நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மற்ற இடங்களில் சில இடங்களில் 50மிமீக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
கிழக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை நேரத்திலும் பனிமூட்டம் காணப்படும்.
இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.