இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகிகளை நீக்குவதற்கான கூட்டுத் தீர்மானத்தை நாளை (9) பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (8) தீர்மானித்துள்ளது.
விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிர்வாகம் மீதான அதிர வைக்கும் பெரும் ஊழல் மோசடி, நிர்வாக செயற்றிறனின்மை உள்ளிட்ட பல விடயங்களை விளையாட்டு அமைச்சர் இன்று வெளிப்படுத்தினார்.
இதையடுத்து, உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உத்தியோகபூர்வ சபையை நீக்குவதற்கு உடனடியாக கூட்டுத் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து இந்த தீர்மானத்தை எடுத்து, ஐசிசிக்கும் அறிவிக்க வேண்டுமென குறிப்பிட்டார்.
அப்படியொரு தீர்மானத்தை விவாதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்த ஆளும் தரப்பு, அதை முறைப்படி நாளை மேற்கொள்ள முடியுமென்றது.
இதையடுத்து, பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (8) பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
அதில், இந்த விவாதத்தை நாளை முழுநாளும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.