இலங்கை கிரிக்கெட் அணி போட்டிகளில் வெற்றி பெறும் போது இலங்கையில் இவ்வாறான பிரச்சினைகள் இருந்ததில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் நேற்று (5) பிற்பகல் தெரிவித்துள்ளார்.
பயிற்றுவிப்பாளர்களை நீக்குவது தொடர்பில் பேச முடியாது என தெரிவித்த குசல் மெண்டிஸ், அது தனது கட்டுப்பாட்டில் இல்லை எனவும், அவ்வாறான முடிவுகளை எடுப்பதற்கு வேறு நபர்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு போட்டியில் தோல்வியடைந்ததால் தனது அணி பலவீனமான அணி என்று ஒரு போதும் கூறமாட்டேன் எனவும், இந்த போட்டிக்கு முன்னர் பல போட்டிகளில் தோல்வியடைந்தாலும், அந்த போட்டிகளிலும் ஒரு அணியாக சிறப்பாக விளையாடியதாகவும் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த வீரர்களுடன் ஒரு அணியாக முன்னோக்கிச் செல்வேன் என நம்புவதாகவும், அடுத்த உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணியாக இந்த அணி மாற முடியும் என்றும் குசல் மெண்டிஸ் மேலும் கூறினார்.
டெல்லி அருண் ஜெட்லி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (5) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குசல் மெண்டிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த மைதானத்தில் இன்று (6) இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.