நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுக்கள் இன்று சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம மற்றும் மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மற்றும் பிரதிவாதி சரத் நிஷாந்த ஆகியோர் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த நீதிபதிகள், மனுவை எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் திகதியை அறிவித்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதி சனத் நிஷாந்த நீதிமன்றில் முன்னிலையாகியதுடன், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பிரதிவாதி சனத் நிஷாந்தவுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது.
கடந்த ஓகஸ்ட் 25ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், பொதுமக்கள் போராட்டத்தின் போது நீதிவான்கள் பிணை வழங்குவதில் கடைப்பிடித்த நடைமுறையை விமர்சித்து இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தை அவமதித்ததாக 3 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம், பிரியலால் சிறிசேன மற்றும் விஜித குமார ஆகிய இரு சட்டத்தரணிகளினால் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.