,இந்தியாவின் கேரள மாநிலத்தில் யூடியூபருக்கு காதல் வலை வீசி- ஹனி ட்ராப் செய்து பணம் மற்றும் காரை திருடிய சம்பவத்தில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இடுக்கி வட்டப்பாறையைச் சேர்ந்த பி.எஸ்.அபிலாஷ் (28), கொல்லம் கைதோடு நிலமேலைச் சேர்ந்த அல் அமீன் (23), இடுக்கி சந்தன்பாறையைச் சேர்ந்த பி.அதிரா (28), இடுக்கி வளராவைச் சேர்ந்த கே.கே.அக்ஷயா (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பணித்துறையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த இவர்களை கூத்தாட்டுக்குளம் போலீசார் கைது செய்தனர்.
குடும்ப ஆலோசகராக இருக்கும் மாஞ்சேரியைச் சேர்ந்த யூடியூபர் ஒருவரே இந்த மோசடியில் சிக்கியுள்ளார்.
நடுத்தர வயதுடைய யூடியூபரை புதன்கிழமை மதியம் 2 மணியளவில், தனக்கு கவுன்சிலிங் தேவை எனக் கூறி கூத்தாட்டுக்குளத்தில் உள்ள வாடகை அறைக்கு அக்ஷயா அழைத்துள்ளார்.
அங்கு அக்ஷயா கொடுத்த ஜூஸை குடித்துவிட்டு தூங்கிய அவர், எழுந்து பார்த்ததும் மோசடி கும்பலை சேர்ந்த 4 பேர் ஆதிராவை நிர்வாணமாக நிற்க வைத்து போட்டோ, வீடியோ எடுத்துள்ளனர்.
அப்போது அந்த கும்பல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளனர்.
யூடியூபர் தனது கணக்கில் இருந்த ரூ.14000ஐ கூகுள் பே மூலம் பரிமாற்றம் செய்தார். இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள அவரது காரும் அந்தக் கும்பலால் பறிக்கப்பட்டது.
கூத்தாட்டுக்குளம் போலீசில் யூடியூபர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மொபைல் டவர் இருப்பிடம் மற்றும் வாகனத்தின் ஜிபிஎஸ் இடம் மூலம் குற்றவாளியின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. இரவில் அவர்களை போலீசார் பிடித்தனர். இந்த கும்பல் வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளதா என சோதனை நடத்தப்படும் என டிவைஎஸ்பி டி.பி.விஜயன், இன்ஸ்பெக்டர் எம்.ஏ.ஆனந்த் ஆகியோர் தெரிவித்தனர்.