ஸ்லோவாக்கியாவின் புதிய அரசாங்கம் உக்ரைனுக்கு ரொக்கெட்டுகள் மற்றும் வெடிமருந்துகளை நன்கொடையாக வழங்கும் திட்டத்தை புதனன்று நிராகரித்தது.
பிரதம மந்திரி ராபர்ட் ஃபிகோ தேர்தல் பிரச்சாரத்தின் போதே, ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராடும் உக்ரைனுக்கான இராணுவ உதவியை நிறுத்துவதாக உறுதிமொழி அளித்திருந்தார். அவர் ரஷ்ய ஆதரவாளர்.
இந்த உதவிப் பொதியில் 140 KUB வான் பாதுகாப்பு அமைப்பு ரொக்கெட்டுகள், 5,000 க்கும் மேற்பட்ட 125 மிமீ பீரங்கி வெடிமருந்துகள் மற்றும் 4 மில்லியன் சிறிய ஆயுத வெடிமருந்துகள் ஆகியவை அடங்கும்.
நேட்டோ அங்கத்துவ நாடான ஸ்லோவாக்கியாவில் பதவியிலிருந்த காபந்து அரசாங்கம் கடந்த அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு முன்னர், மேற்படி உதவி திட்டத்தை அறிவித்திருந்தது.
புதன்கிழமையன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஃபிகோவின் அரசாங்கம் இந்த தொகுப்பை நிராகரித்ததாக அரசாங்கத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கான மேற்கத்திய இராணுவ ஆதரவையும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளையும் விமர்சிக்கும் பிரச்சாரத்தை ஃபிகோ மேற்கொண்டார். ஹங்கேரியின் தலைவர் விக்டர் ஆர்பனைப் போல, உக்ரைன் விவகாரத்தில் அமைதிப் பேச்சுக்களையே ஸ்லோவாக்கியாவின் புதிய பிரதமர் ஆதரிக்கிறார்.
செப்டம்பர் 30 தேர்தலில் ஃபிகோவின் இடதுசாரி SMER-SSD கட்சிவெற்றி பெற்றது . மத்திய-இடது HLAS மற்றும் தேசியவாத SNS கட்சிகளுடன் ஆளும் கூட்டணியை உருவாக்கியுள்ளது.
இராணுவக் கடைகளில் இருந்து உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்வதை நாடு நிறுத்தும் என்று ஃபிகோ பலமுறை கூறியிருக்கிறார், ஆனால் தனியார் வணிக ஒப்பந்தங்கள் பாதிக்கப்படாது என்று அவர் சமீபத்தில் தெளிவாகக் கூறினார்.
அண்மைக்காலமாக ஸ்லோவாக்கியா, உக்ரைனின் உறுதியான ஆதரவாளராக இருந்தது. மற்றும் முந்தைய மைய-வலது அரசாங்கம் சண்டை வாகனங்கள் மற்றும் S-300 வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் MiG-29 ஜெட் உள்ளிட்ட இராணுவ உபகரணங்களை வழங்கியது.
அதன் கிழக்கில் உக்ரைனுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஸ்லோவாக்கியா, பெப்ரவரி 2022 இல் ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு, ஃபிகோவின் நியமனத்திற்கு முன்னர், 13 தொகுப்புகளில் 671 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள இராணுவ உதவிகளை அனுப்பியது.