நேற்று (02) மாலை மாத்தறை இலங்கை வங்கியின் வாகன தரிப்பிடத்திற்கு அருகில் தரையில் விழுந்து கிடந்த 50 இலட்சம் ரூபா பணத்தை எடுத்து, வங்கியில் ஒப்படைத்தவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
மாத்தறை நகரிலுள்ள கூரியர் சேவை நிறுவனம் ஒன்றின் உதவி முகாமையாளர் சந்தன உதயங்க (38) என்பவரே அதனை எடுத்து, வங்கியில் ஒப்படைத்துள்ளார்.
வங்கி ஊழியர்கள் ஏ.டி.எம்.களுக்கு எடுத்துச் சென்ற அல்லது மத்திய வங்கியில் வைப்புச் செய்ய எடுத்துச் சென்ற 50 இலட்சம் பணம் தரையில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சந்தன உதயங்க அஹங்கம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.
குவியல் குவியலாக தரையில் விழுந்திருந்த 50 இலட்சம் ரூபாய் நோட்டுகளை போட்டோ எடுத்து, பின்னர் இதுபற்றி பாதுகாப்பு அதிகாரிக்கு தெரிவித்து வங்கி அதிகாரியை அழைத்து அவர்களிடம் ஒப்படைத்தார்.
பின்னர், தான் வந்த நோக்கத்திற்காக வங்கியில் பணத்தை வைப்பதற்காக வரிசையில் நின்றபோது, சம்பவத்தை தூரத்திலிருந்து பார்த்த மாத்தறை கம்புருகமுவ கார் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் அனில் சுதுசிங்க நடந்த சம்பவத்தை பற்றி கேட்டறிந்துள்ளார்.
தொழிலதிபர் அனில் சுதுசிங்க வங்கியின் முகாமையாளருக்கு அறிமுகமானவர் என்பதனால் அவர் சந்தன உதயங்கவை அழைத்து முகாமையாளரைச் சந்திக்கச் சென்றார்.
அதன் போது வங்கி முகாமையாளர், சந்தன உதயங்கவுக்கு நன்றி தெரிவித்தார்.
சந்தன உதயங்க கூறியதாவது:
“பணத்தை வைப்புச் செய்ய வங்கிக்கு வந்தேன். பைக்கை நிறுத்தியதும் எனக்கு போன் வந்தது. நான் அழைப்பிற்கு பதிலளித்துக் கொண்டிருந்த போது, அருகில் பண மூட்டை கிடந்ததைக் கண்டேன். அதே சமயம் அதை மொபைல் போனில் போட்டோ எடுத்தேன். அது என் பாதுகாப்புக்காக. பின்னர், தூரத்தில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை அழைத்தேன். பின்னர், வங்கி அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. நான் பணத்தை வைப்பிலிட வரிசையில் சென்றபோது, அருகில் இருந்த தொழிலதிபர் என்ன நடந்தது என்று கேட்டார். சம்பவத்தை கூறியதும் மேலாளரிடம் அழைத்துச் சென்றார். பின்னர் மேலாளர் நன்றி கூறினார். நான் ப்ரோன்டோ கூரியரில் உதவி மேலாளராக பணிபுரிகிறேன். நான் செய்த நல்ல செயலால் அந்த தொழிலதிபர் என்னை புகைப்படம் கூட எடுத்தார்“ என்றார்.