நெல்லியடி பொலிஸ் பிரிவில் மூதாட்டியொருவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான மூவரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடமராட்சி அல்வாய் பகுதியில் அண்மையில் சந்தேகத்திற்குரிய விதத்தில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி, கொலை செய்யப்பட்டுள்ளார் என பரிசோதனையில் தெரிய வந்திருந்தது.
அவரது மரணத்தில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது உடல் மாதிரிகள் இரசாயன பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதன் முடிவுகளின்படி, மூதாட்டி கழுத்து நெரித்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்வாய் கிழக்கு பகுதியில் வசித்து வந்த பழனிப்பிள்ளை தில்லைராணி (89) என்பவரே கடந்த ஒக்ரோபர் 4ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
மூதாட்டி திருமணம் செய்யாமல் தனித்து வாழ்கிறார். அவரது சகோதரியின் மகன் ஒருவர் கனடாவில் வசிக்கிறார். அவரே மூதாட்டியின் பராமரிப்பு செலவை கவனித்து வருகிறார்.
மூதாட்டி தனித்து வாழ்ந்து வந்த வீடு அமைந்துள்ள வளவுக்குள் மற்றொரு வீடும் அமைந்துள்ளது. அங்கு இளம் குடும்பமொன்று வசித்து வருகிறது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் மாகாணசபை உறுப்பினராக அங்கம் வகித்த ஒருவரின் மகள், இரண்டாவது திருமணம் செய்து, அந்த வீட்டில் வசிக்கிறார்.
கனடாவில் உள்ள அந்த மூதாட்டியின் மகன், அந்த குடும்பத்திற்கு பணம் அனுப்பியே பராமரித்து வந்துள்ளார். மூதாட்டியை பராமரிக்க 19 வயதான பெண்ணொருவர் பணிக்கமர்த்தப்பட்டிருந்தார்.
மூதாட்டி கொல்லப்பட்டது பரிசோதனையில் உறுதியானதையடுத்து, மாகாணசபை உறுப்பினரின் மகள், கணவன், மூதாட்டியை பராமரித்த 19 வயதான பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மூதாட்டி சொத்துக்காக கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
கைதான பணிப்பெண் வழங்கிய வாக்குமூலத்தில், கொலை நடந்ததை குறிப்பிட்டுள்ளார்.
அந்த வளாகத்தில் குடியிருந்த பெண், மூதாட்டியை திட்டி, தாக்கி துன்புறுத்துவதாகவும், சம்பவத்திலன்று காலையில் மூதாட்டி தங்கியிருந்த வீட்டிற்குள் அந்த பெண் சென்ற பின்னர், நீண்டநேரமாக உரத்த குரலில் சத்தம் கேட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சற்று நேரத்தின் பின்னர் அந்த பகுதிக்கு தான் சென்ற போது, வீட்டுக்குள் சில ஆடைகளை அந்த பெண் எரித்ததை கண்டதாகவும், மூதாட்டி இயலாத கட்டத்தில் உள்ளதாகவும், அதனை பார்க்கக்கூடாது என தன்னை அங்கு செல்ல அனுமதிக்கவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.
பின்னர் தான் வீட்டுக்குள் நுழைந்தபோது, மூதாட்டி அலங்கோலமான நிலையில் உயிரிழந்திருந்ததாகவும், இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாதென தன்னை மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.
இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, அந்த வளாகத்தில் குடியிருந்த தம்பதியின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரஞ்சித், பணிப்பெண் இன்று ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவில்லையென தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
பணிப்பெண் வாக்குமூலம் வழங்கவில்லையென மன்றுக்கு அறிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் நாளையளவில் புதிய சில திருப்பங்கள் எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், மூதாட்டி உயிரோடு இருந்தபோது, அவரது கைரேகை பெற்று காணி உறுதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.