில் முற்படுத்த வேண்டிய சந்தேக நபரை நான்கு தினங்கள் பிரத்தியேக மறைவிடம் ஒன்றில் வைத்து உணவு கொடுக்காது மிருகத்தனமாக தாக்கியுள்ளனர்.
இளைஞனது மரணத்திற்கு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சகல பொலிஸாரும் பொறுப்புக் கூற வேண்டும். உடனடியாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் இளைஞனது மரணத்துடன் தொடர்புபட்ட பொலிஸார் அனைவரது பதவிகளும் பறிக்கப்பட்டு – கைது செய்யப்பட்டு பக்கச்சார்பற்ற விசாரணை இடம்பெற்று தண்டனை வழங்கப்பட வேண்டும்.
யாழ்மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொலிஸ் நிலையங்களில் சந்தேக நபர்களை மறைத்து வைத்து தாக்கி தமது வாக்குமூலங்களை திணிப்பதற்கான பிரத்தியேக இடங்கள் இருப்பதனை அறிய முடிகிறது.
மனித உரிமைகளை பேணும் நிறுவனங்கள் பலவும் செயற்பட்டு வரும் நிலையில் பொலிஸாரின் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. உயிரிழந்த இளைஞனது குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டிய அதேநேரம் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதனையும் உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.