ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி கவிரத்னவை நோக்கி, மகிழ்ச்சிப்படுத்துவது, திருப்திப்படுத்துவது என்ற வார்த்தைகளை குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த மன்னிப்பு கேட்க வேண்டுமென எழுந்த கோரிக்கைகளால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
ரோஹிணியை எவ்வாறு திருப்திப்படுத்துவது, மகிழ்ச்சிப்படுத்துவதென தெரியவில்லை. அதனை யாரை வைத்து, எவ்வாறு செய்வதென தெரியவில்லை என்றார்.
இதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச, சபைக்கு பொருத்தமில்லாத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அந்த வார்த்தைகள் ஹன்சார்ட்டில் இருந்து நீக்கப்படும் என்றார்.
எனினும், எதிர்க்கட்சிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
இது தொடர்பில் நீண்டவாதப்பிரதிவாதங்கள் எழுந்தன.
இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த அந்த வார்த்தையை நியாயப்படுத்தினார். ரோஹிணியின் கேள்வியில் ஒய்வூதியர்களை மகிழ்ச்சிப்படுத்துவீர்களா என கேட்டிருந்தார். எனது பதிலில் ஓய்வூதியர்களை மகிழ்ச்சிப்படுத்தலாம், ஆனால் எனது பதிலில் ரோஹிணி மகிழ்ச்ச்சியடைவாரா, திருப்தியடைவாரா என்பது தெரியாது என்றேன் என குறிப்பிட்டார்.
எனினும், பின்னர் உரையாற்றிய ரோஹிணி, முதலாவது கூறிய வார்த்தையில் பிரச்சினையில்லை, ஆனால் இரண்டாவது இரட்டை அர்த்தமுடையது, அந்த வார்த்தையை கூறிய இராஜாங்க அமைச்சரை சபை நடவடிக்கையிலிருந்து நீக்க வேண்டுமென்றார்.
எதிர்க்கட்சி தலைவரும் இந்த கோரிக்கையை முன்வைத்தார். ஆளுந்தரப்பில் உள்ள கீதாகுமாரசிங்க போன்ற பெண் உறுப்பினர்களின் நிலைப்பாட்டையும் கேட்டார்.
இதையடுத்து உரையாற்றிய கீதாகுமாரசிங்க, இராஜாங்க அமைச்சரின் முதல் வார்த்தையில் எந்த பிரச்சினையுமில்லையென்றும், இரண்டாவது வார்த்தை தவறானது, இரட்டையர்த்தமுடையது, அதை ஏற்க முடியாது என்றார்.
இதையடுத்து, உரையாற்றிய நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, முதலாவது வார்த்தையில் எந்த பிரச்சினையுமில்லையென்றும், இரண்டாவது வார்த்தை தவறானது, ஏற்க முடியாது என்றார்.
ஒரு பிழை நடந்துள்ளது, அதை சரிசெய்ய பிரதி சபாநாயகர் தவறிவிட்டார் என்றார்.
அதற்கு நடவடிக்கையெடுக்க சபாநாயகர் வரும்வரை காத்திருக்க வேண்டியதில்லை என்றார்.
பிரதி சபாநாயகர், “இங்கு தவறு நிகழ்ந்துள்ளது. இராஜாங்க அமைச்சர் சொல்வதற்கு ஏதுமுள்ளதா?“ என, இராஜாங்க அமைச்சரை நோக்கி கேட்டார்.
“எல்லா விதமான தவறுகளையும் எனது தலையில் போட வேண்டாம். நான் தவறிழைக்கவில்லை“ என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் காணொளிகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை நாளை சபாநாயகர் அறிவிப்பார் என, பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.