காசா பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 50 முதல் 100 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் அகதிகள் முகாமின் மீது 6 குண்டுகள் வீசியது, ஒவ்வொன்றும் ஒரு டன் எடையுள்ள வெடிபொருட்கள் என்று காசா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 400 என மதிப்பிடப்பட்டுள்ளது.
விமான தாக்குதலை தொடர்ந்து முகாமில் உள்ள பல வீடுகளின் இடிபாடுகளில் இருந்து குறைந்தது 47 உடல்கள் மீட்கப்பட்டதை சம்பவ இடத்தில் இருந்து AFP வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.
AFP தொடர்பு கொண்டபோது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்கள் குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
முன்னதாக செவ்வாய்கிழமை, சுகாதார அமைச்சகம் ஒக்டோபர் 7 அன்று இஸ்ரேல் தனது குண்டுவீச்சு தாக்குதலை ஆரம்பித்ததில் இருந்து காஸாவில் 8,525 பேர் கொல்லப்பட்டதாகக் கூறியது.
காசாவில் இருந்து ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய சமூகங்கள் மற்றும் இராணுவ நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தியதில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலின் இராணுவம் செவ்வாயன்று காசாவின் ஜபாலியா அகதிகள் முகாமைத் தாக்கியதை உறுதிப்படுத்தியது, பாலஸ்தீனிய போராளிக் குழுவால் இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதலுடன் தொடர்புடைய ஒரு முக்கிய ஹமாஸ் தளபதியை இலக்கு வைத்த இந்த நடவடிக்கை வெற்றி பெற்றதாகக் கூறியது.
“காசா நகரத்தில் உள்ள பொதுமக்கள் கட்டிடங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த மத்திய [ஜபாலியா] பட்டாலியனுக்குச் சொந்தமான பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீதான பரந்த அளவிலான தாக்குதலின் ஒரு பகுதியாக அவரது ஒழிப்பு மேற்கொள்ளப்பட்டது” என்று இராணுவம் கூறியது.
ஹமாஸின் மத்திய ஜபாலியா பட்டாலியனின் தளபதி இப்ராஹிமை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
“அந்தப் பகுதியில் ஒரு மூத்த ஹமாஸ் தளபதி இருந்தார்” என்று இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கேணல் ரிச்சர்ட் ஹெக்ட் CNN இடம் கூறினார். “நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம், அங்கு என்ன நடந்தது என்பதை அறியும் போது மேலும் தரவுகளுடன் வெளிவருவோம்.”
அகதிகள் முகாமில் ஹமாஸ் தளபதிகள் இருந்தனர் என்ற கூற்றை ஹமாஸ் மறுத்துள்ளது.