வடமராட்சி அல்வாய் பகுதியில் மூதாட்டியொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஒருவரின் மகள், கணவன், வீட்டு பணிப்பெண் ஆகியோர் நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்ரோபர் 4ஆம் திகதி அல்வாய் பகுதியில் உள்ள வீடொன்றில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரான சிறிலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த ஒருவரின் மகள், கணவன் ஆகியோர் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். அந்த வளவிலிருந்த பிறிதொரு வீட்டில் மூதாட்டி தனிமையில் வசித்து வந்துள்ளார். மூதாட்டியின் பராமரிப்புக்காக 19 வயதான யுவதியொருவர் தங்கியிருந்துள்ளார்.
அவருக்கு ரூ.75,000 மாத சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது.
மூதாட்டியின் மரணத்தில் சந்தேகமடைந்த சட்டவைத்திய அதிகாரி, மேலதிக பரிசோதனைக்காக உடல் மாதிரிகளை கொழும்புக்கு அனுப்பி வைத்திருந்தார்.
இதற்குள், வீட்டிலிருந்த மூதாட்டியின் படுக்கை, போர்வை என்பன அங்கிருந்த குடும்பத்தினரால் எரிக்கப்பட்டிருந்தது.
மூதாட்டியின் உடல் பாகங்கள் கொழும்பில் பரிசோதிக்கப்பட்ட பின்னர், இது கொலைச்சம்பவம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரின் 32 வயதான மகள், அவரது கணவர், அந்த வளாகத்திலிருந்த 19 வயதான பணிப்பெண் ஆகியோர் நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள, விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
நாளை அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.