இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் சரியான திட்டத்தை கடைபிடிக்காவிட்டால், தேசிய அணியின் வீழ்ச்சியை தடுக்க முடியாது. அதுதான் இப்போது நடந்துள்ளது. மற்றையது அணியின் ஒழுக்கம் மிகவும் முக்கியமானது என 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் முன்னாள் உப தலைவர் அரவிந்த டி சில்வா தெரிவித்தார்.
தற்போதைய தேசிய அணியில் பல திறமையான வீரர்கள் இருந்தாலும், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்கக்கூடிய கிரிக்கெட் நிர்வாகம் இல்லை என்றும் அவர் கூறினார்.
தற்போதைய கிரிக்கெட் சபையின் மோசமான நிர்வாகத்தினால் கிரிக்கட் அணியின் கதி என்னவாகும் என அவரிடம் ஊடகங்கள் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரவிந்த டி சில்வா கூறியதாவது:
நாங்கள் விளையாடும் போது கிரிக்கெட் சபை சரியாக பராமரிக்கப்பட்டது. அவர்கள் அணி ஒழுக்கத்தை, முதல் விடயமாக கொண்டு வந்தனர். வீரர்களையும் அடிக்கடி சோதனை செய்தார். இதனால் வீரர்கள் சரியாக விளையாடினர். தவறு செய்யவில்லை. இன்று நிலைமை வேறு. நிர்வாகம் சரியாக நடக்கவில்லை என்றால், வீரர்கள் தவறாக வழிநடத்தப்படலாம். அணியில் சிறந்த மற்றும் திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். இவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் தரக்கூடிய நிர்வாகம் இல்லை.
இப்போதும் நிர்வாகம் சரியான திட்டத்தை கடைபிடிக்காவிட்டால், இலங்கை தேசிய அணி மேலும் வீழ்ச்சியடையலாம். விதிகளை அமைக்கவும். நிர்வாகத்தை மாற்றி, நாட்டின் மீது அக்கறையுள்ள, கிரிக்கெட்டை நேசிக்கும் நபர்களை நியமிக்க வேண்டும். நாங்கள் விளையாடும் போது கிரிக்கெட் நிர்வாகம் நன்றாக இருந்தது.
இப்படியே போனால் நன்றாக கிரிக்கெட் விளையாடும் வீரர்களின் எதிர்காலம் அழிந்து போகலாம். நான், அர்ஜுன மற்றும் குழுவினரிம் கிரிக்கெட் நிர்வாகத்தை ஒப்படைத்தால், நாட்டுக்கு சிறந்த சேவையை செய்வோம் என்றார்.