எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் நால்வர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனைய 22 மீனவர்களுக்கும் விளக்கமறியலை நீடித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்துர் வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 26 தமிழக மீனவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று(08) வியாழக்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றில் இடம்பெற்றது.
கடந்த மாதம் 14 ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து 12 தமிழக மீனவர்கள் 3 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இதேபோன்று கடந்த 28ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து 2 படகுகளுடன் மேலும் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு 5 இழுவைப் படகுகளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 26 மீனவர்களும் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளினால் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது கடந்த மாதம் 14 ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து 3 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களில் ஒருவர் ஒரு படகின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து அந்த படகினை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட நீதவான், அந்த படகில் பயணித்த உரிமையாளர் உள்ளிட்ட நால்வரையும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சாதாரண சிறைத்தண்டனை விதித்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.
ஏனைய 24 மீனவர்களுக்கும் எதிர்வரும் நவம்பர் 15ம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.
இதேவேளை, குறித்த வழக்கு விசாரணையின் போது கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து விசேடமாக வருகைதந்திருந்த அரச சட்டத்தரணி நா. நிசாந்தன் பிரசன்னமாகி வாதங்களை முன்வைத்திருந்தார்.
இதுவரைகாலமும் எல்லை தாண்டும் மீனவர்களது வழக்கு விசாரணைகளின் போது படகு உரிமையாளர் தரப்பு தவிர்க்கப்டப்டு படகில் கைதானோரில் முதன்மையான நபரே 1ம் இலக்க சந்தேக நபராக குறிப்பிடப்பட்டு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கைது நடவடிக்கையின் போது படகில் பிரசன்னமாகியிருக்காவிடினும், படகின் உரிமையாளர், வாடகைக்கு எடுத்து பயண்படுத்துபவர், தலைவர் ஆகிய மூவரில் ஒருவரை முதன்மை சந்தேகநபராக குறிப்பிட வேண்டும் எனவும், அவ்வாறு முதன்மை சந்தேக நபராக குறிப்பிட்டு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் சந்தரப்பங்களில் குறித்த நபர் மன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்க வேண்டும் என சட்ட ஏற்பாடுகளில் உள்ள விடயத்தை சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து விசேடமாக வருகைதந்திருந்த அரச சட்டத்தரணி நா. நிசாந்தன் மன்றுரைத்தார்.
மீனவர்கள் தரப்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி இதனை மறுத்து, 2018 1ம் இலக்க 15 ம் பிரிவு வெளிநாட்டு படகுகளுக்கான சட்டத்தின் பிரகாரம் அவ்வாறு வலியுறுத்தப்படவில்லை என ஆட்சேபம் தெரிவித்தார்.
இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதவான் குறித்த விடயம் தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் வரை 22 மீனவர்களது விளக்கமறியலை வரும் நவம்பர் 15ம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.