28.8 C
Jaffna
December 7, 2023
இலங்கை

புலம்பெயர் முதலீடு வேண்டுமானால் மாகாணசபைகள் முழுமையான அதிகாரத்துடன் இயங்க வேண்டும்

புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளைக் கோரிநிற்கும் ஜனாதிபதி மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை முழுமையாக வழங்குவதற்கு முன்வரவேண்டும். மாகாணசபைகள் தீர்மானம் இயற்றும் நிறுவனங்களாக இல்லாமல் சட்டமியற்றும் நிறுவனங்களாக மாற வேண்டும். அப்பொழுதுதான் புலம்பெயர் தமிழர்கள் அச்சமின்றி இலங்கையில் தமது முதலீடுகளை மேற்கொள்ள முன்வருவார்கள். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு அவர்களின் முதலீடுகள் தேவை என்பதை உண்மையிலேயே ஜனாதிபதி விரும்பினால் அவர்களின் முதலீடுகள் பாதுகாப்பாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை ஜனாதிபதி வழங்க வேண்டும். அதற்கு மாகாணசபைகள் முழுமையான அதிகாரம் பெற்றிருப்பது அவசியம் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பது என்ற போர்வையிலேயே மாகாணசபைகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் அரசியல் சாசனத்திற்கான பதின்மூன்றாவது திருத்தச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. மகிந்த ராஜபக்சவிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவரை பதின்மூன்றாவது திருத்தத்திற்கு மேலதிகமாகச் சென்று அதிகாரங்களை வழங்குவோம் என்றும் மாகாணசபைகளை சரியான முறைகளில் நடைமுறைப்படுத்துவோம் என்றும் ஐ.நா. செயலாளருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் இந்திய தலைவர்களுக்கும் பல்வேறுபட்ட உறுதிமொழிகளைக் கொடுத்தபொழுதிலும்கூட கடந்த ஐந்து வருடங்களாக மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில்கூட மாகாணசபைகள் இயங்குமா என்ற கேள்வியும் எழக்கூடிய சூழ்நிலை இன்று தோன்றியிருக்கின்றது.

ஜனாதிபதியும் ஆளும் கட்சியினரும் அடுத்த வருடத்தை தேர்தல் ஆண்டாக குறிப்பாக பாராளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெறுமென்று கூறிவருகின்றனர். ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக நடைபெறாத மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் எப்பொழுது நடைபெறும் என்பது குறித்து எவ்வித அறிவித்தல்களும் இல்லை. இது உலக நாடுகளையும் தமிழ் மக்களையும் ஏமாற்றும் ஒரு செயற்பாடாகும்.

இப்பொழுது புதிய வரவு-செலவுத்திட்டத்திற்கான பிரேரணைகளை முன்மொழிந்த ஜனாதிபதி அவர்கள் நாட்டில் புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க புலம்பெயர் தமிழர்கள் முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதுடன் தனியார் மற்றும் தனி நிறுவனங்களும் மாகாணசபைகளும் புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியுமென்றும் கூறியுள்ளார்.

இன்றைய சூழலில் பதினைந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழ் மக்கள் ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் வாழ்கின்றனர் என்பதும் பொருளாதாரத்தில் கனிசமான முன்னேற்றத்தைக் கொண்டவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள் என்பதும் வெளிப்படையான விடயமாகும்.

தாம் பிறந்து வளர்ந்த வடக்கு-கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய அவர்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவ்வாறு தாம் விரும்பிய வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு முதலீடுகளைக் கொண்டுவருதவற்கு மாகாணசபைகளுக்கு எந்தவிதமான அதிகாரங்களும் இதுவரை கிடையாது. ஆகவேதான் இலங்கை திவாலான நாடாக அறிவிக்கப்பட்ட காலத்திலும்கூட, இலங்கையைப் பொருளாதார ரீதியாக மீட்சியடைய வைக்க வேண்டுமாக இருந்தால், சர்வதேச முதலீடுகளை இலங்கை உள்வாங்க தேவை இருப்பதாகவும் அதில் புலம்பெயர் மக்களின் கனிசமாக இருக்க முடியுமென்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தொடர்ச்சியாகக் குறிப்பிட்டு வந்துள்ளது.

அவ்வாறு புலம்பெயர் தமிழ் மக்களின் முதலீடுகளை உள்வாங்குவதாக இருந்தால், சர்வதேச முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரங்களை மாகாண அரசுகளுக்கு வழங்க வேண்டுமென்பது முதன்மையானது.
அதுமாத்திரமல்லாமல், ஜனாதிபதி கூறுவது போன்று, பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான நிலங்களைப் பகிர்ந்தளிப்பது தொடக்கம், முதலீடு செய்ய முன்வருபவர்களுக்கான சகல சலுகைகளையும் வழஙகக்கூடிய அதிகாரங்களும் மாகாணசபைகளுக்கு இருந்தாக வேண்டும்.

ஜனாதிபதி தொடர்ச்சியாக புலம்பெயர் மக்களின் முதலீடுகளைக் கோரி நிற்கின்றார். ஆனால் புலம்பெயர் தமிழ் மக்கள் தமது முதலீடுகளைக் கொண்டுவருவதற்கான அதிகாரங்களை ஆக்கபூர்வமான வகையில் மாகாணங்களுக்குக் கொடுப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவது மாத்திரம் போதாது. மாறாக, பொருளாதார நலன்களை மேம்படுத்துவதற்கு சர்வதேச முதலீடுகளை உள்வாங்குவதற்கான புதிய சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். குறிப்பாக மாகாணங்களுக்கு அத்தகைய அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்.

வெளிநாட்டு முதலீடுகள் என்று சொல்கின்றபொழுது வெறுமனே பல்கலைக்கழகங்களில் மாத்திரமல்லாமல், சர்வதேச தரம் வாய்ந்த வைத்தியசாலைகள், விவசாயம் மற்றும் கடல் வளங்களை உள்ளடக்கிய அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான வலுவான திட்டங்கள் உற்பத்திசார் தொழிற்சாலைகள் போன்றவற்றைச் செயற்படுத்துவதற்கும் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வேண்டும்.
இவை நடைபெற வேண்டுமாயின் உடனடியாக மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற வேண்டும்.

எல்லா மாகாணசபைத் தேர்தல்களையும் நடாத்துவதில் நெருக்கடிகள் காணப்படுமாயின், குறைந்தபட்சம் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல்களாவது நடாத்தப்படவேண்டும்.
பொருளாதாரத்தை வளப்படுத்த, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஒரு தார்மீக சமுதாயம் ஒன்றை உருவாக்கக்கூடிய வகையில் முடிவெடுத்து செயற்படக்கூடிய அதிகராங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவேண்டும். இவற்றை விடுத்து வெற்று வார்த்தைகளும் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் முடிவுகளுக்கு அடங்கிப் போவதுமாக இருந்தால் இந்த நாட்டில் எதனையும் சாதிக்க முடியாது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அத்துமீறிய 22 இந்திய மீனவர்கள் கைது

Pagetamil

தெல்லிப்பளை வாள்வெட்டு சம்பவம்: 3 ரௌடிகள் கைது!

Pagetamil

விபத்தில் 2 பேர் பலியான சம்பவத்தில் பேருந்து சாரதிக்கு 12 வருட கடூழிய சிறை!

Pagetamil

முன்னாள் டிஐஜி நாலக சில்வா விடுதலை!

Pagetamil

கல்கிசை நீதவானை சாட்சியமளிக்க முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!