பண மோசடி தொடர்பில் தேடப்பட்டு வரும் ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
பத்தரமுல்லை வீதிப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் தோட்டம் ஒன்றை புனரமைப்பதற்காக குறித்த நிறுவனத்திடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாவை இந்த சந்தேக நபர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் பெற்றுக்கொண்ட தொகை 9,943,108.03 ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெறுமதிக்கு நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளாமல் இந்த சந்தேகநபர்கள் பணம் மோசடி செய்தமை தொடர்பில் மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் குறித்த நிறுவனம் முறைப்பாடு செய்துள்ளதுடன், அதன்படி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் இலக்கம் 31, 7, பெபிலியான வீதி, நெதிமால, தெஹிவளை என்ற முகவரியில் ‘D marc solution (PVT) LTD’ என்ற பெயரில் ஒப்பந்த நிறுவனத்தை நடத்தி வந்ததுடன், அதன் உரிமையாளர்களாகவும் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் 31 வயதுடைய விக்னேஸ்வரன் கணேசன் எனவும், பெண் சந்தேகநபர் 36 வயதான ரேவல் நிரோஷனி ராஜரத்தினம் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுதிகாரியின் – 071 – 8137373 அல்லது 011 2852556 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோருகின்றனர்.